திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் மரணம் – யானைகள் கோபப்படுவது ஏன்? எவ்வாறு அணுக வேண்டும்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யானைக்கு தொடர்பில்லாத நபர் அதன் தும்பிக்கையை தொட்டதால் ஏற்பட்ட விபரீதம் இது’ என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
யானைகளுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திருச்செந்தூர் கோயில் பெண் யானையால் இரண்டு பேர் உயிரிழந்தது ஏன்? யானைகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் யானை தங்குவதற்கான குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திங்கள் (நவம்பர் 18) அன்று மதியம் சுமார் 3 மணியளவில் யானை தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அங்கு கோயிலின் பணியாளர்கள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது யானை பாகன் உதயகுமாரும் வேறு ஒரு நபரும் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்துள்ளனர். இருவரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயில் அர்ச்சகர் கூறியது என்ன?
“2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் கோயிலில் இருந்த பெண் யானை இறந்து போனதால், தக்காராக இருந்த தேவதாச சுந்தரம் தனது செலவில் இரண்டு யானைகளை வாங்கிக் கொடுத்தார். அதில் ஒன்று தான் தெய்வானை என்ற பெண் யானை” என்கிறார், கோயில் அர்ச்சகர் வினோத்.
“கடந்த 18 ஆண்டுகளில் ஒருமுறை கூட யாரிடமும் தெய்வானை (யானை) கோபத்தைக் காட்டியதில்லை” என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் வினோத்.
பாகன் உதயகுமாரின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளாக திருச்செந்தூர் கோயில் யானைகளைப் பராமரித்து வருவதாக கூறும் அர்ச்சகர் வினோத், “பாகனுடன் இறந்த சிசுபாலன் என்பவரும் உதயகுமாரின் உறவினர்தான். இவர்கள் குடும்பத்தில் பலரும் பாகன்களாக இருந்துள்ளனர்” என்கிறார்.
யானை கோபப்பட என்ன காரணம்?
கோயிலில் தெய்வானை யானையின் பராமரிப்புக்கு தலைமைப் பாகனாக ராதாகிருஷ்ணனும், பாகன்களாக செந்தில்குமார், உதயகுமார் ஆகியோர் இருந்துள்ளனர்.
திங்கள் அன்று மதியம் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் என்பவர், யானையின் குடிலுக்கு வந்துள்ளார்.
“செல்ஃபி எடுத்ததால் யானை கோபப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. சம்பவம் நடப்பதற்கு 2,3 நிமிடங்கள் வரை நின்று அவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவரை யானை ஒன்றும் செய்யவில்லை” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய திருச்செந்தூர் வனச்சரகர் கவின்.
“யானை தனது பாகன்களை மட்டும் அருகில் விடும். மூன்றாவது நபர் தன்னைத் தொடுவதை அது விரும்புவதில்லை. யானையின் தும்பிக்கையை சிசுபாலன் தனது கையால் தட்டியது தான் பிரதான காரணமாக உள்ளது. இது சி.சி.டி.வி காட்சியின் மூலம் தெரிய வந்தது” என்கிறார், வனச்சரகர் கவின்.
தொடர்ந்து பேசிய கவின், “யானைக்கு மூன்று பாகன்கள் உள்ளனர். திங்கள் அன்று ஒருவர்தான் அதன் உடன் இருந்துள்ளார். பொதுவாக, யானைக்கு உணவு கொடுக்கும் போது இரண்டு பேர் உடன் இருக்க வேண்டும்.
ஒருவர் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார். யானைக்கு கொடுக்க வேண்டிய உணவுக்கான நேரம் தள்ளிப் போயுள்ளது. அது கோபப்பட்டதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
கோயிலில் யானைப் பாகன் உள்பட இருவர் இறந்த பிறகு, பெண் யானையை அமைதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. “ஷவர் (குளியல்) கொடுத்த உடன் யானை சற்று அமைதியானது. நேற்று இரவு உணவை எடுத்துக் கொண்டது” என்கிறார் கவின்.
“கோயில் யானைகளை பொதுமக்கள் நேரடியாக அணுகவே கூடாது” எனக் கூறும் வனச்சரகர் கவின், “சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளைப் (Captive Animals) பராமரிப்பதற்கு தனி வரையறைகள் உள்ளன” என்கிறார்.
“வரும் நாட்களில் கோயில் யானைகளைப் பராமரிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” என்கிறார் வனச்சரகர் கவின்.
ரோபோ யானைகள் – மாற்றுத் தீர்வா?
அதேநேரம், “கோயில் யானைகளுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுவதில்லை” என்கிறார்,சூழலியல் ஆர்வலர் முகமது அலி.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின்போது நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டன.
இந்த முகாமுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயில் யானைகள் கொண்டு வரப்பட்டன. இங்கு மருத்துவ சிகிச்சைகள், உணவுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.
“கொரோனா காலத்துக்குப் பிறகு யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படவில்லை. ஓர் இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்குக் யானைகளைக் கூட்டிச் செல்வதைவிட அந்தந்த பகுதிகளில் அவற்றுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வு வழங்கலாம்” என்கிறார் முகமது அலி.
தொடர்ந்து பேசிய அவர், “உலகில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் என எதுவும் இல்லை. கோயில்களில் இருந்து யானைகளை விலக்கி வைப்பது தான் சரியானது” என்கிறார்.
கனடாவில் பணியாற்றும் சங்கீதா என்பவர், கூடலூரில் உள்ள சிவன் கோயிலுக்கு ரோபோ யானையை பரிசாக கொடுத்ததை சுட்டிக் காட்டிய முகமது அலி, “யானை செய்ய வேண்டிய பணிகளை ரோபோ யானை செய்கிறது. இதுபோன்ற முயற்சிகளை கோயில்களில் கொண்டு வரலாம்” என்கிறார்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதாக கூறுகிறார், அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.
பெயர் கூற விரும்பாமல் தமிழிடம் பேசிய அவர், “கோயில்களில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்காக மாவட்ட அளவில் கமிட்டி ஒன்று உள்ளது. அக்குழுவினர் ஒவ்வொரு காலகட்டத்திலும் கண்காணிக்கின்றனர். ஏதோ ஒரு கோபத்தில் திருச்செந்தூர் யானை இவ்வாறு செய்துவிட்டது” என்று மட்டும் பதில் அளித்தார்.
யானைகள் முகாம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் கூற விரும்பாத வனத்துறையின் உயர் அலுவலர் ஒருவர், “வருடத்துக்கு ஒருமுறை கோயில் யானைகளை காட்டுப் பகுதிகளுக்குக் கூட்டிச் சென்று புத்துணர்வு அளிக்கப்பட்டது. தற்போது அந்தந்த பகுதிகளில் அவை பராமரிக்கப்படுகின்றன” எனக் கூறினார்.
கோபம் வர என்ன காரணம்?
“யானைகளுக்கு கோபம் வருவதற்கு என்ன காரணம்?” என, நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த யானைப் பாகன் பொம்மனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“வெளி நபர்கள் தனது குடிலுக்குள் வரும்போது அவை கோபப்படும். பாகனின் வாசம் இல்லாமல் புது மனிதர்களின் வாசம் வீசுவதை அவை விரும்புவதில்லை” என்கிறார்.
“இதுபோன்ற நேரங்களில் யானை அதுவாகவே சாந்தமடையும்” எனக் கூறும் பொம்மன், “யானையின் குணம் எப்போது, எந்த நேரத்தில் மாறும் என்பதை சொல்ல முடியாது. அதனுடன் தொடர்ந்து பழகும்போதுதான் அதன் குணங்கள் தெரியும்” என்கிறார்.
“குறைந்தது ஆறு மாதங்கள் யானையுடன் இருந்தால் மட்டுமே பாகனை அது நன்றாக புரிந்து கொள்ளும். ‘நமக்கு நன்றாக சாப்பாடு தருகிறார்’ என்பதை உணர்ந்து கொள்ளும் போது பிணைப்பு அதிகமாகும்” என்கிறார் பொம்மன்.
யானை – பாகன் உறவு எப்படி?
“மனிதனைப் போலவே யானைக்கும் சில பண்புகள் உள்ளன. அது சமூக விலங்காக தாய், பெரியம்மா, சின்னம்மா, குட்டி யானை என்ற அமைப்பில் வாழ்பவை. ஆனால் அதைக் கோயிலில் தனிமைப்படுத்துகிறோம்” என்கிறார், யானை ஆய்வாளரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன்.
இந்து மத கலாசாரத்தில் கோயிலில் யானைகளைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளதாக கூறும் ராமகிருஷ்ணன், “யானைகளை பாகன்கள் தான் கவனிக்கின்றனர். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் பாகனிடம்தான் அவை பகிர்ந்து கொள்ளும்” என்கிறார்.
“யானையின் கால்களுக்கு அருகில் தூங்கும் பாகன்களும் உள்ளனர். பாகனின் தூக்கத்தைக் கெடுக்காமல் கால்களை அசைக்காமல் யானை நின்றபடியே இருக்கும். யானையை பாகன் எப்படி நடத்துகிறார் என்பதைப் பொருத்து இந்த உறவு நீடிக்கும்” என்கிறார், யானை ஆய்வாளர் ராமகிருஷ்ணன்.
“பெண் யானை கோபப்படுவதற்கு அது நடத்தப்பட்ட விதம் காரணமாக இருக்கலாம். திருச்செந்தூர் கோயில் யானை எந்தளவுக்கு மனஅழுத்தத்தில் இருந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.
தினசரி உணவுக்காக காடுகளில் 15 முதல் 20 கி.மீட்டர் வரையில் நடந்து 150 முதல் 200 கிலோ வரையிலான பசுந் தாவரங்களை உண்டு வாழும் யானைகள், கோயிலில் ஒரே இடத்தில் நிற்க வைக்கப்படுவதாக கூறுகிறார், ராமகிருஷ்ணன்.
“இதற்கு மாற்றாக, கோயில் யானைகளை தினசரி 2 கி.மீட்டர் தூரம் நடக்க வைக்க வேண்டும். உணவாக அரிசி சாதம் மட்டும் கொடுக்காமல் கேழ்வரகு, கொள்ளு, கரும்பு, வெள்ளம், அரிசி ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். அவற்றுக்கான உணவு முறைகளில் மாற்றம் வரவேண்டும்” எனவும் அவர் கூறுகிறார்.
“யானைக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால் அது பாகன்களின் வார்த்தைக்குக் கட்டுப்படாது; கீழ்படிய மறுக்கும். அதை சமாதானப்படுத்துவதற்கு ஒரே வழி ஓய்வு கொடுப்பதுதான். நல்ல சூழலில் ஓய்வெடுக்க வைத்தால் ஒரு மணிநேரத்தில் யானை அமைதியாகிவிடும்” என்கிறார் ராமகிருஷ்ணன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.