மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் களத்தில் முந்துவது யார்? பரப்புரை இன்றுடன் ஓய்வு

மகாராஷ்டி சட்டமன்ற தேர்தல்

  • எழுதியவர், ஆஷய் யெட்கே
  • பதவி, பிபிசி மராத்தி நிருபர்

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (MAVIA) கூட்டணியில் களம் காண்கின்றன.

மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன.

இந்த தேர்தலில் எந்த செயல் திட்டம் செயல்படும்? சாதி சமன்பாடுகள் கைகொடுக்குமா? மராத்வாடாவில் என்ன நடக்கும்? விதர்பாவில் முன்னிலை பெறப் போவது யார்? மும்பையை வெல்லப் போவது யார்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு தற்போது செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் யூகங்கள் வெளிவருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி வெற்றிப் பெற்றது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலிலும் அதே வெற்றியை மீண்டும் பெறலாம் என்று பல அரசியல் வல்லுநர்கள் நம்பினர்.

ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி அரசு, மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறது.

இந்தக் காரணங்களால் முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேர்தல் களம் உண்மையில் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை அறிய பிபிசி மராத்தி, மகாராஷ்டிராவின் முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசியது. மூத்த அரசியல் ஆய்வாளர் முனைவர் சுஹாஸ் பால்ஷிகர், பிரகாஷ் பவார், லோக்சத்தா ஆசிரியர் கிரிஷ் குபேர், மூத்த பத்திரிகையாளர்கள் நிகில் வாக்லே மற்றும் ராஹி பிடே ஆகியோரிடம் பிபிசி மராத்தி பேசியது

சட்டமன்றத் தேர்தல் பற்றி இந்த நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள்?

முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும்? தற்போது தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்துவது யார்? போன்ற பல கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் விடை காண முயற்சித்துள்ளோம்.

மகாராஷ்டி சட்டமன்ற தேர்தல்

படக்குறிப்பு, நிகில் வாக்லே, சுஹாஸ் பால்ஷிகர், ராஹி பிடே, கிரிஷ் குபேர், பிரகாஷ் பவார் (இடமிருந்து வலமாக)

பெரும்பான்மை கிடைக்குமா?

மூத்த அரசியல் ஆய்வாளர் முனைவர். சுஹாஸ் பால்ஷிகர் கூறுகையில், “2014-க்கு பிறகு மகாராஷ்டிராவில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்தது. எனவே இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி பெரிய கட்சியாக உருவெடுக்க தீவிரமாக முயற்சிக்கும். அதேபோல் தற்போது இருக்கும் அதே கூட்டணி அரசியல், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு தொடர சாத்தியம் உள்ளது”

“மூன்றாவது சாத்தியம் என்னவெனில், மாநிலத்தில் பல சிறிய கட்சிகள் உருவாகியுள்ளன. எனவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஒரு பெரிய கட்சி மற்றும் இந்த சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கலாம்.” என்று விளக்கினார்.

இந்தத் தேர்தலில் எந்தெந்தப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு பால்ஷிகர், “பொருளாதாரத்தைப் பார்க்கையில், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் உள்ளன. மகாராஷ்டிராவில் விவசாயத் துறையின் அவலநிலை கிராமப்புறங்களை மட்டுமின்றி, நகர்ப்புறங்களையும் பாதிக்கிறது.” என்றார்.

பால்ஷிகர் மேலும் கூறுகையில், “விவசாயத்தில் வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயரும் மக்களால் நகரங்கள் விரிவடைந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் மாநிலத்திற்குள்ளாக நடக்கும் இடம்பெயர்வு (in-migration) உயர்ந்துள்ளது. எனவே, நகரத்திலும் விவசாயத்தின் வீழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் வரலாறு காணாதக் குழப்பம், என்ன நடக்கிறது?

படக்குறிப்பு, முனைவர். சுஹாஸ் பால்ஷிகர்

“மராட்டிய சமூகம் என்ன செய்யப் போகிறது என்பது மூன்றாவது பெரிய பிரச்னை. நான்காவது பிரச்னை கட்சிகளின் கூட்டணி எப்படி இருக்கும் என்பது தான். அவர்களின் சமன்பாடு எப்படி இருக்கும், அவர்களின் வாக்குகள் எப்படி வேட்பாளர்களுக்கு மாற்றப்படும். ஒரு கட்சியின் வாக்காளர்கள் கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சிக்கு வாக்களிப்பார்களா? போன்ற கேள்விகள் எழுகிறது” என்றார்.

