இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது விருப்பு உறுப்பினராக 112,711 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இதன்படி, அவர் மக்களின் நேரடி தமிழர் தெரிவாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார்.1982 ஏப்ரல் 13ஆம் நாள் இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகருக்கு அருகில் உள்ள ஓபாத பெருந்தோட்டத்தில், சுந்தரலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையாக பிறந்த பிரதீப், வறுமையான குடும்ப பின்னணியை கொண்டிருந்தாலும், சிறுவயதிலிருந்தே தந்தையின் வழியில் சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப், தமது ஆரம்ப கல்வியை ஓபாத இலக்கம் 01 தமிழ் வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை ஸ்ரீ கிருணா மகா வித்தியாலயத்திலும் கற்றார். 2003 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட அவர்,அட்டாளைச் சேனை அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் 2007 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
பொலிஸ் சேவை அவரது அரசியல் பயணத்திற்கும் சமூக சேவைக்கும் இடையூறாக அமைந்ததால் அதிலிருந்து விலகி 2007 ஆம் ஆண்டு , இலங்கை ஆசிரியர் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் தொழிற்சங்க பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர்,2008 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாட்டின் சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தொழிற்சங்க பணியிலும் அரசியல் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு 2016 ஆம் ஆண்டு கல்வி கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்று பிரதி தலைவராக பொறுப்பேற்றார்.மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான சேவை ஆரம்பத்தில் மலையக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உரிமைக்காக குரல் கொடுத்த அவர், பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தனது தொழிற்சங்க பணிகளை விரிவுபடுத்திக் கொண்டார்.
தற்போது அவர், மக்கள் விடுதலை முன்னனியின் முக்கிய உறுப்பினராகவும்,தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப்பின் தந்தையான சுந்தரலிங்கம், தனது 18-வது வயதில் இருந்தே இடதுசாரி மார்க்சிய சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1969 மற்றும் 1970 களில் பல இடதுசாரி தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்றார். 1970 க்கு பிறகு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.
1973 தொடக்கம் 1974 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.
இந்நிலையில் “குறுகிய இனவாதத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான தோழர் ரோஹன விஜயவீரவின் கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்.
1982 ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹன விஜயவீரவை ஆதரித்து அவர் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.
1989 இல் அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக தனது குடும்பத்தை பிரிந்து இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அங்கு பல சவால்களுக்கு முகம் கொடுத்த அவர் 1994இல் மீண்டும் நாடு திரும்பி தனது கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.