‘கூட்டணி ஆட்சி அமையும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை’ – திருமாவளவன்

by sakana1

‘கூட்டணி ஆட்சி அமையும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை’ – திருமாவளவன் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பற்றி எவ்வளவோ அவதூறுகள் பரப்புகின்றனர்.நாம் என்ன முடிவெடுக்கப்போகிறோம் என்ற விவாதங்கள் நடக்கின்றன.

எதிர்மறையான, நேர்மறையான கருத்துகள் நம்மைப்பற்றி பேசும் அளவுக்கு நாம் வலிமை பெற்றிருக்கிறோம். அதனை இன்னும் வலிமையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அனைத்து விளிம்புநிலை மக்களுக்கான பேரியக்கம். சமூக பண்பாட்டு தளத்தில் இயங்கக்கூடிய இயக்கம். மாவட்டச் செயலர்கள் மக்களை சந்திக்க வேண்டும். கட்சியில் தினம் ஆற்றும் பணியை குறிப்பெடுக்க வேண்டும். உள்கட்சி பிரச்சினையை பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்.

விசிக என்பது தேர்தலுக்கான அரசியல் கட்சியல்ல. சமூக பண்பாட்டு தனி இயக்கமாக உள்ளது. ஆகவே, சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை கடந்து செல்ல வேண்டும். விசிக முடிவை விமர்சிக்கும் அளவுக்கு கட்சி வலுப்பெற்றிருப்பது சாதனையாகும் என்றார். நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி, புதுச்சேரி மாநிலச் செயலர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எனும் தலைப்பில் கருத்தரங்கை நடத்திய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அகில இந்திய அளவில் மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட கூட்டணி ஆட்சி கடந்த 1977-ம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது.

அதைப்போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைவது அவசியமானது என்ற கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் அதற்கான சூழல் இன்னும் தமிழகத்தில் கனியவில்லை என்பது தான் உண்மை. இப்போது எல்லா கட்சிகளும் இதைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று திமுக அல்லது அதிமுக சொல்கிறது என்று சொன்னால், அது நடைமுறைக்கு சாத்தியமானது. ஆனால், கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியமானதா? என்ற கேள்வி எழுகிறது.

அதிமுக கூறுவதால் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமற்றது என்பதே உண்மை. கூட்டணி ஆட்சியை அதிமுக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்த பிறகே அதுகுறித்து பேச முடியும். 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல. அதற்கு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேண்டும். அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைந்த பார்வை தேவை. இது பற்றிய விரிவான உரையாடல் இன்னும் நடைபெறவில்லை. இப்போது தான் ஒரு தொடக்க புள்ளியாக இருக்கிறது.

ஆகவே 2026-ல் அப்படியொரு காலம் கனியும் என்று சொல்ல முடியாது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 2016-ல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு பங்குண்டு.

அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியை உருவாக்கியதிலும் விசிகவுக்கு பங்குண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதிலும், அதை மேலும் வலுப்படுத்துவதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் கடமை, நோக்கம் உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். அது உண்மையல்ல என்றார்.

தொடர்புடைய செய்திகள்