கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாகவும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கிடையே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புகளை அழிக்கும் வரை அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறிவருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும் உலகளவில் இது பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில் தற்போது 2வது முறையாக மீண்டும் இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இவ்வெடிப்புச் சம்பவத்தின் போது அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கார்ட்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் கார்க் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ‘இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அந்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.