on Tuesday, November 19, 2024
அநுராதபுரத்தில் மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் யாத்ரீகர்களிடம் மருத்துவ உதவி போன்ற பல்வேறு காரணங்களை கூறி போலியாக யாசகம் பெற்ற ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய மத வழிப்பாட்டுத் தலங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் யாத்ரீகர்களைப் பின்தொடர்ந்து சென்ற இந்த ஆறு பெண்கள் உடமலுவ பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் கண் சத்திரசிகிச்சை, சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை மற்றும் இந்தியாவிற்கு புனித யாத்திரை செல்வது போன்ற காரணங்களை கூறி யாசகம் பெற்றுள்ளதாக உடமலுவ பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் தலைமைப் பரிசோதகர் டபிள்யூ.சி.எல்.ஆர்.பி.கே. வெத்தேவ தெரிவித்துள்ளார்.
இவர்கள் பணம் வழங்கும் வரை தங்களை தொந்தரவு செய்வதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 51 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட தேவநம்பிதிஸ்ஸ புர, பதுலகம, வெஸ்ஸகிரிய, திஸாவெவ, ஜயந்தி மாவத்தை மற்றும் கோரகஹவெவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக உடமலுவ பொலிஸார் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.