குறைந்த வருவாய் ஈட்டும் ஆண்களிடையே ‘குழந்தையின்மை’ அதிகமாக இருப்பது ஏன்?
- எழுதியவர், ஸ்டெஃபானி ஹெகார்டி
- பதவி, மக்கள்தொகை செய்தியாளர்
நன்கு படித்து, வேலைக்குச் சென்று, தொழிலில் முன்னேற்றமடையும் ஆர்வத்தோடு இருக்கும் படித்த, நகர்ப்புற பெண்களை குறித்து, “குழந்தை இல்லாத பூனைப் பெண்கள்” என்று அமெரிக்கத் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸ் தேர்தல் சமயத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லையென்றால், காரணம் கேட்டு எழுப்பப்படும் கேள்வி, பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கும்.
ஆனால், ஏன் குழந்தை இல்லை என்ற கேள்வி தற்போது பெண்களை விட ஆண்களை நோக்கி அதிகமாக எழுப்பப்படுகின்றது.
சமீபகால ஆராய்ச்சியில், குழந்தை பெற விரும்பினாலும் வேறு பல காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக ஆண்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது . அதிலும் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட ஆண்களால் தந்தையாக முடிவதில்லை.
குறைவாக சம்பாதிக்கும் ஆண்களில் 72% ஆண்களுக்கு குழந்தையில்லை எனவும், அதிக வருமானம் ஈட்டும் ஆண்களில் 11% பேருக்கு மட்டுமே குழந்தையில்லை எனவும் நார்வேயில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அப்படி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஆண்களில் ராபின் ஹாட்லியும் ஒருவர். அவர் பல்கலைக் கழகத்திற்குச் சென்று படிக்கவில்லை. ஆனால் மான்செஸ்டரை தளமாகக் கொண்ட ஒரு பல்கலைக்கழக ஆய்வகத்தில் தொழில்நுட்ப புகைப்படக் கலைஞராக பணியாற்றினார்.
தனது 30 வயதுக்குள் தந்தையாக வேண்டும் என மிகவும் விரும்பினார். ஆனால் அதற்காக அதிக சிரமங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 20 வயதில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. பிறகு அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது.
அதனால் 30 வயதில் வாழ்க்கைத் துணையின்றி தனிமையில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அதிகமாக பண நெருக்கடியும் இருந்ததால், டேட்டிங் செல்வதும் அவருக்கு சவாலாக இருந்துள்ளது.
அவரது நண்பர்களும் சக ஊழியர்களும் குழந்தை பெற்று கொள்ளத் தொடங்கிய போது அவர் ஒரு வெற்றிடத்தை உணர்ந்துள்ளார்.
“குழந்தைகளுக்கான பிறந்தநாள் அட்டைகளையும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பொருட்களையும் காணும் போதும், மற்றவர்களைப் போல் நானும் ஒரு அப்பாவாக இல்லை என்பது நினைவுக்கு வரும். ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக வலி தரும்” என்றும் அவர் கூறுகிறார்.
அவரைப் போன்று தந்தையாக விரும்பும் ஆண்கள், குழந்தை பெற்று கொள்ள தடையாக இருக்கும் காரணிகளை குறித்து ஒரு புத்தகம் எழுத அவரது அனுபவம் அவரைத் தூண்டியது.
அதுகுறித்து ஆராயும் போது, ”பொருளாதாரம், திருமணம், வேலை போன்று வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளின் காலம், உறவுத் தேர்வு ” போன்று பலவற்றால் ஆண்கள் குழந்தையின்மையால் பாதிப்படைந்திருப்பதை அவர் உணர்ந்தார்.
குழந்தைகள் இல்லாத ஆண்களுக்கு முதுமை மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான உதவித்தொகை இல்லாததையும் தேசிய புள்ளிவிவரங்களில் அவர்களைக் குறித்த பதிவுகள் இல்லாததையும் அவர் கவனித்தார்.
பிரிட்டனில் குழந்தை இல்லாத மற்ற ஆண்களை ஹாட்லி நேர்காணல் செய்துள்ளார். அவர்கள் அனைவரும் சோகத்தையும் இழப்பையும் வெளிப்படுத்தினர், மேலும் “தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைவதாக” அந்த நேர்காணலில் சொன்னார்கள்.
