‘ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்’- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன?
- எழுதியவர், ஜீன் மெக்கென்சி
- பதவி, சோல் செய்தியாளர்
கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, “ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்,” என்று கூறி அவர் சிரிக்கிறார்.
ஹ்வாங் டோங்க்-யுக் (Hwang Dong-hyuk) தனது இருண்ட எதிர்காலத்தைப் பற்றிய த்ரில்லர் நாடகமான ஸ்க்விட் கேமின் இரண்டாவது பாகத்தைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து என்னிடம் பேசினார்.
இந்த வெப் சீரிஸ்-இன் கதை: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் பலர், ஒரு மிகப்பெரும் பரிசுத்தொகையை வெல்வதற்கு மிகவும் ஆபத்தான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
இதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் திட்டம் முதலில் இல்லை. ‘இரண்டாம் பாகம் எடுக்கவே மாட்டேன்’ என்று ஹ்வாங் டோங்க் யுக் சபதம் எடுத்திருந்தார்.
முதல் பாகம் எடுத்ததே அவருக்கு கடும் மனஅழுத்தத்தைக் எற்படுத்தியது. அப்படியிருக்க, இரண்டாம் பாகம் எடுக்க அவரது மனதை மாற்றியது எது?
“பணம்,” என்று தயக்கமின்றி பதிலளிக்கிறார்.
“முதல் தொடர் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், உண்மையைச் சொன்னால், அதிலிருந்து நான் அதிகம் சம்பாதிக்கவில்லை,” என்கிறார். “எனவே இரண்டாம் பாகம் எடுப்பது அதனை ஈடுகட்ட உதவும்,” என்கிறார்.
மேலும், “முதல் பாகத்தில் நான் கதையை முழுதாக முடிக்கவில்லை,” என்கிறார் அவர்.
மிகவும் வெற்றிகரமான வெப் சீரிஸ்
ஸ்க்விட் கேமின் முதல் பாகம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் மிகவும் வெற்றிகரமான தொடராகும்
இது தென் கொரிய தொலைக்காட்சி நாடகங்களின் மீது மிகப்பரவலான கவனத்தை ஈர்த்தது.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய அதன் அதிர்ச்சிகரமான வர்ணனை உலகெங்கிலும் மக்களிடையே ஒரு உணர்வைத் தூண்டியது.
ஆனால், தொடரின் முதல் பாகத்தில் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களையும் கொன்றுவிட்டதால், புதிய நடிகர்கள், கதையில் புதிய விளையாட்டுக்கள் என அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டும்.
பார்வையாளர்களின் வேறு உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
“இப்போது என்னுடைய ‘ஸ்ட்ரெஸ்’ முன்பைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது,” என்கிறார் ஹ்வாங் டோங்க்-யுக்.
முதல் தொடர் ஒளிபரப்பப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஹ்வாங் உலகின் நிலையைப் பற்றி இன்னும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்.
தற்போது நடந்துவரும் போர்கள், காலநிலை மாற்றம், மோசமாகும் உலகளாவியப் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவையே அவநம்பிக்கைக்குக் காரணங்கள், என்கிறார் அவர்.
தற்போது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மட்டும் மோதல்கள் நடக்கவில்லை. தலைமுறைகளுக்கிடையே, பாலினங்களுக்கிடையே, வெவ்வேறு அரசியல் கொள்கைகள் கொண்டவர்களுக்கு இடையே என பல நிலைகளிலும் தீவிரமான மோதல்கள் நடப்பதாக அவர் கூறுகிறார்.
“புதிய கோடுகள் வரையப்படுகின்றன. ‘நாம் vs அவர்கள்’ என்ற யுகத்தில் நாம் வாழ்கிறோம். யார் சரி, யார் தவறு?”
இன்றைய உலகின் பிரச்னைகள்
ஸ்க்விட் கேமின் இரண்டாம் பகுதி படமாக்கப்படும் ‘செட்’-ஐ சுற்றிப்பார்த்தேன். புதிய தொடரில் இருக்கப்போகும் விளையாட்டுக்கள், அதன் தனித்துவமான, பிரகாசமான-வண்ணப் படிக்கட்டுகள் ஆகியவற்றைப் பார்த்தபோது, இயக்குநரின் விரக்தி இரண்டாம் பகுதியில் எவ்வாறு வெளிப்படும் என்பதற்கான சில குறிப்புகள் எனக்குப் புலப்பட்டன.
தொடரின் முதல் பகுதியில் வெற்றியாளராகக் காட்டப்பட ஜி-ஹன் (Gi-hun), இந்த ஆட்டத்தை வீழ்த்தி, போட்டியில் புதிதாகப் பங்குபெறுபவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் இரண்டாம் பாகத்தில் மீண்டும் தோன்றுகிறார்.
முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் லீ ஜங்-ஜேவின் (Lee Jung-jae) கூற்றுப்படி, அவர் முன்பை விட “அதிக அவநம்பிக்கையுடனும் உறுதியுடனும் தோன்றுகிறார்.”
போட்டியாளர்கள் இரவில் உறங்கும் விடுதியின் தளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாதி பெரிய சிவப்பு நியான் எக்ஸ் சின்னத்துடன் முத்திரையிடப்பட்டுள்ளது, மற்றொன்றில், ஒரு நீல வட்டம்.
இப்போது, ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும், வீரர்கள் ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது அவர்கள் போட்டியை முன்கூட்டியே முடித்துவிட்டு உயிர்வாழ விரும்புகிறீர்களா, அல்லது தொடர்ந்து விளையாடுகிறார்களா? தொடர்ந்து விளையாடினால், அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுவார்கள்.
பெரும்பான்மையான போட்டியாளர்கள் எந்தப் பக்கத்தைத் தேர்வு செய்கிறார்களோ அந்தப் பக்கத்தின் முடிவு செயல்படுத்தப்படும்.
இது, கடும் கோஷ்டி பூசல் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், உலகில் பெருகிவரும் குழு மனப்பான்மையால் ஏற்படும் ஆபத்துகளை அம்பலப்படுத்த நினைக்கிறார் இயக்குநர் ஹ்வாங்.
இன்றைய உலகில் மக்கள் எதாவது ஒரு பக்கத்தைச் சார்ந்து இருக்கும்படி வற்புறுத்தல்கள் உள்ளன. இது அவர்களிடையே மோதலைத் தூண்டுவதாக அவர் கருதுகிறார்.
ஸ்க்விட் கேமின் முதல் பாகத்தின் அதிர்ச்சியூட்டும் கதையால் பலர் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆனால், அதன் தேவையில்லாத வன்முறையைப் பார்க்கவே மிகவும் கடினமாக இருந்ததாகப் பலர் கருதினர்.
ஆனால் ஹ்வாங்குடன் பேசினால், இந்த வன்முறை முழுமையாக திட்டமிடப்பட்டே அந்தத் தொடரில் வைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. ஹ்வாங் உலகத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும் நபர். உலகின் மீது அக்கறை கொண்டவர். உலகில் இன்று பெருகிவரும் அமைதியின்மையால் மிகவும் கவலையடைகிறார்.
“இந்தத் தொடரை உருவாக்கும் போது, இந்த அழிவுப் பாதையில் செல்லாமல் உலகை திசைதிருப்ப மனிதர்களாகிய நம்மால் முடியுமா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். உண்மையில் எனக்கு அதற்கான பதில் தெரியவில்லை,” என்கிறார்.
ஸ்க்விட் கேமின் இரண்டாம் பகுதியில் என்ன இருக்கிறது?
தொடரின் இரண்டாவது பகுதியைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் பெரும் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், முதல் பாகத்தில் விடுபட்ட சில தகவல்கள் கிடைக்கலாம். இந்த விளையாட்டு ஏன் உள்ளது, முகமூடி அணிந்த ‘ஃபிரண்ட் மேன்’ (Front Man) ஏன் அதனை இயக்குகிறார் போன்ற தகவல்கள்.
“[இந்த பாகத்தில்] இந்த ‘ஃபிரண்ட் மேன்’-இன் கடந்தகாலம், அவரது வாழ்க்கைக் கதை, அவரது உணர்ச்சிகளை மக்கள் அதிகம் பார்ப்பார்கள்,” என்று இந்த மர்மமான பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் லீ பியுங்-ஹன் (Lee Byung-hun) கூறுகிறார்.
“இது பார்வையாளர்களுக்கு அவர் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தாது. ஆனால் அவர் ஏன் சில விஷயங்களைத் தேர்வு செய்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும்,” என்கிறார் அவர்.
தென் கொரியாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான லீ, முதல் பாகம் முழுவதும் தனது முகம் மற்றும் கண்களை மூடியிருந்ததும், அவரது குரல் சிதைந்திருந்ததும் ‘கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது’ என்று ஒப்புக்கொள்கிறார்.
இந்தத் தொடரில் அவர் முகமூடி இல்லாமல் தோன்றும் காட்சிகளை ரசித்துள்ளார். அதில் அவர் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியும். ஆனால் இம்முறையும் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.
படைப்பாளிகள் வஞ்சிக்கப்படுகிறார்களா?
இயக்குநர் ஹ்வாங், ஸ்க்விட் கேம் தொடரைத் தயாரிக்க 10 ஆண்டுகள் முயன்றார். நெட்ஃபிளிக்ஸிடம் இருந்து பணம் வருவதற்கு முன்பு, தனது குடும்ப செலவுகளுக்காக அதிக அதிக கடன்களை வாங்கவேண்டி இருந்தது.
ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு சிறிய முன்பணத்தைத்தான் தந்தது. அதனால் அவரால் அந்த சீரிஸ் வசூலித்ததாகச் சொல்லப்படும் 650 மில்லியன் பவுண்டுகளில் (இந்திய மதிப்பில் சுமார் 7,000 கோடி ரூபாய்) அவருக்குப் பங்கு கிடைக்கவில்லை.
தென்கொரியாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படைப்பாளிகள் தற்போது சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களுடன் கொண்டுள்ள சிக்கலான உறவை இது விளக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தென்கொரியச் சந்தையில் பல நூறு கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தது. இது கொரிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் அன்பையும் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதலிருந்து படைப்பாளிகளுக்கு மிகச் சொற்பனான தொகையே சென்றடைந்திருக்கிறது.
ஒப்பந்தங்களில் கையொப்பமிடும்போது அவர்களது காப்புரிமையைக் கைவிடுமாறு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் லாபத்தில் பங்குகேட்கும் உரிமையையும் கைவிட அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்கின்றனர்.
இது உலகளாவிய பிரச்சனை.
கடந்த காலத்தில், திரைப்பட மற்றும் சீரியல் இயக்குநர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கினை பெற்றனர். ஆனால், ஆன்லைன் தளங்கள் இதனைப் பின்பற்றுவதில்லை.
தென் கொரியாவில் இது இன்னும் மோசமாக உள்ளது. அதன் காலாவதியான பதிப்புரிமைச் சட்டம் தங்களைப் பாதுகாக்கவில்லை என்று படைப்பாளிகள் கூறுகிறார்கள்.
“தென் கொரியாவில், ஒரு திரைப்பட இயக்குநராக இருப்பது பெயருக்காகத்தான். அது சம்பாதிப்பதற்கான வழி அல்ல,” என்று கொரிய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஓ கி-ஹ்வான் (Oh Ki-hwan), சோலில் நடந்த ஒரு நிகழ்வில் கூறுகிறார்.
அவரது இயக்குநர் நண்பர்கள் சிலர், சேமிப்பு கிடங்குகளில் பகுதி நேரமாகவும், டாக்சி ஓட்டுநர்களாகவும் வேலை செய்கிறார்கள்.
லாபத்தில் நியாயமான பங்கு
பார்க் ஹே-யங் (Park Hae-young) ஒரு திரைக்கதை ஆசிரியர். நெட்ஃப்ளிக்ஸ் அவரது நிகழ்ச்சியான ‘மை லிபரேஷன் நோட்ஸ்’-ஐ வாங்கியபோது, அது உலகளவில் வெற்றி பெற்றது.
“என் வாழ்நாள் முழுவதும் எழுதிகொண்டிருக்கிறேன். உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களுடன் போட்டியிடும் போது, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவது மகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் தற்போதைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் முறையால், தனது அடுத்த தொடரில் ‘அனைத்தையும் முதலீடு’ செய்யத் தயங்குவதாகப் பார்க் கூறுகிறார்.
“வழக்கமாக, ஒரு நாடகத்தை உருவாக்க, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் செலவழிப்பேன். அது வெற்றியடைந்தால், அது எனது எதிர்காலத்தை ஓரளவு பாதுகாக்கும். ஏனெனில் எனது நியாயமான பங்கு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அப்படி இல்லாமல், இவ்வளவு கஷ்டப்பட்டு என்ன பயன்?” என்கிறார் அவர்.
அவரும் பிற படைப்பாளிகளும் தென்கொரியாவின் பதிப்புரிமைச் சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர். இது நடந்தால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் லாபங்களை படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்வது கட்டாயமாகும்.
பிபிசி-க்கு தென்கொரிய அரசாங்கம் அனுப்பிய ஒரு அறிக்கையில், இந்தப் பிரச்னையை அங்கீகரித்தாலும், இந்தச் சிக்கலைத் தீர்ப்பது திரைத்துறையின் கையில்தான் உள்ளது என்று கூறியது.
நெட்ஃப்ளிக்ஸ்-இன் செய்தித் தொடர்பாளர் பிபிசி-யிடம், அந்நிறுவனம் மிக நல்ல தொகையை வழங்குகிறது என்றார். படைப்பாளிகளுக்கு ‘நிகழ்ச்சிகளின் வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் நல்ல தொகை’ வழங்கப்படுவதாகக் கூறினார்.
ஸ்க்விட் கேம் இயக்குநர் ஹ்வாங், தனது சொந்த ஊதியப் போராட்டங்களை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அந்த மாற்றத்தைத் துவங்கும் என்று நம்புகிறார்.
அவர் நிச்சயமாக நியாயமான ஊதியம் பற்றிய ஒரு உரையாடலைத் துவங்கியிருக்கிறார். மேலும், இந்த இரண்டாவது தொடர் நிச்சயமாகத் தென்கொரியத் திரைத்துறைக்கு மற்றொரு ஊக்கத்தைக் கொடுக்கும்.
ஆனால் படப்பிடிப்பு முடித்த பிறகு நாங்கள் சந்தித்தபோது, அவர் என்னிடம் மீண்டும் தனது பல் வலிக்கிறது என்று கூறுகிறார்.
“நான் இன்னும் பல் மருத்துவரைப் பார்க்கவில்லை. சீக்கிரம் சில பற்களைப் பிடுங்க வேண்டியிருக்கிறது,” என்றார்.