அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் – அணுசக்தி கொள்கையில் முக்கிய மாற்றம் செய்த புதின்
- எழுதியவர், மியா டேவிஸ்
- பதவி, பிபிசி செய்தி
-
அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி யுக்ரேன் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கொடுத்த நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கிய அடுத்த நாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இன்று காலை ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை(ATACMS) பயன்படுத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் ஆங்கிலத்தில் Army tactical missile system (ATACMS) என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஏவுகணைகள் 300 கி.மீ வரை (186 மைல்கள்) பயணித்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
ஐந்து ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்று சேதமடைந்தது. மேலும் அதன் உதிரி பாகங்கள் பிராந்தியத்தில் உள்ள ஒரு ராணுவ வளாகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் 03:25 (00:25 GMT) மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஏவுகணை ஒன்றில் இருந்து சிதறிய உதிரி பாகங்களால் ஏற்பட்ட தீ விரைவில் அணைக்கப்பட்டு, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய பிராந்தியத்தில் நீண்ட தூர ஏவுகணைகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
யுக்ரேனிய ராணுவம் ரஷ்ய பிராந்தியமான பிரையன்ஸ்கில் உள்ள வெடிப்பொருட்கள் கிடங்கைத் தாக்கியதை உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த தாக்குதலுக்கு நீண்ட தூர ஏவுகணை (ATACMS) பயன்படுத்தப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள யுக்ரேனிய பிராந்தியங்களில் உள்ள ரஷ்ய துருப்புகளை இலக்காக வைத்து, யுக்ரேன் இந்த நீண்ட தூர ஏவுகணைகளை(ATACMS) ஓராண்டுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறது.
யுக்ரேனிய படைகள் 1,000 சதுர கிமீ நிலப்பரப்பை கைப்பற்றி வைத்திருக்கும் குர்ஸ்க் பகுதியைச் சுற்றிலும், ரஷ்யாவின் உட்பகுதியிலும் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேனால் தாக்குதல் நடத்த முடியும். இதற்கிடையே இந்த பகுதியில் பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என யுக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அணுசக்தி கொள்கையில் மாற்றம்
இதற்கிடையே, ரஷ்ய அணுசக்தி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இது ரஷ்யா அணு ஆயுதத்தைப் எப்போது பயன்படுத்தலாம் என முடிவு செய்வதற்கு புதிய நிபந்தனைகளை வழங்குகின்றது.
அணுசக்தி இல்லாத நாட்டின் தாக்குதலின் பின்னணியில், அணுசக்தி கொண்ட நாடு இருந்தால் அது ரஷ்யா மீதான கூட்டுத் தாக்குதலாகக் கருதப்படும் என்று அந்த கொள்கை இப்போது கூறுகிறது.
இந்த மாற்றம் செப்டம்பர் மாதம் முன்மொழியப்பட்டது. யுக்ரேனுடனான போரின் 1000வது நாளான செவ்வாய் அன்று இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் கீழ், வழக்கமான ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது விமானங்கள் மூலம் ரஷ்யா மீது நடத்தப்படும் தாக்குதல், அணுசக்தி மூலம் பதிலளிப்பதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யும். பெலாரூஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஏதேனும் முக்கியமான அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அணுசக்தியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டின் தாக்குதல் முழு குழுவிலிருந்தும் வரும் தாக்குதலாக ரஷ்யாவால் பார்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதின் இதற்கு முன்பும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அச்சுறுத்தியுள்ளார். அந்த சமயத்தில் யுக்ரேன் தனது கூட்டாளிகள் வழங்கும் ஆதரவைத் தடுக்கும் செயல்பாடு என்று விமர்சித்தது.
அணுசக்தி கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அறிவித்த ரஷ்யா, மற்ற நாடுகளை இது குறித்து ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.