முனைவர் பால்ஷிகர் பேசுகையில், “மக்கள் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசினாலும், அவர்களின் முக்கிய பிரச்னை வாழ்வாதார பிரச்னை தான். சமீபக் காலங்களில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவர்களது மனதில் இருக்கும்.”

“எனவே பாஜக, ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மக்கள் மனதில் இருக்கும் இந்த வெறுப்பை உணர்வார்கள் என்று நான் நினைக்கிறேன். பல்வேறு நலத்திட்டங்களின் அறிவிப்புகளைப் பார்க்கையில், கட்சிகள் மக்களின் கோபமான மனநிலையை புரிந்து கொண்டார்கள் என்பது தெரிகிறது”

இந்த எல்லாப் பிரச்னைகளின் அடிப்படையிலும், தேர்தல் யார் பக்கம் இருக்கும் என்றக் கேள்விக்குப் பதிலளித்த பால்ஷிகர், “தற்போது மக்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவாகச் சாய்ந்ததாகத் தெரியவில்லை. மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் பெற்ற வாக்குகளுக்கும் இடையே ஒரு சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. இம்முறை இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவும். பெரியளவில் வாக்கு வித்தியாசம் இருக்காது” என்றார்.

`முடிவை யூகிக்க முடியாது’

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் வரலாறு காணாதக் குழப்பம், என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு, கிரிஷ் குபேர்

சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய `லோக்சத்தா’ ஆசிரியர் கிரிஷ் குபேர், “இந்த தேர்தல் வரலாற்று ரீதியாக மிகவும் சிக்கலானதாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 6-7 செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்தத் தேர்தலை யாராலும் கணிக்க முடியாது” என்று அவர் கருதுகிறார்.

மகாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடி இடையே நிலவும் உட்கட்சி போட்டி குறித்து குபேர் கூறுகையில், “மகாராஷ்டிரா அரசியலில் முதல்முறையாக, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது சொந்தக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை விட தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் தோல்வியே முக்கியம் என்று நினைக்க ஆரம்பித்துள்ளது. “

“பா.ஜ.க.வுக்கும், அஜித் பவாருக்கும் இதே நிலை தான். பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கக் கூடாது என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கருதுகிறார். எனவே, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடிக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து பேசிய குபேர், “சோயாபீன்ஸ், கரும்பு, பருத்தி, வெங்காயம் விலைவாசி தொடர்பான பிரச்னைகள் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறலாம். இந்த பயிர்களை பயிரிடும் விவசாயிகளின் பிரச்னைகள் இந்த தேர்தல் முடிவை பாதிக்க சாத்தியங்கள் உள்ளன” என்றார்.

“இது தவிர, மாநிலம் முழுவதும் நிலவும் மராத்தா – ஒபிசி பிரச்னையும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

குபேர் கூறுகையில், “கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் மற்றொரு முக்கியப் பிரச்னை அதிகரித்து வரும் நகரமயமாக்கல். அதனால் ஏற்படும் வேலை வாய்ப்பின்மை சூழல்” என்றார்.

“மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளாக புதிய தொழிற்சாலை எதுவும் தொடங்கப்படவில்லை. மகாராஷ்டிராவின் கவனம் சேவைத் துறையில் (service sector) உள்ளது. ஆனால் சேவைத் துறையில் இருக்கும் பலரின் வேலைவாய்ப்பு நிரந்தரமானது அல்ல. இதனால், வேலைவாய்ப்பு கிடைக்காத வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் என்ன முடிவெடுப்பார்கள் என்பதைப் பொறுத்தே தேர்தல் சூழல் மாறும்.” என்று அவர் விவரித்தார்.

பெண் வாக்காளர்கள் மற்றும் ‘லார்கி பஹின்’ (Laarki Bahin) திட்டம் பற்றிப் பேசிய கிரிஷ் குபேர், “மகாராஷ்டிராவில் இருக்கும் ஆண் ஆதிக்க அரசியல் அமைப்பால் இங்கிருக்கும் பெண்களின் அரசியல் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எனவே, இந்தத் திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தால் பெண்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.” என்றார்.