இந்த வாரம், பிரிட்டன் மற்றும் வேல்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.44 என்று பிறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றது. 2022 ஆம் ஆண்டில் சீனா தனது 60 ஆண்டுகளில் முதல் மக்கள்தொகை வீழ்ச்சியைப் பதிவு செய்த போது, அமெரிக்காவின் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவில் இருந்துள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், குழந்தை இல்லாதவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்கள் உலகெங்கிலும் வித்தியாசமாக சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிடுவது கடினம், ஆனால் கிழக்கு ஆசியாவில் குழந்தையின்மை விகிதம் 30% அதிகமாக உள்ளது. பிரிட்டனில் இது 18% ஆக உள்ளது.
சமூக குழந்தையின்மை விகிதம் ஏன் உயர்ந்துள்ளது?
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதது சிலருக்கு சுய விருப்பம் சார்ந்தது. மற்றவர்களுக்கு, இது உயிரியல் கூறுகள் சம்பந்தபட்டது.
பிரிட்டனில் உள்ள ஏழு தம்பதிகளில் ஒருவரை குழந்தையின்மை பாதிக்கிறது.
ராபின் போன்ற இன்னும் பலருக்கு, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். கடன் பிரச்னை, சரியான நேரத்தில் தங்களுக்கு ஏற்ற துணையை சந்திக்காதது போன்று குழந்தையின்மைக்கு பல காரணிகள் சொல்லப்படுகின்றன.
இப்படி ஒவ்வொருவருக்குமான காரணங்கள் வேறுபடும்.
பெரிய அளவில் பலருக்கும் இது நடப்பதால் தான் இதனை “சமூக குழந்தையின்மை” என்று குறிக்கின்றோம்.
பின்லாந்தின் மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியலாளர் மற்றும் மக்கள்தொகை நிபுணரான அன்னா ரோட்கிர்ச், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா மற்றும் பின்லாந்தில் கருவுறுதல் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
குழந்தையின்மைக்கு புது காரணங்கள் இருப்பதையும் குழந்தைகளை நாம் பார்க்கும் விதத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தையும் அவர் கவனித்துள்ளார்.
“முன்பெல்லாம் திருமணத்தைப் போலவே, குழந்தை பெறுவது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது. உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள மக்கள் விரும்பினர். ஆனால், இப்போது மற்ற கடமைகளையெல்லாம் முடித்த பிறகு தான் குழந்தை பெறுவது குறித்து பலரும் யோசிக்கின்றனர்” என்று பேராசிரியர் ரோட்கிர்ச் கூறுகிறார்.
ஆசியாவிற்கு வெளியே, உலகிலேயே குழந்தையின்மை விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் பின்லாந்தும் ஒன்று.
ஆனால் 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில், குழந்தைகள் நலன் சார்ந்த திட்டங்களை பின்லாந்து வரையறுத்தது. அத்திட்டங்கள் , குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை எதிராக சிறந்த பலனைத் தந்ததாக உலக அளவில் கொண்டாடப்பட்டது.
பெற்றோர் எளிதில் வேலைகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். எளிதான குழந்தை பராமரிப்புச் செலவுகள், வீட்டு வேலைகளில் ஆண்களும் பெண்களும் சமமாக பங்கு கொள்ளுதல் என பல நல்ல நடைமுறைத் திட்டங்கள் அந்நாட்டில் உள்ளன.
ஆனாலும் 2010 இல் இருந்து, நாட்டின் கருவுறுதல் விகிதம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
“ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது தங்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையை இன்னும் ஒருபடி அதிகரிக்கின்றது” என்று பலரும் நினைப்பதாக பேராசிரியர் ரோட்கிர்ச் விளக்குகிறார்.
பின்லாந்தில், பணக்காரப் பெண்கள் சுய விருப்பமின்றி இருப்பதைத் தவிர, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை.
ஆனால், அதேசமயம் குறைந்த வருமானம் கொண்ட ஆண்கள் அதிகம். கடந்த காலத்திற்கும் தற்காலத்துக்குமான பெரிய மாற்றம் இது.
வரலாற்று ரீதியாக, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முன்னதாகவே குழந்தை பெற விரும்பினர். பொருளாதாரத் தேவைகளுக்காக அவர்கள் கல்வியை விட்டுவிட்டு, வேலைகளுக்குச் சென்று, இளம் வயதிலேயே திருமணம் முடிந்து தங்களுக்கான குடும்பங்களைத் தொடங்கினார்கள். குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்.இந்த போக்கு ஐரோப்பாவில் மற்ற இடங்களிலும் நடந்துள்ளது.
