விண்வெளியில் பிரிட்டன் செயற்கைக்கோளை நகர்த்தியது யார், எதற்காக? விடை தெரியாத மர்மம்

ஸ்கைநெட்-1ஏ

பட மூலாதாரம், BBC/Gerry Fletcher

  • எழுதியவர், ஜோனதன் அமோஸ்
  • பதவி, அறிவியல் செய்தியாளர்

பிரிட்டனின் மிகவும் பழமையான செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியில் வெகு தூரம் நகர்ந்துள்ளது. யாரால், எப்போது, எப்படி, ஏன் நகர்த்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

நிலவுக்கு மனிதன் அனுப்பப்பட்டு சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் ஸ்கைநெட் 1ஏ என்ற அந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 1969-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு மேலே, பிரிட்டன் துருப்புகளுக்கான தொலைதொடர்பு சேவைகளுக்காக இந்த செயற்கைகோள் நிறுவப்பட்டது.

சில ஆண்டுகளில் செயலிழந்த அந்த செயற்கைக்கோளை புவிஈர்ப்பு விசை மேலும் கிழக்கு நோக்கி இந்திய பெருங்கடலுக்கு மேலே நகர்த்தியிருக்க வேண்டும்.

ஆனால் இன்று, 2024-ல், ஸ்கைநெட்1ஏ செயற்கைக்கோளை, தான் இருந்த இடத்தில் இருந்து புவியின் பாதி சுற்றளவை கடந்து அமெரிக்காவுக்கு மேலே 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை கொண்டுள்ளது.

ஸ்கைநெட்-1ஏ

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

செயற்கைக்கோளை நகர்த்தி சதியா?

500 கிலோ கிராம் எடை கொண்ட ராணுவ செயற்கைக்கோள் தற்போது உள்ள இடத்திற்கு வருவதற்கான விண்வெளி இயற்பியல் சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை.

1970-ஆம் ஆண்டில், அதில் பொருத்தப்பட்டுள்ள குறை திறன் கொண்ட மோட்டார்களை இயக்கி (Thrusters) மேற்கு நோக்கி நகர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் யார் இந்த முயற்சியை மேற்கொண்டது? எந்த அதிகாரத்தின் கீழ்? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை.

ஒரு நாட்டின் பாதுகாப்பு அம்சம் குறித்த முக்கியமான தகவல் எப்படி யாருக்கும் தெரியாமல் போனது என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆச்சரியத்தை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், 50 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் குறித்து நாம் இப்போது பேச காரணம் என்ன என்றும் நீங்கள் கேட்கலாம்.

“இது இன்றும் கூட முக்கியமானது தான். யார் அதனை நகர்த்தி வைத்திருந்தாலும் அவர்கள் நமக்கு நன்மையே செய்திருக்கின்றனர்,” என்று கூறுகிறார் விண்வெளிசார் ஆலோசகர் முனைவர் ஸூவர்ட் ஈவ்ஸ்.

ஸ்கைநெட்-1ஏ

படக்குறிப்பு, லண்டனில் இருந்து சிங்கப்பூர் வரை உள்ள பிரிட்டன் துருப்புகளுடன் கலந்துரையாட இந்த செயற்கைக்கோள் பெரிய அளவில் உதவியது.

“ஒரு பாத்திரத்தில் போடப்பட்ட கூழாங்கல் போன்று முன்னும் பின்னும், 105 டிகிரி கோணத்தில் தீர்க்கரேகையில், கிராவிட்டி வெல் என்று அழைக்கப்படும் பகுதியில், மேற்கே சுழன்று கொண்டிருக்கிறது இந்த செயற்கைக் கோள். ஆனால் இதில் கவலை அளிக்கும் விவகாரம் என்னவென்றால் தொடர்ச்சியாக மற்ற செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை அருகே இது பயணித்துக் கொண்டிருக்கிறது. இது செயல்பாட்டில் இல்லை. ஆனால் மற்றொரு செயற்கைக்கோளுடன் மோதும் அபாயம் இதற்கு இருக்கிறது. இது நம்முடைய செயற்கைக்கோள் என்பதால் நாம் தான் இதற்கு முழு பொறுப்பு,” என்று கூறுகிறார் அவர்.

இந்த விவகாரம் குறித்து மேல் அதிக தகவல்களை அறிந்து கொள்ள பழைய செயற்கைக்கோள்களின் தகவல்கள் அடங்கிய புத்தகங்கள், தேசிய ஆவணக்காப்பகம், செயற்கைக்கோள் நிபுணர்கள் என பலரிடமும் பேசிப் பார்த்தும், செயலிழந்த பிரிட்டனின் பழைய செயற்கைக்கோள் எப்படி நகர்ந்து சென்றிருக்கக் கூடும் என்பது தொடர்பாக தகவல்கள் அவருக்கு ஏதும் கிடைக்கவில்லை.

நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத சூழலில் ஒன்றிரண்டு ‘சதிக்கான’ காரணங்களும் ஆங்காங்கே பேசப்பட்டு வருகிறது. இரண்டு காரணங்கள் இல்லை என்றாலும், தி டெர்மினேட்டர் படத்தில் பயன்படுத்தப்பட்ட, தீங்கு செய்யக் கூடிய, செயற்கை நுண்ணறிவு கொண்ட ‘ஸ்கைநெட்’ என்ற ஒரு சொல் போதும், இந்த நகர்வுக்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது என்று அனைவரும் சிந்திக்க.

ஆனால் படத்தில் காட்டப்பட்ட தீங்கிழைக்கும் அந்த வார்த்தைக்கும், இந்த செயற்கைக்கோளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில் இந்த செயற்கைக்கோள் சாதுவான ஒன்று.

ஸ்கைநெட்-1ஏ

பட மூலாதாரம், Sunnyvale Heritage Park Museum

படக்குறிப்பு, ஸ்கைநெட்1ஏ செயற்கைக் கோள், பிலிகோ ஃபோர்ட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

ஸ்கைநெட் 1ஏ பற்றி நமக்கு தெரிந்தது என்ன?

ஸ்கைநெட்1ஏ செயற்கைக் கோள், பிலிகோ ஃபோர்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. (அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை) அமெரிக்காவின் ஏர் ஃபோர்ஸ் டெல்டா ராக்கெட் மூலமாக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐந்தாம் தலைமுறையாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்கைநெட் திட்டத்தின் வரலாறு குறித்து சமீபத்தில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆரோன் பேட்மன் இது குறித்து மேலும் விவரிக்கிறார்.

“பிரிட்டனின் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த செயற்கைக்கோள். லண்டனில் இருந்து பாதுகாப்பாக, சிங்கப்பூர் வரை உள்ள பிரிட்டன் துருப்புகளுடன் கலந்துரையாட இந்த செயற்கைக்கோள் பெரிய அளவில் உதவியது. தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் பார்த்தால், பிரிட்டனின் செயற்கைக் கோள் என்றாலும் கூட அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவால் ஏவப்பட்ட செயற்கைக்கோள் இது,” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாம்ப்ஷயரில் உள்ள ஓக்ஹேங்கர் (Oakhanger) கிராமத்தில் செயல்பட்டு வந்த ராயல் ஏர் ஃபோர்ஸ் மையத்தில், 70களில் இந்த செயற்கைக்கோளை இயக்கி வந்த கிரஹாம் டேவிசன், ஆரோனின் கருத்தை ஆமோதிக்கிறார்.

“சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை கட்டுக்குள் வைத்திருந்தது அமெரிக்கா தான். செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டை அமெரிக்கா பிரிட்டனுக்கு தருவதற்கு முன், பிரிட்டனின் மென்பொருளை முழுமையாக பரிசோதனை செய்தனர்,” என்று கூறுகிறார் பல காலத்திற்கு முன்பு அங்கிருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர்.

“உண்மையில் இரட்டைக் கட்டுப்பாட்டை கொண்டிருந்தது அந்த செயற்கைக்கோள். ஆனால் எப்போது, ஏன் அந்த செயற்கைக்கோள் அமெரிக்காவிடம் தரப்பட்டது என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை,” என்கிறார் 80 வயதைக் கடந்த டேவிசன்.

ஸ்கைநெட்-1ஏ

பட மூலாதாரம், Astroscale

படக்குறிப்பு, விண்ணில் குப்பைகளாக தேங்கும் செயற்கைக்கோள்கள், அதன் உதிரி பாகங்களை பூமிக்குக் கொண்டு வரும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது

அமெரிக்காவிடம் கட்டுப்பாடு சென்றது எப்போது?

தேசிய ஆவணக் காப்பகத்தில், யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் படிக்கும் ரேச்சல் ஹில் என்ற பி.எச்.டி. மாணவியும் இது தொடர்பான தகவல்களை தேடி வருகிறார்.

அவரின் வாசிப்பு, இந்த செயற்கைக்கோள் நகர்ந்திருப்பதற்கான மற்றொரு சாத்தியத்தை வழங்குகிறது.