கிரீஷ் குபேர் மேலும் கூறுகையில், “இந்தப் பணத்தைப் பெற்ற பிறகும் பெண்கள் மகாயுதியை நிராகரித்தால் அது நல்லது. ஏனென்றால், வாக்குகளைப் பெறுவதற்காக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் மரபை இந்த முடிவு உடைக்கக்கூடும். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னால் யோசிப்பார்கள்” என்றார்.

இந்தத் தேர்தலில் எந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெறும் என்பது குறித்து குபேர் கூறுகையில், “தற்போது, ​​மகாயுதி அல்லது மகாவிகாஸ் அகாடி கூட்டணிகளின் வியூகம் மகாராஷ்டிரா அரசியலின் வெற்றியைத் தீர்மானிக்கும். மகாவிகாஸ் அகாடி ஆட்சியைப் பிடித்தால், `சரத் பவார்’ பிம்பத்தை மக்கள் அங்கீகரித்துவிட்டனர் என்று கருதலாம். மகாயுதி வெற்றி பெற்றால் வாக்காளர்கள் சரத் பவார் பிம்பத்தை நிராகரித்து விட்டனர் என்றே கூறலாம். உண்மையில், எந்த அரசியல் கட்சியாலும் அல்லது தலைவராலும் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது.” என்றார்.

`முன்னெப்போதும் இல்லாத சூழல் நிலவுகிறது’

மூத்த பத்திரிகையாளர் நிகில் வாக்லே கூறுகையில், “வரவிருக்கும் மகாராஷ்டிர தேர்தலை மூன்று வார்த்தைகளில் விவரிக்க முடியும் – ‘வரலாறு காணாத குழப்பம்’. இந்த தேர்தல் களம் மகாராஷ்டிர அரசியலின் வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது. வேட்பாளர் பட்டியலைப் பார்த்தாலே அது புலப்படும். மகாராஷ்டிராவில் அதிருப்தி வேட்பாளர்கள் இருப்பது புதிதல்ல. 1995 தேர்தலில் 45 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மனோகர் ஜோஷியின் அரசு அமைந்தது. ஆனால் இந்த முறை வேறு வேட்பாளரை வெற்றி பெறச் செய்யக் கூடிய அதிருப்தி வேட்பாளர்கள் அதிகம் இருப்பார்கள்” என்று விளக்கினார்.

தேர்தலில் பணபலம் குறித்து பேசிய வாக்லே, “கோடிக்கணக்கான ரூபாய் பணம் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் 100 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது எனில், குறைந்தது 500 கோடி அல்லது அதற்கு மேல் வெளியே போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.”

“வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மகாராஷ்டிரா தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. யஷ்வந்த்ராவ் சவான் கூட அவரது தொகுதியில் உள்ள வாக்குப் பெட்டிகளை அவரது சொந்த ஊழியர்களை வைத்து கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் முறைகேடுகளின் அளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் வரலாறு காணாத அளவு குண்டர்களின் கும்பல் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

வாக்லே மேலும் கூறுகையில், “இந்தத் தேர்தலில் குண்டர்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். பணமும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களும் இந்தத் தேர்தலில் பெரும் செல்வாக்கு செலுத்தக் கூடும். வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அனைவரும் கட்சி பிரமுகர்களில் சொந்தக்காரர்களாக அல்லது செல்வாக்கில் வந்துள்ளனர். இப்படி வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் சாதாரண கட்சித் தொண்டர்கள் வாழ்நாள் முழுவதும் அடிமட்டத்தில் மட்டுமே பணிப்புரிய முடியும் என்பதை இந்த தலைவர்கள் சொல்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “சரத் ​​பவார் வீட்டில் எத்தனை எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதை பார்த்தாலே இந்த சூழலில் தீவிரம் புரியும். தலைவர்கள் அடுத்து வரும் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குடும்ப அரசியல் என்னும் பாரம்பரியத்தை உடைக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தலிலும் குடும்ப அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது.” என்றார்.

முந்தைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை போலவே இம்முறையும் நிகழுமா என்றக் கேள்விக்கு பதிலளித்த நிகில் வாக்லே, “மக்களவைத் தேர்தலின் போது மகாராஷ்டிராவில் நான் பயணம் செய்த போது பார்த்த சூழல் இப்போது சட்டமன்றத் தேர்தலின் போது தெரியவில்லை. மகாவிகாஸ் அகாடிக்கு சாதகமான சூழலை நான் பார்க்கவில்லை” என்றார்.

நிகில் வாக்லே கூறுகையில், “ஐந்தே மாதங்களில் மகாவிகாஸ் அகாடி அதன் வேகத்தை இழந்துவிட்டது. இதற்குக் காரணம், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மகாவிகாஸ் அகாடியின் தலைவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். ஐந்து மாதங்களில், சாதகமானச் சூழலை பராமரிக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த தலைவர்கள் தொகுதிகளில் அமர்ந்து தங்களின் வெற்றியை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர். மக்களவைத் தேர்தலின் போது மகா விகாஸ் அகாடியில் இருந்த ஒற்றுமை இப்போது இல்லை” என்றார்.

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் வரலாறு காணாதக் குழப்பம், என்ன நடக்கிறது?

படக்குறிப்பு, நிகில் வாக்லே

மகாயுதி கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த நிகில் வாக்லே, “மகாயுதி கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அமித் ஷா தடியுடன் அமர்ந்திருக்கிறார். அவருக்குள் தோல்வியை பற்றிய ஒரு பயம் உள்ளது. அவருக்குள் ஒரு கடுமையான முகம் உள்ளது. எனவே யாரும் பேசத் துணிவதில்லை. ஆனால் மகாவிகாஸ் அகாடியில் யாரும் யாரையும் கேள்வி கேட்பதில்லை. சரத் ​​பவாருக்கு தனி ஆதரவாளர் குழு, உத்தவ் தாக்கரேவுக்கு தனி ஆதரவாளர் குழு. உத்தவ் தாக்கரே vs நானா படேல் எனப் போட்டி நடக்கிறது.” என்றார்.

“நீங்கள் (மகாவிகாஸ் அகாடி) முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றீர்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? முதன்முறையாக, உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்கு அளித்தனர். மும்பையில் முஸ்லிம் மற்றும் 60 சதவீத மராத்தி வாக்குகளால் உத்தவ் தாக்கரேவின் பலம் அதிகரித்தது. ஆனால் விஷால்கரில் வீடுகள் எரிக்கப்பட்ட போது நீங்கள் அங்கு செல்லவில்லையே?” என்று கேள்வியெழுப்பினார்.

நிகில் வாக்லே கூறுகையில், “மகாவிகாஸ் அகாடி மகாயுதியில் இருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர். மறுபுறம், மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர மகாயுதி முயற்சி செய்தது. அவர்களின் நலத்திட்டமே அவர்களின் மிகப்பெரிய ஆயுதம். லட்கி பஹின், ஹெச்பி பம்ப், விவசாயிகளுக்கு மின்சாரம் தள்ளுபடி போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். அரசு கருவூலத்தில் பணம் இல்லாத போது, ​​லட்கி பஹின் திட்டத்துக்கு ரூ.46,000 கோடி ஒதுக்கீடு செய்தனர். இத்திட்டத்தை அதிகளவில் விளம்பரப்படுத்தினர்”

“இந்த திட்டத்தின் விளம்பரம் காரணமாக, மகாயுதி ஏதோ செய்ய நினைக்கிறது என்பதை மக்கள் உணர்ந்தனர். மகாவிகாஸ் அகாடி இதற்கு பதிலாக எதையும் செய்யவில்லை. ஷிண்டே மீது அனுதாபம் இருப்பதால் மக்களவையை விட இந்த முறை ஷிண்டே அதிக வெற்றியைப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

`மகாயுதி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்’

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் வரலாறு காணாதக் குழப்பம், என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் ரஹி பிடே

மூத்த பத்திரிகையாளர் ரஹி பிடே கூறுகையில், “மகாயுதிக்கும், மகாவிகாஸ் அகாடிக்கும் இடையேயான அதிகாரப் போட்டி பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. `லட்கி பஹின் யோஜனா’வுக்கு பெண்களின் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என மகாயுதி நினைக்கிறது. ஆனால் இது நடக்குமா என்பது தெரியாது. என் வட்டத்தில் இருக்கும் பெண்கள் உத்தவ் தாக்கரேவிடம் காணப்படும் மாற்றத்தை புரிந்து கொண்டதாக கூறுகின்றனர்.” என்றார்.

ராஹி பிடே கூறுகையில், “மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும். மத்திய பிரதேசத்தில் நடந்ததை மகாராஷ்டிராவில் செய்யலாம் என்ற மாயையில் மகாயுதி இருக்கக்கூடாது. மற்ற மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வேறுபட்டது. மகாராஷ்டிராவுக்கு தனி அந்தஸ்து உண்டு. இதனை முற்போக்கு நிலை என்று கூறலாம். அதே சமயம் இந்த மாநிலத்தில் பல பெரிய சண்டைகள் மற்றும் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் மகாராஷ்டிராவின் முக்கிய அமைப்பு மாறவில்லை.” என்றார்.

“சாதி வகிக்கப் போகும் பங்கு என்ன’’

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் வரலாறு காணாதக் குழப்பம், என்ன நடக்கிறது?

படக்குறிப்பு, முனைவர் பிரகாஷ் பவார்

அரசியல் ஆய்வாளர் முனைவர் பிரகாஷ் பவார் கூறுகையில், “மகாராஷ்டிரா தேர்தலில் சாதி மிகப்பெரிய பங்கு வகிக்கும். மகாராஷ்டிராவில் சாதிவெறி எந்த வடிவத்திலும் இல்லை, ஆனால் இடஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் காரணமாக சாதி மிகவும் முக்கியமானது. எனவே, மராத்வாடாவை எடுத்து கொண்டால், இட ஒதுக்கீட்டுக்கான ஜரங்கே பாட்டீலின் போராட்டம், அவருக்கு எதிரான ஓபிசி போராட்டம், ஒரு பிரச்னையாக மாறியது. சாதி சமன்பாடுகளைத் தீர்ப்பதே அரசியல் கட்சிகளின் முதல் குறிக்கோளாகத் தெரிகிறது” என்றார்.

பிரகாஷ் பவார் கூறுகையில், “பாஜக மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மகாராஷ்டிரா அரசியலில் தலைமைத்துவ அடிப்படையில் சமமான கட்சிகள். ஓபிசி மற்றும் மராட்டியர்களை ஒன்றிணைக்க இந்த இரு கட்சிகளும் திட்டம் வகுத்துள்ளன. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஓபிசி மற்றும் ஒரு மராத்தியருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

மராத்தா இடஒதுக்கீடு குறித்து பேசிய பிரகாஷ் பவார், “மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க பாஜக மராட்டிய வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேட்பாளர்கள் தங்கள் மராத்திய வாக்குகளை கொண்டு வரவும், பாஜக தனது முகாமில் உள்ள ஓபிசி வாக்குகளைப் பெறவும், அந்த வேட்பாளர் வெற்றி பெறவும் வழிவகுக்கும்” என்றார்.

ஓபிசிகளைப் பற்றிப் பேசிய பிரகாஷ் பவார், “மகாராஷ்டிராவில் ஓபிசிக்கள் பாஜகவுக்குப் பின்னால் ஒன்றுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், கடந்த ஐந்தாண்டுகளில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மராட்டிய ஒருங்கிணைப்பு முறையை அமல்படுத்தினார். உதாரணமாக, உதயன்ராஜே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல் போன்ற தலைவர்கள் பாஜகவில் நுழைந்ததால் உள்ளூர் ஓபிசிக்கள் பாதிக்கப்பட்டனர், அதன் பின்னர் சரத் பவாரும் காங்கிரஸும் இந்த அதிருப்தி ஓபிசிக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர்.”

சரத் ​​பவாரைப் பற்றி பேசிய பிரகாஷ் பவார், “சரத் பவாரின் பிம்பம் மராட்டியம் மட்டுமல்ல, ஓபிசி மற்றும் மராட்டியம் சேர்ந்தது. எனவே ஹரியாணாவில் நடந்தது மகாராஷ்டிராவில் நடக்கவில்லை..”

இறுதியாக, பிரகாஷ் பவார் கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்கு பின், மகாவிகாஸ் அகாடி மிகவும் முன்னிலையில் இருந்தது. ஆனால், தற்போது இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களில், மகாயுதி இடைவெளியை சமன் செய்துள்ளது. இன்று, எந்த கட்சியும் முன்னணியில் இல்லை. மகாராஷ்டிரா தேர்தல் ஹரியாணாவை போல் அல்ல, ஆனால், இதில் பாஜக வெற்றி பெற்றால், அரசியலின் முழு முகத்தையும் பாஜக மாற்றிவிட்டதாகக் கூறலாம். மகாவிகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால், தேசிய அளவிலும் எதுவும் நடக்கலாம்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.