ஆனால்,”இப்போது மிகவும் பின்தங்கிய மக்கள், குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு குடும்பத்துக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வது அவர்களுக்குக் கடினமாக உள்ளது“ என்று சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை ஆய்வாளரான பெர்னிஸ் குவாங் கூறுகிறார்.
டாக்டர் குவாங் , இங்கிலாந்தில் உள்ள இளைஞர்களின் குழந்தை பெறும் ஆர்வத்தை ஆய்வு செய்த போது, ஆய்வு முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி அளித்தன.
15 ஆண்டுகளுக்கு முன்பு 7-8% இளைஞர்கள் மட்டுமே குழந்தை பெற விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், தற்போது 18 முதல் 25 வயதுடைய 15% இளைஞர்கள் குழந்தை பெற விரும்பவில்லை என்கின்றனர். இது கடந்த காலத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.
“இன்னும் குழந்தைகளைப் பெறாத, பாதிக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் குழந்தை பெற விரும்பவில்லை அல்லது அதுகுறித்து உறுதியாக இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றும் கூறினர். “குழந்தை பெறுதல் குறித்து மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம் இது“ என்கிறார் டாக்டர் குவாங்.
குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து எதிர்மறையாக பதிலளித்தவர்கள் பொருளாதாரப் பாதுகாப்பற்றவர்களாக இருந்தனர்.
இளைஞர்கள் தங்கள் பெற்றோரை விட, தங்களின் வாழ்க்கைத் தரம் குறைவாக இருப்பதாய் உணர்ந்து குழந்தை பெற விரும்பவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் கடன் பெறுவதற்கான சராசரி வயது முப்பதுகளின் நடுப்பகுதி என்று ஒருவர் கருதும் போது, குழந்தைப் பராமரிப்புக்கான செலவுகளையும் மறுபுறம் செய்ய வேண்டும். அதனைச் சமாளிக்க வழி கண்டுபிடிக்க பெற்றோர்கள் திணறுகிறார்கள் என்று டாக்டர் குவாங் கூறுகிறார்.
ஆண்களுக்கான நெருக்கடி
ஆண்களைப் பொருத்தவரை, பொருளாதாரத் சிக்கல்கள் குழந்தையின்மையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது,
சமூகவியலாளர்களால் இது “தேர்வு விளைவு” (“the selection effect” ) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, பெண்கள் ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அதே சமூக வகுப்பினரை அல்லது அதற்கு மேற்பட்டவர்களைத் தேடுகிறார்கள்.
“அறிவுடனும் நம்பிக்கையுடனும் எனது எல்லையில் இருந்து நான் முயற்சி செய்துள்ளேன். இதுகுறித்து மேலும் சிந்தித்தால், தேர்வு விளைவு, குழந்தையின்மைக்கு ஒரு காரணியாக இருந்திருக்கலாம்” என்று தான் நினைப்பதாக ராபின் ஹாட்லி கூறுகின்றார்.
முப்பதுகளின் பிற்பகுதியில், அவர் தனது தற்போதைய மனைவியைச் சந்தித்தார். குழந்தைகளைப் பற்றிப் பேசத் தொடங்கிய நேரம், வயது நாற்பதைத் தாண்டிவிட்டது.
“அவள் இல்லாவிட்டால் நான் இப்போது இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன்.” என்று பல்கலைக் கழகம் சென்று முனைவர் பட்டம் பெறுவதற்கான தன்னம்பிக்கையைப் பெற அவரின் மனைவி உதவியதாக அவர் கூறுகிறார்.
உலகெங்கிலும் உள்ள 70% நாடுகளில் கல்வியில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
இதனை யேல் சமூகவியலாளர் மார்சியா இன்ஹார்ன் “இனச்சேர்க்கை இடைவெளி” என்று அழைத்தார்.
மேலும் ஐரோப்பாவில், பல்கலைக் கழகப் பட்டம் இல்லாத ஆண்களே குழந்தை இல்லாதவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கண்ணுக்குத் தெரியாத மக்கள்தொகை
பெரும்பாலான நாடுகளைப் போலவே, பிரிட்டனிலும் குழந்தையில்லாத ஆண்கள் குறித்த தரவு இல்லை.
ஏனெனில் அவர்கள் ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் போது தாயின் கருவுறுதல் வரலாற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.
குழந்தை இல்லாத ஆண்கள் அங்கீகரிக்கப்பட்ட “பிரிவாக” இல்லை என்பதே இதன் பொருள்.
இருப்பினும் சில நார்டிக் நாடுகள் இரண்டையும் எடுத்துக் கொள்கின்றன.
கடந்த 2021-ல் நடத்தப்பட்ட நார்வே ஆய்வில், கணிசமான எண்ணிக்கையிலான ஆண்கள் “பின்தங்கியவர்களாக” இருப்பதைக் கண்டறிந்தனர்.
“மிகவும் ஏழ்மையான ஆண்களிடையே குழந்தையின்மை அதிகமாக உள்ளது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் “குழந்தையின்மை விகிதத்தில் இந்த ஆண் – பெண் சமத்துவமின்மை காலப்போக்கில் விரிவடைந்து வருகிறது”.
ஒப்பீட்டளவில் “பெண் கருவுறுதல் விகிதம் பற்றி ஏற்கனவே அதிகம் அறியப்பட்டுள்ளது. ஆண் கருவுறுதல் விகிதம் பற்றி குறைவாகவே அறியப்படுகிறது” என்றும் அந்த ஆய்வாளர்களின் கூறுகின்றனர்.
“பிறப்பு விகிதம் குறைவதில் ஆண்களின் பங்கு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல்’ பற்றி ஆய்வு செய்யும் வின்சென்ட் ஸ்ட்ராப் கூறுகிறார்.
பெண்கள் சமூகத்தில் அதிகாரம் பெறுவதும், ஆண்கள் மற்றும் ஆண்மை சார்ந்த எதிர்பார்ப்புகள் பெண்களிடம் மாறி வருவதும் ஆண்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஆண்மைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அதே பிரச்சினைகள் உறவு முறைகளையும் சீர்குலைக்கின்றன.
பின்லாந்தில் திருமணத்திற்கு வெளியே நடப்பவை பற்றிய ஆய்வுகளும் உள்ளன.
கடந்த காலத்தில், தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு குழந்தையைப் பெற்று, திருமணம் செய்து மற்றொரு குழந்தையைப் பெறுவார்கள். இப்போது ஒன்றாக வாழும் தம்பதிகள் அடிக்கடி பிரிந்து விடுகிறார்கள்.
குழந்தையின்மைக்கான காரணங்களில் இதுவும் ஒன்று என பேராசிரியர் ரோட்கிர்ச் கூறுகிறார்.
ஆண்-பெண் உறவு முறைக்கு இடைஞ்சலாக இருக்கும் அதிக செல்போன் பயன்பாடு, வேலை அழுத்தம், போட்டி நிறைந்த உலக வாழ்க்கை என பல புறக் காரணிகளின் மத்தியில் தம்பதிகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை அணுகுவதில் வேறுபாடு உள்ளது.
மேலும் “ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகளில் வேறுபாடுகளை நாங்கள் காண்கிறோம்,” என்கிறார் வின்சென்ட் ஸ்ட்ராப் .
பெண்களுக்கு இடையூறாக இருக்கும் அவர்களின் பாலின பங்கு
30 வயதான மார்தா பாவோ, ஷாங்காயில் வசிக்கிறார்.
அங்கு அவர் மனித வளத் துறையில் பணிபுரிகிறார். தாயாக வேண்டும் என்ற ஆர்வமில்லாத பல பெண்களில் அவரும் ஒருவர்.
2019 ஆம் ஆண்டில், சீனாவில் 30 வயதிற்குட்பட்டவர்களில் 4.5% பேர் குழந்தை பெற விரும்பவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 9.5 சதவீதமாக , இரு மடங்கு அதிகரித்துள்ளது. அந்த புள்ளிவிவரங்களில் ஆண் – பெண் இடையே வேறுபாடு இல்லை.
ஆனால் மார்த்தா தனது பெண் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற விரும்பவில்லை என்று கூறுகிறார்.
சீனாவில் குழந்தைகளை பராமரிக்கும் சுமை தாய்மார்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த முடிவு குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
“ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது நிறைய பொறுப்புகளை எடுத்துக் கொள்வது என்று நான் நினைக்கிறேன், அவற்றை நான் ஏற்க விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்,” என்றும் அவர் விளக்குகிறார்.
என்ன செய்ய முடியும்?
“கருவுறுதல் பற்றிய உரையாடல் கிட்டத்தட்ட முழுக்கமுழுக்க பெண்களை மையமாகக் கொண்டது. அதைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட எந்தக் கொள்கையும் பலன் அளிக்கவில்லை. இதுவும் பிறப்பு விகிதங்கள் குறைவதற்கு மற்றொரு காரணம்” என ஸ்ட்ராப் மற்றும் ஹாட்லி சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆண்களின் உடல்நலப் பிரச்சினையாக கருவுறுதலைப் பற்றி நாம் கவனிக்க வேண்டும் என்றும் ஆண்கள் ஒரு தந்தையாக தங்களது குழந்தைகளை பராமரிப்பதன் நன்மைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் ஸ்ட்ராப் நம்புகிறார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தில் 100 ஆண்களில் ஒருவர் மட்டுமே குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, பிற கடமைகளை தள்ளி வைப்பது போன்ற பெரிய முடிவுகளை எடுக்கின்றார். ஆனால் மூன்றில் ஒரு பெண் இத்தகைய முடிவு எடுத்து குழந்தை வளர்ப்பில் ஈடுபடுகிறார்” என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு குழந்தையை வளர்ப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்கு மலையளவு சான்றுகள் இருந்தபோதிலும் நிஜத்தில் நிலைமை அதுதான்.
இது குறித்து மேலும் அறிய “எங்களுக்கு சிறந்த தரவு தேவை” என்கிறார் ராபின் ஹாட்லி.
“ஆண்களின் கருவுறுதல் விகிதம் பதிவு செய்யப்படும் வரை, நம்மால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது . அல்லது அது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவையாவது நாம் பதிவு செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.
கருவுறுதல் குறித்த விவாதங்களில் ஆண்களின் பங்கு பதிவு செய்யப்படவில்லை.
கருவுறுதலைப் பற்றி இளம் பெண்கள் அதிகம் சிந்தித்து, விழிப்புணர்வு இருந்தாலும், ஆண்களிடையே இது குறித்து சிறு உரையாடல் கூட இன்னும் இல்லை.
ஆண்களுக்கு 35 வயதிற்குப் பிறகு விந்தணுவின் செயல்திறன் குறைகிறது என்பதை விளக்கும் ஆராய்ச்சியை சுட்டிக்காட்டி , ஆண்களின் உயிரியல் கடிகாரம் குறித்து ஹாட்லி கூறுகிறார். மேலும் இளைஞர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
எனவே இந்த கண்ணுக்குத் தெரியாத குழுவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக குழன்தையின்மையை சமாளிப்பதற்கான ஒரு வழியாகும். குழந்தை வளர்ப்பு குறித்து மேலும் உரையாடுவது மற்றொரு வழியாகும்.
குழந்தையின்மை பற்றி கருத்து தெரிவித்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் “குழந்தை இல்லாத ஆண்கள் அனைவரும் இன்னும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் உடையவர்களாக “ இருப்பதை சுட்டிக்காட்டினர்.
இது நடத்தை சூழலியல் நிபுணர்களால் ‘ அலோபேரன்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.
“நமது பரிணாம வளர்ச்சியின் பெரும் பகுதியில், ஒரு குழந்தைக்கு பத்துக்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்கள் இருந்தனர்”,என்று அன்னா ரோட்கிர்ச் விளக்குகிறார்.
டாக்டர் ஹாட்லி தனது ஆராய்ச்சியில் பேசிய குழந்தையில்லாத ஆண்களில் ஒருவர் கூறிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அந்த நபர், தனது உள்ளூர் கால்பந்து கிளப்பில் தவறாமல் ஒரு குடும்பத்தை சந்தித்து வந்துள்ளார். அதில் இருந்த இரண்டு மாணவர்களின் பள்ளி செயல் திட்டத்திற்கு, இரண்டு இளம் பையன்களுக்காக ஒரு தாத்தா – பாட்டி தேவைப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு தாத்தா – பாட்டி இல்லை.
அவர் மூன்று வருடங்கள் அவர்களின் வாடகை தாத்தாவாக இருந்தார். அதன் பிறகு, ஒரு நாள் அவர்கள் அவரை கால்பந்தாட்ட மைதானத்தில் பார்த்தவுடன், “ஹாய் தாத்தா” என்று கூறினார். அன்று ஒரு தாத்தாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவ்வாறு அழைக்கப்பட்டதை குறித்து அற்புதமாக உணர்ந்தேன், என்றார்.
“பெரும்பாலான குழந்தை இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.இது கண்ணுக்கு தெரியாதது,” என நான் நினைக்கிறேன்.
“பிறப்புப் பதிவேடுகளில் காணப்படாத இதுபோன்ற சம்பவங்கள், மிகவும் முக்கியமானவை.” என்று பேராசிரியர் ரோட்கிர்ச் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு