எதிரும் புதிருமாக இருந்த சௌதி அரேபியாவும் இரானும் நெருங்குவதால் இஸ்ரேலுக்கு என்ன பாதிப்பு?

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

சௌதி அரேபியாவும் இரானும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய உலகின் தலைமைக்கு போட்டியிடும் முக்கியமான நாடுகள்.

சௌதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரானில் ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்திய கிழக்கின் செல்வாக்கு மிக்க இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிக்கல் நிறைந்தது மட்டுமின்றி பதற்றமானதும் கூட.

மதம், அரசியல் மற்றும் பிராந்திய காரணிகள் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கின்றன. ஆனால், மார்ச் 2023 இல் சௌதி – இரான் இடையே சீனாவின் மத்தியஸ்தம், கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இருந்து இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் எதிரெதிரே நிற்பதாகத் தோன்றிய இந்த நாடுகள் இப்போது நெருங்கி வருவதைக் காண முடிகிறது. இரு நாடுகளும் இடைவெளியைக் குறைத்து ஒன்றிணைய முயல்கின்றன என்பது சமீபத்திய முன்னேற்றங்களிலிருந்து தெளிவாகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சிக்கும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையே இரண்டு முறை சந்திப்புகள் நடந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றைப் பார்க்கும் போது இது அசாதாரணமானது.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி புதன்கிழமையன்று “பிராந்திய உரையாடல்கள் விருப்பத்தின் பேரில் நடப்பதல்ல. அவை மிகவும் அவசியமானவை” என்று தெளிவாகக் கூறினார்.

இரானிய வெளியுறவு அமைச்சர் சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு தனது எக்ஸ் பக்கத்தில், “இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான கவலைகள் மற்றும் பொதுவான நலன்கள் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளும் பெரிய நெருக்கடிகளைச் சமாளிப்பதில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் எங்களுக்குப் புரிகிறது. பிராந்திய உரையாடல் என்பது விருப்பம் சார்ந்தது அல்ல, அது கட்டாயம் தேவை. நாங்கள் அனைவரும் இதை ஒப்புக்கொண்டோம்” என்று பதிவிட்டார்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை ரியாத்தில் இஸ்லாமிய நாடுகளின் அவசர மாநாட்டிற்குப் பிறகு இரானின் துணை அதிபர் முகமது ரெசா அரேஃப் சௌதி இளவரசரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இளவரசர் முகமது பின் சல்மானை இரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அரேஃப், இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சிக்கு திறக்கப்பட்டுள்ள புதிய பாதை ‘மாற்ற முடியாத பாதை’ என்றும் கூறினார்.

சௌதி இளவரசரை சந்தித்த பின்னர், இரான் துணை அதிபர், இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் இந்த இரு நாடுகளிலும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் சகோதரத்துவத்தை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை மேம்படுத்திய பின்னர், பொருளாதாரம், கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் இரான் துணை அதிபர் கூறினார்.

அதேநேரம், இரான் துணை அதிபருடனான சந்திப்புக்கு பின்னர், சௌதி பட்டத்து இளவரசர், இரானுடனான உறவை மேம்படுத்துவது சௌதியின் நலனுக்கானது என்று கூறினார்.

ரியாத்தில் அரபு நாடுகளின் மாநாடு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஞாயிற்றுக்கிழமை, சௌதி பட்டத்து இளவரசர் இரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சிக்கும் சௌதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு சந்திப்புகள் நடந்துள்ளன

தனது வேலைப்பளு காரணமாக ரியாத்தில் நடைபெற்ற மாநாட்டில் இரான் அதிபர் கலந்து கொள்ளவில்லை.

