புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.
அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகவும், 23 அல்லது 25 அமைச்சரவை அமைச்சர்களும் 25 அல்லது 27 பிரதி அமைச்சர்களும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைச்சுக்கு ஒன்று அல்லது இரண்டு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பொதுத்தேர்தலில் 7 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் வாக்குககளைக பெற்ற விஜித ஹேரத்துக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் உள்ளடங்கலாக அனைத்து அமைச்சுக்களுக்கு 50 நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது
எவ்வாறாயினும் சபாநாயகர் நியமனத்திற்கான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.இந்த நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றிருந்தது
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கி அமைச்சரவை நியமிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து நாட்டின் 9 ஆவது நாடாளுமன்றம் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்டது
அதன்பிரகாரம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது.
பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 13 ஆயிரத்து 421 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்துள்ளது. வடக்கு கிழக்கிலும் வெற்றி பெற்றமை இந்த நாட்டில் தேர்தல் வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6.8 மில்லியன் வாக்குகளைப்பெற்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வெற்றியானது மொத்த பெறுபேறுகளில் 61. 56 சதவீதமாக பதிவாகியுள்ளது
நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வெற்றியினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது. இதனிடையே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நாளில் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் நடைபெறுவதால் அன்றையநாள் மிகவும் விசேடதினதாகும்.
முதலாவது அமர்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகின்றது.
முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன் விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கப்பெறும்.
செங்கோல் வைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.
அதன் பின்னர் அரசியலமைப்பின் உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை வாக்களிப்பின் மூலம் நியமித்தல், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியுரை வழங்கப்படும்.
இதனையடுத்து பிரதி சாபாநாயகர், குழுக்களின் தலைவர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது பாராளுமன்ற நாள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.
இதில் சபாநாயகர் முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன் அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும்.
இந்த செயற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் முதல்நாள் அமர்வுகள் ஒத்திவைக்கப்படுவதுடன் அடுத்த அமரவுக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.
இதேவேளை நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.
இதற்கமைய பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி வைபவரீதியாக முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.