இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டதுதான் முக்கிய விவகாரம்.
ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய முக்கிய பிரமுகர் ஒருவர், அந்தக் கூட்டத்தின் முக்கிய விடயம் அதுவல்ல, அந்த எம்.பி. பதவியை எப்படியும் தனக்குத் தாருங்கள் என்று விடாமல் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜாவின் பரிதாப நிலைதான் முக்கியமான அம்சம் என்று குறிப்பிட்டார்.
நேற்றுக் கூட்டம் தொடங்கிய போது தமக்கு 2 வருடங்களுக்காவது அந்தப் பதவியை தாருங்கள் என்று கெஞ்சத் தொடங்கினார் மாவை சேனாதி ராஜா. ஒரு கட்டத்தில், இப்போதைய அரசியல் நிலைமை கருதி புதிய அரசமைப்பு உருவாக்க விடயங்களை கவனிப்பதற்காக அந்த தேசியப் பட்டியல் மூலம் சுமந்திரனே நாடாளு மன்றம் செல்ல வேண்டுமென்று சிறிதரன் தவிர்த்த ஏனைய எல்லோரும் வலியுறுத்திய போது, அந்த சமயத்திலும் மாவை குறுக்கிட்டார்.
“எனக்கு முதலில் அந்தப் பதவியைத் தாருங்கள். அப்படி அரசமைப்பு விவகார விடயம் நாடாளுமன்றுக்கு வரும் போது நான் உடனே ராஜினாமாச் செய்து சுமந்திரனுக்கு அந்த இடத்தை அளிப்பேன்’’ – என்றும் கூட கோருவதற்கு மாவை தவறவில்லை.
ஆரம்பத்தில் மாவையும், கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகமும் அப்பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரினர்.
ஆயினும் எழுபது வயதுக்கு மேல் இந்தப் பதவியைக் கோருவது சரியல்ல என்று குறிப்பிட்ட சி.வி.கே. சிவஞானம், மாவை சேனாதிராஜாவும் குலநாயகமும் 80 வயது தாண்டிய பின்னர் இந்தப் பதவியைக் கோருவது தார்மீகமாகாது என்று சுட்டிக் காட்டினார்.
அந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்ட குலநாயகம், அக்கருத்தின் அடிப்படையில் தான் அப்பதவியை தமக்கு வழங்குமாறு கோருவதில் இருந்து விலகிக் கொள்கின்றார் என அறிவித்தார்.
ஆனால் மாவை சேனாதிராஜா விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. கடைசியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து சத்தியலிங்கத்திற்கு அப்பதவியை கொடுப்பது என்ற தீர்மானத்தை எடுத்த போது கூட அதற்கு
மாவையிடம் இருந்து ஒப்புதல் கிடைக்க வில்லை.
சத்தியலிங்கத்துக்கு அப்பதவியை வழங்கும் முடிவை ஏகமனதாக எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்திய பின்னரே, அப்படி சத்தியலிங்கத்திற்கு அதனை வழங்குவதற்கு விருப்பமின்றி தலையசைத்தார் மாவை சேனாதிராஜா.
கூட்டத்தில் பங்கு பற்றிய மாவை சேனாதிராஜா, சிறிதரன், குகதாசன் ஆகிய மூவரும் இந்தப் பதவி சுமந்திரனுக்கு வழங்கப்படுவதை ஆதரிக்கவில்லை. ஏனையோர் அனைவரும் இப்ப பதவியை சுமந்திரன் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்.
இந்தப் பதவியை மாவை சேனாதி ராஜாவுக்கு ஒரு வருடமும் பின்னர் குலநாயகத்துக்கு ஒரு வருடமும் கொடுக்கலா மென்று யோசனையை முன்வைத்த சிறிதரன், அரசமைப்பு உருவாக்க விடயங்களுக்கு சுமந்திரனின் பங்களிப்பு அவசியம்தான், ஆனால் அதனை அவர் எம்பியாக இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அல்ல, வெளியில் இருந்தும் செய்யலாமென்று தெரிவித்தார்.
குகதாசன் ஆரம்பத்தில் இந்தத் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி ஒரு பெண் பிரதிநிதிக்கு வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆயினும் பின்னர் ஏனையோர் அந்தப் பதவியை சத்தியலிங்கத்துக்கு வழங்கும் முடிவை எடுத்த போது அதற்கு தமது இசைவைத் தெரிவித்தார்.
மாவை சேனாதிராஜாவோ, அந்தப் பதவி கடைசி வரை தனக்கே வழங்கப் பட வேண்டும் என்ற வலியுறுத்த லோடு நின்றார்.
கடைசியாகக் கருத்து வெளியிட்ட சுமந்திரன், தாம் நாடாளுமன்றுக்கு வெளியில் இருந்து ஆற்றிய பணிகளுக்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழரசு கட்சி தனக்கு முன்னர் வழங்கியது என்பதை சுட்டிக் காட்டியமையுடன், இனிமேலும் நாடாளுமன்றுக்கு வெளியில் இருந்து, அந்த விடயங்களை தொய்ய விடாமல் தான் கவனிப்பார் என்று உறுதி அளித்தார்.
சிறிதரன் சுட்டிக் காட்டியமை போல அரசமைப்பு உருவாக்க விடயங்களுக்கு தாம் நாடாளுமன்றத் துக்குள் இருந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறிய சுமந்திரன், ஆகவே மக்கள் தெரிவு மூலம் நாடாளுமன்றுக்கு செல்லாமல், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தாம் செல்ல விரும்பவில்லை என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரே கட்சியின் பேச்சாளராக இருப்பதும் பொருத்தமானது என்று குறிப்பிட்ட சுமந்திரன், அத்தகைய ஒரு வரை அரசியல் குழுவோ, நாடாளுமன்ற குழுவோ தெரிவு செய்ய வேண்டும் என்பதோடு, அத்தகைய தெரிவை அடுத்துத் தான் கட்சிப் பேச்சாளர் பதவியை விட்டு விலகத் தயார் என்றும் அறிவித்தார்.
ஆயினும் சுமந்திரன் அப்படிப் பதவி விலகுவதை ஏற்றுக்கொள்ளாத சிறிதரன் அவர் தொடர்ந்தும் கட்சியின் பேச்சாளராக விளங்கட்டும், நாடாளுமன்றக் குழு அக்குழுவின் பேச்சாளராக ஒரு வரை தனக்குள் கூடி முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார்.
நேற்று இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சுமந்திரன் கொழும்பு விரைந்தார். குருந்தூர்மலை விவகாரத்தை ஒட்டித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று காலை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருப்பதால் அதன் மீதான விவாதத்தில் பங்குபற்றுவதற்காகவே சுமந்திரன் கொழும்பு விரைந்தார்.
சிறிதரனும், சார்ள்ஸ் நிர்மலநாதனும் இந்தக் குருந்தூர் மலை வழிபாட்டு உரிமை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுவின் மனுதாரர்கள். அவர்கள் இருவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதிடவே சுமந்திரன் நேற்று கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை
முடித்துக் கொண்டு அவசர அவசரமாக கொழும்பு விரைந்தார்.
அரசியல் குழப்பங்கள், களேபரங்கள் எப்படி இருந்தாலும், தம்முடைய சட்டத் துறை ஒத்துழைப்பு கட்சிக்கும் தமிழ் தேசியத்தின் அடிப்படை நடவடிக்கை களுக்கும் எப்போதும் இருக்கும் என்று சுமந்திரன் அந்த கூட்டத்தில் தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது.