மனைவி செல்போனை அனுமதி பெறாமல் கணவர் பார்க்கலாமா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்

தீர்ப்பில் என்ன உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர்நீதிமன்ற தீர்ப்பில், ‘தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. இந்த உரிமையை இன்னொருவர் ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (சித்தரிப்பு படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

குடும்ப உறவில் மனைவிக்கு எனத் தனியுரிமை உண்டு என்பதையும் மனைவியின் தனியுரிமையில் தலையிட கணவருக்கு அதிகாரம் இல்லை என்பதையும் நிலை நிறுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு இருப்பதாக மாதர் சங்கங்கள் வரவேற்கின்றன.

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ‘மனைவியின் தனி உரிமையில் தலையிட கணவருக்கு அதிகாரம் இல்லை’ எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு, விவாகரத்து வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

கணவன், மனைவி உறவில் தனியுரிமை தொடர்பாக நீதிமன்றம் கூறியது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் மனுவில், மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, அதற்கான ஆதாரமாக மனைவியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புப் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஆவணங்களை நிராகரிக்குமாறு பரமக்குடி நீதிமன்றத்தில் மனைவி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அதை பரமக்குடி நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பட மூலாதாரம், https://hcmadras.tn.gov.in/

படக்குறிப்பு, ‘மனைவியின் தனி உரிமையில் தலையிட கணவருக்கு அதிகாரம் இல்லை’ என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது

உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ‘தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. இந்த உரிமையை இன்னொருவர் ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மேலும், தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதன் வாயிலாகப் பெறப்பட்ட சாட்சியங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை” எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ஆதாரங்கள் செல்லுமா?

ஜி.ஆர்.சுவாமிநாதன்

பட மூலாதாரம், hcmadras.tn.gov.in

படக்குறிப்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கின் விசாரணையில், கணவர் தரப்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

“இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872-இன்படி இந்த வழக்கை நடத்தாமல் ஜூலை 1, 2024 அன்று அமலுக்கு வந்த பி.எஸ்.ஏ (Bharatiya Sakshya Adhiniyam) சட்டப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்பான சில தகவல்களையும் நீதிபதி பட்டியலிட்டார்.

பி.எஸ்.ஏ 2023 சட்டத்தின் பிரிவு 63, பிரிவு 39 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 79 (ஏ) ஆகியவற்றைப் படித்த பிறகு, எந்தவொரு மின்னணு பதிவையும் ஒருவர் தாக்கல் செய்யும் போது அதுதொடர்பாக நிபுணர் குழுவின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

எந்த நபர் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளதோ, அந்த நபரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும் எனவும் புதிய சட்டப்பிரிவு கூறுவதாக நீதிபதி சுட்டிக் காட்டினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் அளித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் அத்தகைய நிபுணர் என ஒருவர் கூட இல்லை எனக் கூறுவது ஆச்சர்யம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

இது ஒருவர் நீதியைப் பெறுவதற்கான நம்பிக்கையை இழக்க வைப்பதாகக் கூறிய நீதிபதி, “மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் போதிய நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டும்” என மத்திய அரசின் எலக்ட்ரானிக் துறைக்கு உத்தரவிட்டார்.

‘சட்ட அங்கீகாரம் இல்லை’

கணவன், மனைவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கணவன், மனைவியாக இருந்தாலும் அவர்களுக்கான தனி உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது (சித்தரிப்பு படம்)

அடுத்து, மனைவியின் தனி உரிமை குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, “மனைவி தொடர்பான தரவுகளை கணவர் திருட்டுத்தனமாக எடுத்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அந்த செல்போன் மற்றும் சிம்கார்டின் உரிமையாளராக கணவர் இல்லை. ஏதோ சிறிது கால இடைவெளியில் அந்த மொபைல் போன் அந்த நபர் வசம் இருந்துள்ளது. இதில் மனைவியின் தனி உரிமை மீறப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

“கணவன், மனைவியாக இருந்தாலும் அவர்களுக்கான தனி உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தனி உரிமையை மீறுவதன் மூலம் பெறப்பட்ட சான்றுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், தனி உரிமை தொடர்பாக கேட்ஸ் மற்றும் அமெரிக்க அரசு (Katz v. United States) இடையிலான வழக்கு உள்பட வெளிநாட்டு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.

அடுத்து துருக்கியை சேர்ந்த டாக்டர் நாதிர் (Dr.Nadire Ozdemir) எழுதிய ஆராய்ச்சி கட்டுரையான, திருமண உறவில் தனி உரிமை (My Diary is Your Diary : The Right to Privacy in a Marriage) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை விவரித்த நீதிபதி, “கணவன்-மனைவி என இருவருக்கும் தனி உரிமை வரையறைகளை மீறுவதற்கான உரிமை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஆதார் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி புட்டசாமி தொடர்ந்த வழக்கில், தனி உரிமையை மீறப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இந்த வழக்கில் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

டைரி – மொபைல் போன் ஒப்பீடு

வேவு (Snoop) பார்ப்பது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரை வேவு (Snoop) பார்ப்பது என்பது திருமண வாழ்க்கையின் கட்டமைப்பை அழிக்கிறது எனத் தீர்ப்பு கூறுகிறது (சித்தரிப்பு படம்)

நம்பிக்கையே திருமண உறவுகளின் அடித்தளமாக அமைவதாக தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், “வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் என வரும் போது அவர்களுக்கென சுயமான அதிகாரம் உள்ளது. அவர்களின் தனி உரிமைக்குள் யாரும் தலையிட முடியாது” என்கிறார்.

“ஒருவரை வேவு பார்ப்பது என்பது திருமண வாழ்க்கையின் கட்டமைப்பை அழிக்கிறது. தனது எண்ணங்களைப் பதிவு செய்வதற்கு மனைவி டைரி எழுதுகிறார். அதை தன் அனுமதி இல்லாமல் கணவர் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பதே சரியானது. இது மொபைல் போனுக்கும் பொருந்தும்” எனத் தீர்ப்பு கூறுகிறது.

“மனைவி மீது தவறு இருந்தால் தனி உரிமையை மீறாமல் மாற்று வழிகளில் அதனை நிரூபிக்க முடியும்” எனக் குறிப்பிட்ட நீதிபதி, “பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு அழைக்கலாம். அதில் தவறான தகவல்கள் இருந்தால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்” எனக் கூறுகிறார்.

தனி உரிமைக்கான வரையறை என்ன?

சத்திய சந்திரன்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன்

ஆனால், இந்த தீர்ப்பை முரண்பாடான ஒன்றாக பார்ப்பதாக கூறும், மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன், “தனி உரிமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முக்கியம்” என்கிறார்

இந்த வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட சில நாடுகளின் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய சத்திய சந்திரன், “வெளிநாடுகளில் மட்டும் தான் சேர்ந்து இருக்கும் வரையில் உண்மையாக இருப்போம். இல்லாவிட்டால் பிரிந்துவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இங்கு பிடிக்காவிட்டாலும் இணைந்து வாழும் சூழல் தான் உள்ளது” என்றார்.

“செல்போன் அழைப்பு பட்டியலில் யார் யாரிடம் பேசினார்கள் என்ற விவரம் இருக்கும். திருமணமான ஒருவர், இரவு நேரங்களில் ஒருமுறை பேசினால் தவறு இல்லை. தொடர்ந்து அவர் இரவு நேரங்களில் யாரோ ஒருவரிடம் பேசி வருவதை எப்படி எடுத்துக் கொள்வது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“ஒருவர் யாரிடம் பேசினார் என்று தகவலை சேகரிப்பது ஒன்றும் ரகசிய ஆவணம் அல்ல” எனக் கூறும் சத்திய சந்திரன், “இந்த வழக்கை டைரியுடன் ஒப்பிட்டு நீதிபதி கூறியுள்ளார். கணவரின் கொடுமையை டைரியில் எழுதி வைத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதை மரண வாக்குமூலம் என்கின்றனர். இது தனி உரிமை என்ற வரையறைக்குள் வருவதில்லை” என்கிறார்.

செல்போன் அழைப்புப் பட்டியல் குறித்துப் பேசிய சத்தியசந்திரன், “இதை டெலிபோன் ஆபரேட்டர்கள் பராமரிப்பார்கள். காவல்துறையை தவிர்த்து மூன்றாவது நபருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அதை வாங்குவது சட்டவிரோதம் தான். ஆனால், விவகாரத்து தொடர்பான வழக்குகளில் வேறு எந்த வகையில் நிரூபிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

“ஒருவரிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து பதில்களைப் பெறலாம் என நீதிபதி கூறுகிறார். அதன் மூலம் உண்மையைக் கண்டறிய வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.

இந்தியாவில் உள்ள சட்டங்களே பெண்களுக்கு அதிக பாதுகாப்பைக் கொடுப்பதாக கூறும் சத்திய சந்திரன், “கணவர் கொடுமைப்படுத்துவதாக தவறான புகார் கொடுப்பது அதிகரித்துவிட்டதாக பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்கிறார்.

“பெண்களுக்கு எதிராக வழக்குப் போட்டு வெற்றி பெறுவது சிரமமான ஒன்று. நியாயமான வழக்காக இருந்தாலும் ஆண்களுக்குத் தான் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன” என்கிறார் சத்திய சந்திரன்.

மாதர் சங்கம் சொல்வது என்ன?

உ.வாசுகி

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி

இந்தக் கருத்தில் மாறுபட்டு, பிபிசி தமிழிடம் பேசிய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி, “ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்களுக்குத் தான் கூடுதல் பிரச்னைகள் வருகின்றன. மனைவிக்கு தனி உரிமை எனக் கூறுவதை 90 சதவீதம் பேரால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்கிறார்.

தீர்ப்பு குறித்துப் பேசிய உ.வாசுகி, “மனைவிக்கு தனி உரிமை உண்டு என்பதை இந்த தீர்ப்பு நிலை நிறுத்துகிறது. அந்தவகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

மனைவிக்கு தெரியாமல் அவரது போன் மற்றும் சிம்கார்டைப் பயன்படுத்தி அழைப்புப் பட்டியலைப் பெற்றதால் பிரைவசி மீறப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமையை மீறுவதாக தீர்ப்பு கூறுகிறது.

இருவரும் சேர்ந்து வாழ்கிற திருமண வாழ்க்கை உடன் (shared matrimonial life) அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது எனத் தீர்ப்பு சுட்டிக் காட்டுகிறது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய உ.வாசுகி, “மனைவியின் செல்போன் அழைப்பு பட்டியலை விவாகரத்துக்கான சாட்சியமாக கணவர் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். இந்த சாட்சியம் ஏற்கத்தக்கதல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு சில குறிப்பான காரணங்களை ஆதாரமாக இந்த தீர்ப்பு முன்வைக்கிறது. இன்றுள்ள சமூக அமைப்பில் திருமணம் நடந்துவிட்டாலே கணவன், மனைவி இருவரும் ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாகிவிடுவது, அவரவர் தனித்தன்மையை விட்டு விடுவது என்ற அளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.

வெப்பத்தில் உலோகம் உருகி தன்னுடைய வடிவத்தை இழந்துவிடுவதைப் போன்று தம்பதிகள், ஐக்கியமாக வேண்டிய தேவையில்லை. மாறாக, அவரவர் தனித்துவம், தனித்தன்மையை இழந்துவிடாமல் கூட்டு வாழ்க்கை வாழ்கிற முறை தான் தேவை” என்கிறார்.

“தன்னுடைய சம்பள கவரை கணவனிடம் மனைவி கொடுத்துவிட வேண்டும். யாருடன் பேசுகிறார் என்பதை கணவனுக்கு தெரிவிக்க வேண்டும். பெற்றோர் வீட்டுக்குப் போவதற்குக் கூட அனுமதி வாங்க வேண்டும். பெற்றோர் குடும்பத்துக்கு உதவி செய்யக் கூடாது என்கிற நடைமுறை இன்னமும் பல குடும்பங்களில் உள்ளது” என்கிறார் உ.வாசுகி.

அதேநேரம், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை நியாயப்படுத்துவதாக இதைப் பார்க்கக் கூடாது எனக் கூறும் உ.வாசுகி, “ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்து தான் கருத்து கூற முடியும். இந்த வழக்கில் தனி உரிமை தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.