“பராமரிப்புப் பணிகளுக்காக ஓக்ஹேங்கர் மையம் மூடப்படும் போது ஸ்கைநெட் குழுவினர் சன்னிவேலேவில் அமைந்திருக்கும் யூ.எஸ்.ஏ.எஃப். செயற்கைக்கோள் மையத்திற்கு செல்வதுண்டு. ப்ளூ க்யூப் என்று அறியப்படும் அந்த மையத்திற்கு அந்த குழுவினர் செல்லும் போது அதன் கட்டுப்பாடு தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அப்போது இது நகர்த்தப்பட்டிருக்கலாம்,” என்கிறார் ரேச்சல்.

ஸ்கைநெட்டின் இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வமான பதிவுகள், முழுமையாக இல்லையென்றாலும் கூட, ஓக்ஹேங்கர் மையத்தில் உள்ள குழுவினரால் செயற்கைக்கோளை காண முடியவில்லை என்று 1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதன் கட்டுப்பாட்டை அமெரிக்காவுக்கு வழங்கியது என்று தெரிவிக்கிறது.

அதன் பிறகு தான் தற்போதைய இடத்திற்கு ஸ்கைநெட் 1ஏ இடம் பெயர்ந்திருக்கக் கூடும். “Orbital graveyard”என்ற இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக அது செயலிழந்தது.

ஆர்பிட்டல் கிரேவ்யார்ட் என்ற விண்ணியல் சார்ந்த வார்த்தை. விண்வெளியில் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதைகளில் இருந்து சற்று உயர்வாக இருக்கும் தூரத்தை குறிப்பதாகும். செயலிழந்த செயற்கைக்கோள்கள் இங்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. செயல்பாட்டில் இருக்கும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தடுக்கும் வகையில் செயலிழந்த செயற்கைக்கோள்கள் சற்று மேலே எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த செயல்முறையானது தற்போது பழக்கத்தில் இருக்கும் முக்கியமான ஓர் அம்சமாகும். ஆனால் 1970களில் விண்வெளியின் நிலைத்தன்மை குறித்து அதிகமாக யாரும் யோசித்திருக்கவில்லை.

ஸ்கைநெட்-1ஏ

பட மூலாதாரம், Northrop Grumman

படக்குறிப்பு, அமெரிக்காவும் சீனாவும் இதே ஸ்கைநெட் போன்று மிக அதிக உயரத்தில் சுற்றிவரும் செயலிழந்த செயற்கைக்கோள்களையும் நீக்க முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளன

அதிகப்படியான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விண்வெளியில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

105 டிகிரி மேற்கு தீர்க்க ரேகையில், செயல்பாட்டில் இருக்கும் ஒரு செயற்கைக்கோள் ஒரு பழைய, செயலிழந்த செயற்கைக்கோள் தன்னுடைய பாதையில் எதிர்நோக்கி வருகிறது என்பதை 50 கி.மீ தொலைவிலேயே அறிய முடியும்.

மிக அருகில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் இல்லை என்று தோன்றும். ஆனால் செயலிழந்த செயற்கைக்கோள்கள் பயணிக்கும் வேகம், இரண்டு செயற்கைக்கோள்களும் மிக அருகில் பயணிக்கும் அபாயத்தை கொண்டிருக்கும்.

பிரிட்டனின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஸ்கைநெட் 1ஏ- செயற்கைக்கோளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

மற்ற செயற்கைக்கோள்களுக்கு அருகே ஸ்கைநெட் பயணிக்கும் சூழல் ஏற்படும் போது, இதர விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு தகவல்கள் பரிமாறப்படுகிறது.

இருப்பினும், பிரிட்டன் அரசாங்கம் அந்த செயற்கைக்கோளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ஆலோசித்து வருகிறது.

விண்வெளியில் இருக்கும் செயற்கைகோள் குப்பைகளை அகற்றும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

ஏற்கனவே பிரிட்டனின் விண்வெளி முகமை குறைந்த உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் பயணிக்கும் செயலிழந்த செயற்கைக்கோள்களை அகற்ற நிதியை வழங்கி வருகிறது.

அமெரிக்காவும் சீனாவும் ஸ்கைநெட் போன்று மிக அதிக உயரத்தில் சுற்றிவரும் செயலிழந்த செயற்கைக்கோள்களையும் சுற்றுவட்டப்பாதையில் இருந்து வெளியேற்ற முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளன.

“செயலிழந்த செயற்கைக்கோள்களின் உதிரி பாகங்கள் மிகவும் ஆபத்தானவை,” என்கிறார் ஆஸ்டினில் இயங்கி வரும் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் விண்வெளித்துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் மோரிபா ஜா.

“சூப்பர்-ஸ்ப்ரெட்டர் என்று அழைக்கப்படும் நிகழ்வுகளை நாம் தவிர்க்க வேண்டும். ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும் போது செயற்கைக்கோள்கள் சுக்குநூறாக உடைந்து குப்பைகளாக விண்ணில் மிதக்கும். இது செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்,” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு