- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது’ எனக் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
‘குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது,’ என அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
‘அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க நினைத்ததுதான் பிரச்னைக்குக் காரணம்,’ என அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
ஏழு ஆண்டுகள் கடந்தும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை முடிவடையாதது ஏன்? அரசு வழக்கறிஞரின் பதில் என்ன?
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.
இந்தச் சம்பவத்தில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதிமுகவின் முந்தைய ஆட்சியில் வழக்கின் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
‘சசிகலாவுக்கு தெரியும்’
இந்த நிலையில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘இந்த வழக்கில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் உறவினர்கள் இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவின் மீதான விசாரணையில், எஸ்டேட் மேலாளர் நடராஜனை தவிர மற்றவர்களை விசாரிப்பதற்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், `எஸ்டேட்டில் காணாமல் போன பொருட்கள் என்ன என்பது சசிகலா மற்றும் இளவரசிக்கு தெரியும். இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரிகள் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை’ என மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது?
நவம்பர் 15 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பிருப்பதாக வாதிட்டார்.
மேலும், ‘நீலகிரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்ப முடியாது’ என நீதிபதி உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
இதையடுத்து, “தற்போது பழனிசாமி முதலமைச்சராக இல்லாத நிலையில் அவரை எதிர்த்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது?” என நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவரும், இந்நாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
இதுதொடர்பாக, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து புகார் மனுவையும் கொடுத்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கோடநாடு வழக்கின் மேலதிக விசாரணையை தி.மு.க அரசு தொடங்கியது.
தற்போது வரை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
268 சாட்சிகள், 8 ஆயிரம் பக்க ஆய்வறிக்கை
அரசியல் ரீதியாக இந்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தவே, கடந்த ஜூன் 29ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கோடநாடு வழக்கு தொடர்பான விவரங்களைச் சுட்டிக் காட்டினார்.
இவ்வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எட்டு செல்போன்கள் மற்றும் நான்கு சிம்கார்டுகள் கோவை வட்டார தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தடயவியல் துறையிடம் இருந்து எட்டாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளதால், இன்டர்போல் போலீஸ் உதவியுடன் விசாரிக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
இந்த நிலையில்தான், தற்போது ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
‘அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு’
“பொதுவாக எந்த வழக்கு வந்தாலும் நீதிமன்றத்தில் சில கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம். நீதிபதிகளுக்கு உள்ள சந்தேகங்களை வாதி, பிரதிவாதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் அதிமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இதே மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், வழக்குக்குத் தேவையற்ற நபர்களை விசாரிக்க வேண்டாம் எனக் கூறி தள்ளுபடி செய்தது.
அப்படியிருந்தும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. பிரதமரை விசாரிக்க வேண்டும் எனக் கூறினால், பிரதமரையும் விசாரிப்பார்களா? குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூறுவதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இதில், பழனிசாமி விசாரிக்கப்படுவாரா என்ற கேள்விக்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் அவர்.
அரசு வழக்கறிஞர் சொல்வது என்ன?
இந்தக் கூற்றை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய கோடநாடு வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமின்றி யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்” என்கிறார்.
பழனிசாமியை விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஷாஜகான், “இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சயான் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ‘வழக்கைக் கடந்த ஆட்சியில் சரியாக விசாரிக்கவில்லை. நீதிமன்றமும் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் கோரியிருந்தார். சிறையில் இருந்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்தார்,” என்று தெரிவித்தார்.
அதன் நகல் காவல்துறைக்கும் வந்ததாகவும், குற்றம் சுமத்தப்பட்டவரே விசாரணை ஒருதலைப்பட்சமாக இருந்ததாகக் கூறுவதால், மேலதிக விசாரணையை நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஷாஜகான் நடந்தவற்றை விவரித்தார்.
மேலும், ஏற்கெனவே அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுவிட்டதால், குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பில் விசாரிப்பதற்குப் பத்து நபர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டதாகவும், அதில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருடைய பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் ஷாஜகான் கூறுகிறார்.
ஏழு ஆண்டுகள் கடந்தும் தாமதம் ஏன்?
‘ஏழு ஆண்டுகள் கடந்தும் வழக்கின் போக்கில் முடிவு எட்டப்படாதது ஏன்?’ என்ற பிபிசி தமிழின் கேள்விக்குப் பதிலளித்த ஷாஜகான், “2017ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. 2024ஆம் ஆண்டில் இதை விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இதில் தொடர்புடையவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆதாரங்கள். இதற்காக பி.எஸ்.என்.எல் உள்படப் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தினோம். எங்கிருந்து எல்லாம் அழைப்பு சென்றுள்ளது என்பதை விசாரிப்பது மிகப் பெரிய வேலையாக உள்ளது,” என்று கூறினார்.
குறிப்பாக, ஒரு மாதத்தில் மட்டும் 9,000 செல்போன் எண்களை ஆய்வு செய்திருப்பதாகவும், சந்தேக வளையத்தில் இருந்த எண்களில் இருந்து எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளது என பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடம் கேட்டிருந்ததாகவும் கூறுகிறார் அரசு வழக்கறிஞர் ஷாஜகான்.
அப்போது, “அவர்கள் 18,000 பக்கங்களுக்கு தரவுகளைக் கொடுத்தார்கள். அதையெல்லாம் வடிகட்டும் பணியில் ஈடுபட்டோம். வெளிநாடுகளில் இருந்து பேசப்பட்ட எண்கள் கிடைத்தன. அதை விசாரிப்பதற்கு இண்டர்போல் உதவி தேவைப்பட்டது” என்கிறார்.
அந்தக் கட்டத்தில், இன்டர்போல் காவல்துறைக்கு எனச் சில நடைமுறைகள் உள்ளதாகவும் அவற்றைக் கடைபிடித்து முறையாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் வழக்கின் தற்போதைய நிலை குறித்து ஷாஜகான் விவரித்தார்.
அதோடு, “கடந்த ஆட்சியில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை வேகமாக முடிக்க நினைத்ததுதான் பிரச்னை” எனக் கூறும் ஷாஜகான், “ஆட்சி மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு எப்போதோ முடிந்திருக்கும். மேலதிக விசாரணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அவர்களும் விசாரிக்க அனுமதி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறோம்” என்றார்.
அதிமுக சொல்வது என்ன?
இந்தக் கருத்தை மறுக்கும் அதிமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல், கோடநாடு வழக்கில் தேவையான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்துவிட்டதாகக் கூறுகிறார்.
“வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர்களைக் கைது செய்து, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எங்களுக்கு உள்நோக்கம் இருந்திருந்தால் இவற்றை ஏன் செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
அதுமட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 60 நாள்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததாகக் கூறிய அவர், “கோடநாடு வழக்கு மட்டும் அரசியல் உள்நோக்கத்துடன் விவாதிக்கப்படுவதாகவும், அதனாலேயே நான்கு ஆண்டுகள் கடந்தும் வழக்கு விசாரணை முடிவுக்கு வரவில்லை எனவும்” கூறுகிறார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் கேள்வி கேட்பதால் மட்டுமே இது முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை” என்கிறார் அவர்.
ஆனால் அரசு வழக்கறிஞர் ஷாஜகான், “குற்றவாளிகளை முடிவு செய்துவிட்டு இந்த வழக்கின் விசாரணையை நாங்கள் நடத்தவில்லை. எங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறோம். நீதிமன்றத்துக்கு ஆதாரம்தான் தேவை. ஊகத்தின் அடிப்படையில் எந்த வேலையையும் செய்ய முடியாது,” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.