ரவி செனவிரத்னவின் மனு நிராகரிப்பு !

by wp_fhdn

ரவி செனவிரத்னவின் மனு நிராகரிப்பு ! on Monday, November 18, 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.

வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாம் விளக்கமறியலில் வைக்கப்பட்டதான் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது பூர்வாங்க ஆட்சேபனையை எழுப்பிய பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திஸ்னா வர்ணகுல, இந்த மனு உயர் நீதிமன்ற விதிகளுக்கு அமைவாக தாக்கல் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த மனுவை பராமரிக்க முடியாது என்றும் வாதிட்டார்.

சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற அமர்வு, எதிர்மனுதாரரின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் தாம் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக ரவி செனவிரத்ன தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிணையில் விடுவிக்க சட்டத்தில் இடமிருந்த போதும் தம்மை விளக்கமறியலில் வைத்ததன் மூலம் பொலிஸார் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்