இரானின் அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தொலைபேசி அழைப்பின் போது இரான் அதிபர் செளதி இளவரசரிடம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

இரானிய ஊடகங்களின்படி, அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடனான தொலைபேசி அழைப்பில், இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் தற்போது ஒரு வரலாற்று கட்டத்தில் இருப்பதாகவும், அவை மிக உயர்ந்த நிலையை எட்டும் என்று நம்புவதாகவும் செளதி இளவரசர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று, செளதி அரேபியாவின் ராணுவத் தளபதி ஜெனரல் ஃபயேஸ் பின் ஹமித் அல்-ரவிலி தெஹ்ரானுக்கு வந்து இரானிய ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரியைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

செளதி அரேபியா – இரான் உறவுகள்

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

சௌதி அரேபியா சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. அங்கு இஸ்லாத்தின் மையமாக `சன்னி’ உள்ளது. இரான் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. இங்கு ஷியாக்கள் இஸ்லாத்தின் மையமாக உள்ளனர். இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 1979 இல் இரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டது. இரான் தனது சித்தாந்தத்தை உலகம் முழுவதும் பரப்ப முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் செளதிக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.

இருப்பினும், இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான போட்டி மத சித்தாந்தம் அல்லது குறுங்குழுவாத பிளவுகளால் அல்ல. அது பிராந்திய காரணங்களால் ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சர்வதேச விவகாரங்களின் நிபுணர் முடாசிர் கான் கூறுகையில், “சௌதி அரேபியாவில் சன்னி மற்றும் இரானில் ஷியா பெரும்பான்மை இருப்பதால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது. செளதியும் இரானும் எதிராளிகள், ஒன்று ஷியா நாடு, மற்றொன்று சன்னி நாடு என்பதும் உண்மை தான்.

ஆனால், அவர்களுக்கு இடையேயான பதற்றமும் போட்டியும் உலக அரசியலால் ஏற்படுகிறது. இந்த நாடுகளுக்கு இடையே, ஒன்று மற்ற நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்றெல்லாம் கருதவில்லை. ஆனால், சௌதி மிகவும் செல்வாக்கு பெறுவதை இரான் விரும்பவில்லை. அதே போன்று இரான் மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக மாறுவதை செளதி அரேபியா விரும்பவில்லை என்பது உறுதி. மத்திய கிழக்கில் இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் நிலவுவதற்கு இதுவே முக்கிய காரணம்.” என்றார்.

சமீபத்திய ஆண்டுகளில் இரான் மற்றும் சௌதி அரேபியாவின் நலன்களுக்கு இடையிலான முரண்பாடு தெளிவாகியுள்ளது. சௌதி அரேபியா ஹூதிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏமனில் உள்ள ஹூதிக்களை இரான் ஆதரிக்கிறது.

இரானுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், சௌதி அரேபியா ஹூதிகளுடன் போர் நிறுத்தம் செய்து ஏமன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் அமெரிக்காவின் செல்வாக்கும் உள்ளது. இரானின் வளர்ந்து வரும் சக்தியை அமெரிக்கா அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. அதே நேரத்தில் செளதி அரேபியா அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவையே பெரும்பாலும் நம்பியிருக்கிறது.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் சௌதி அரேபியா பாதுகாப்புக்காக அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வரும் 2030 ஆம் ஆண்டிற்கான செளதி அரேபியாவின் இலக்குகளில் `பிராந்திய நிலைத்தன்மை’ மற்றும் `பாதுகாப்பு’ ஆகியவை முதலிடத்தில் உள்ளன.

பிராந்திய நிலைத்தன்மை மத்திய கிழக்கில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நம்புகிறார்.

மார்ச் 2023 இல், சௌதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யவும் ராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் உதவுவதாக சீனா அறிவித்தது.

அதே நேரத்தில், சமீபத்திய ஆண்டுகளில், இரான் ரஷ்யாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்காவைத் தவிர, சீனா மற்றும் ரஷ்யா போன்ற உலக வல்லரசுகளின் தலையீடும் மத்திய கிழக்கில் அதிகரித்து வருவதை இந்த முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“அரேபியர்கள் vs இஸ்ரேல்” முதல் “இரான் vs அரேபியர்கள்” வரை

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபராக முன்பிருந்த டிரம்ப் சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை இயல்பாக்க முயன்றார் (2019 இல் ஜப்பானில் ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

உலகளாவிய அரசியலின் ஆரம்ப நாட்களில், மத்திய கிழக்கின் அரசியல் களம், அரபு vs இஸ்ரேல் என்றே இருந்தது. 1948, 1967 மற்றும் 1973 ஆண்டுகளில் நடந்த போர்கள் அரேபியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இடையே நடந்தது.

ஆனால், கடந்த 15-20 ஆண்டுகளில், அரபு அல்லாத நாடுகளும் மத்திய கிழக்கில் செல்வாக்கு பெற்றுள்ளன, குறிப்பாக இரான் மற்றும் துருக்கி.

மத்திய கிழக்கில் இரானின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இரான் தனது நேரடி அதிகாரம் மற்றும் ஆதரவு குழுக்களின் மூலம் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது.

அமெரிக்காவின் டெலாவர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான முக்தாதர் கான் கூறுகையில், “இதன் விளைவாக, மத்திய கிழக்கில் அரபு நாடுகள் இரானை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருத தொடங்கியுள்ளன. அரபு நாடுகள் இஸ்ரேலுடனான தங்கள் உறவை மாற்றிக்கொண்டுள்ளன, இதன் விளைவாக ‘ஆபிரகாம் ஒப்பந்தம்’ (Abraham Agreement) உருவானது.” என்றார்.

அமெரிக்க மத்தியஸ்தம் மூலம், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் இஸ்ரேலுடனான அவற்றின் உறவை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டவை.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகியவை 2020 இல் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவு கொண்ட முதல் அரபு நாடுகளாக மாறின. பின்னர், சூடான் மற்றும் மொராக்கோவும் இந்த ஒப்பந்தங்களில் இணைந்து இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தின.

இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு, அரபு நாடுகளில் இஸ்ரேலின் தூதரகங்கள் திறக்கப்பட்டன. நேரடி விமான சேவைகளும் தொடங்கப்பட்டன. மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரான் – சௌதி நெருங்கினால் இஸ்ரேலுக்கு என்ன பாதிப்பு?

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவிருந்த செளதி அரேபியா இன்னமும் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவில்லை.

`ஆபிரகாம் ஒப்பந்தம்’ பிரதிபலித்த தெளிவான செய்தி என்னவென்றால், மத்திய கிழக்கில் இஸ்ரேலை விட இரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான்.

அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த மோதல் சம்பவங்களுக்குப் பிறகு இந்த நிலை மாறியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவிருந்த செளதி அரேபியா இன்னமும் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யவில்லை.

அக்டோபர் 7, 2023 அன்று, காஸாவை ஆளும் ஹமாஸ், இஸ்ரேலைத் தாக்கி 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கொன்றது. இதைத் தொடர்ந்து, காஸாவில் பெரும் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. தற்போது இந்த மோதல் லெபனானை எட்டியுள்ளது.

முதல் முறையாக, இஸ்ரேல் நேரடியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது, பதிலுக்கு இரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ளதால், அது ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அக்டோபர் 7 நிகழ்வுகள், இஸ்ரேலுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைத்துவிட்டதாகவும், இஸ்ரேலுடன் நெருக்கமாக செல்வதை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்திற்கு செளதி அரேபியாவை தள்ளியதாகவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

முக்தாதர் கான் கூறுகையில், “இரானை தனிமைப்படுத்த செளதி அரேபியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் விரும்புகின்றன. ஆனால், செளதி அரேபியா இரானுடனான உறவை மேம்படுத்தி, இரான் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழலை மாற்ற நினைக்கிறது. அப்படி நடந்தால் செளதி அரேபியா, இஸ்ரேலுக்கு அடிபணிய வேண்டிய தேவையிருக்காது.” என்றார்.

இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மத்திய கிழக்கின் நிலைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முக்தாதர் கான் கூறுகையில், “அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்ய செளதி அரேபியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், செளதி அரேபியா இந்த அழுத்தத்தை புறக்கணிக்கலாம் அல்லது ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகளை அதிகரிக்கலாம்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆனால், மத்திய கிழக்கின் தற்போதைய சூழ்நிலையில் இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுதான் இங்கு மிக முக்கியம். இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தால், செளதி அரேபியா பாலத்தீனர் பிரச்னையை விட்டுவிட்டு இஸ்ரேலுடன் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.

“ஆனால், சமீபத்திய அறிகுறிகள் செளதி அரேபியாவும் இரானும் நெருங்கி வருவதைக் காட்டுகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டு செளதி அரேபியாவும் இரானும் சீனா மூலம் தங்கள் ராஜதந்திர உறவுகளை மீட்டெடுத்தன. இரு நாட்டு ராணுவங்களும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.” என்றும் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, மத்திய கிழக்கு நிலவரங்கள் குறித்து செளதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற அரபு நாடுகளின் அவசர மாநாட்டில், செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்ரேலை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். `இஸ்ரேல் ஒரு இனப் படுகொலையை செய்து வருகிறது’ என்று கூறினார்.

முக்தாதர் கான் கூறுகையில், “முகமது பின் சல்மானின் வார்த்தைகளில் இருந்த இந்த கண்டிப்பு இரானுடனான சிறந்த உறவு காரணமாக வெளி வந்தது. இரானுடனான செளதி அரேபியாவின் உறவுகள் மேம்பட்டால், அது இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும், அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.

இரானும் செளதி அரேபியாவும் நெருங்கி வருவது ஏன்?

சௌதி அரேபியா - இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம், தெஹ்ரானில் பெசெஷ்கியன் அதிபராக பதவியேற்றார், இந்நிகழ்ச்சியில் சௌதி அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இரான் மற்றும் செளதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பேராசிரியர் முடாசிர் கான் கூறுகையில், ஓரளவிற்கு இரு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த விரும்புகின்றன, ஆனால் தற்போதைய முன்னேற்றங்கள் செளதி அரேபியாவும் இரானும் ஒருவருக்கொருவர் உறவை நெருக்கமாக்க விரும்புகின்றன என்பதற்கான நேரடி அறிகுறியாக உள்ளது. இதற்கு காரணம் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை.” என்றார்.

இருப்பினும், செளதி அரேபியா மிகவும் கவனமாக செல்ல வேண்டும், ஏனெனில் எந்தவொரு ராணுவ மோதலிலும் செளதி நேரடியாக ஈடுபடும் அபாயமான நடவடிக்கையை எடுக்க முடியாது.

முடாசிர் கான் கூறுகையில், “செளதிக்கும் இரானுக்கும் இடையிலான விவகாரம் ராணுவ மோதலை எட்டினால், செளதி அரேபியா இந்த மோதலில் நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. ஏனெனில் இரான் மற்றும் இஸ்ரேல் இரண்டும் ராணுவ சக்திகள் கொண்டவை. ஆனால் செளதி அரேபியா ராணுவ சக்தி அல்ல. அது ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சக்தி. அது மிகவும் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்றார்.

செளதி தனது சொந்த பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழ்நிலையில் இருக்க விரும்பவில்லை. அதன் பாதுகாப்பிற்காக வெளி சக்திகளை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. மத்திய கிழக்கில் மாறிவரும் சூழ்நிலைக்கு மத்தியில் செளதி அரேபியாவும் தனது பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது, இப்போது இந்த விஷயத்தில் தன்னாட்சியை நோக்கி நகர விரும்புகிறது.

முடாசிர் கான் கூறுகையில், “அமெரிக்கா ஆயுதங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை வழங்கினாலும், பாதுகாப்பு என்று வரும் போது, அமெரிக்காவை முழுமையாக சார்ந்து இருக்க முடியாது என்பதை செளதி அரேபியாவின் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். ஏமனில் ஹூத்திகளுடனான மோதலின் போது, அதன் எண்ணெய் குழாய்கள் தாக்கப்பட்டபோது செளதி இதை நன்கு புரிந்து கொண்டது.” என்றார்.

மத்திய கிழக்கில் மாறிவரும் சூழ்நிலையில், செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருப்பினும், இரான் இஸ்ரேலை நேரடியாக தாக்கினால், செளதி அரேபியா அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க விரும்புகிறது.

முடாசிர் கான் கூறுகையில், “இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் ராணுவ மோதல் ஏற்பட்டால், இந்த மோதலில் செளதி யார் பக்கமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது. அது இந்த மோதலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு