by adminDev2


தமிழ்த் தேசியத்தின் மகுடமாகத் திகழும் தமிழர் தாயகத்தின் வடமாநிலம் தோல்வியால் தலைகுனிந்து நிற்கிறது. முதன்முதலாக இங்குள்ள ஐந்து ஆசனங்கள் தெற்கிடம் பறிகொடுக்கப்பட்டு விட்டது. இதன் காரணகர்த்தாவானவருக்கு தோல்வியை பரிசாக வழங்கியுள்ளனர் மக்கள். ஆனாலும் அதனை ஏற்றுக் கொண்டு விடைபெற அவர் தயாராகவில்லை. தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு இன்னும் அவருக்கு வேலை இருக்கிறது போலும்.

மெல்லென வீச ஆரம்பித்த காற்று, பெரும் புயலாகி வீச்சுக் கொண்டால் ஏற்படும் பிரளயம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை கடந்த வாரம் (நவம்பர் 14) இடம்பெற்ற இலங்கையின் பொதுத்தேர்தல் காட்டியது. இதனால் எழுந்த பெரும் அலையில் பல திமிங்கிலங்கள் கரையொதுக்கப்பட்டுவிட்டன. இப்படி நடக்குமா என்று வியப்பதற்குள் எல்லாமே மாற்றம் என்ற பெயரில் நடந்தேறிவிட்டது. 

கடந்த செப்டம்பர் 21ல் ஜனாதிபதியாகிய தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்க உலகளாவிய பார்வையில் மாக்ஸிச வெற்றிச் சின்னமாக காட்சி கொடுக்கிறார். மூன்று எம்.பிக்களோடு இருந்த இவருக்கு 159 எம்.பிக்களை கடந்த வார தேர்தல் வழங்கியுள்ளது. இப்படியொரு வெற்றியை அவர் கேட்கவில்லை. சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அறுதிப் பெரும்பான்மை (113) ஆசனங்களையே இவர் கேட்டார். ஆனால், மகாஜனங்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (159) இவருக்கு வாரி வழங்கியுள்ளனர். 

எதிர்பாராத இந்த அபார வெற்றி அநுர குமார அணியினரை நிச்சயம் திக்குமுக்காடச் செய்திருக்கும் – காரணம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லையென்று கூறித் தப்ப முடியாத நெருக்கடிக்குள் இவர்களைச் சிக்க வைத்துள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலைமையை உருவாக்கியவர்களுள்; தமிழ் மக்களும் முக்கிய பங்காளிகள். 

ஜனாதிபதி தேர்தல் என்பது ஒருவரை மையப்படுத்தியது. பொதுத்தேர்தல் என்பது பல அரசியற்கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சம்பந்தப்படுத்தியது. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்வதுடன் இது பிணைக்கப்பட்டது. அதனாற்தான், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த சூடு கலைவதற்குள் பொதுத்தேர்தலை அநுர குமார நடத்தினார். இந்தத் தேர்தல் வெற்றியை ஜே.வி.பி.யின் வெற்றி என்றோ, அல்லது தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்றோ எவரும் பார்க்கவில்லை – சர்வதேசம் உட்பட. அநுர குமார என்ற தனி ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கொண்டாடப்படுகிறது. 

‘உரை, உடை, நடை என்பவைகளை உள்ளடக்கிய ஒருவித வசீகரத்தை அநுர குமாரவிடம் மக்கள் பார்க்கின்றனர். அனைவரையும் சமமாகப் பார்க்கும் மாக்ஸிச சிந்தனை, அடித்தள மக்களின்பால் காட்டும் அதீத சிரத்தை, ஊழல் ஒழிப்பு, பொருளாதார மேம்பாட்டு ஒழுங்கமைப்பு என்பன அவர் மீதான நம்பிக்கையை மக்களிடம் ஊட்டியுள்ளது. வாதம், விவாதம் இரண்டிலும் அவரது நாவன்மை பளிச்சிடுகிறது” என்று தமிழரசு கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் நேற்று என்னுடன் உரையாடியபோது குறிப்பிட்டதைக் கேட்டு அதிர்ந்து போனேன். இதுதான் உண்மை என்றால், தமிழர் வாக்குகளை லட்சக் கணக்கில் இவரால் பெற முடிந்தது வியப்பாகத் தெரியவில்லை. 

இந்தப் பின்னணியில் பார்க்கையில் 159 ஆசனங்களை இவரால் பெற முடிந்தது புதினமன்று. கோதபாய பதவி விலகலால் ஜனாதிபதி கதிரையைப் பிடித்த ரணிலின் தலைமையிலான அணி இந்தத் தேர்தலிலும் அடியோடு சரிந்துள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு ராஜபக்சக்களை அசைக்க முடியாதென்று கோசம் இட்டவாறு நாட்டை நாசமாக்கியவர்களை மக்கள் விரட்டி விட்டனர். சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதிகள் செல்லாக் காசாகி காணாமல் போயுள்ளனர். 

எல்லாமே சாதகமாகக் காணப்படும் சமகாலச் சூழலை உள்;ராட்சிச் சபைகளை கைப்பற்றுவதற்கான காலமாக அநுர குமார அணி பார்க்கிறது. இதனால் இதற்கான தேர்தல்களை அடுத்த சில மாதங்களுக்குள் நடத்த ஏற்பாடாகி வருகிறது. 24 மாநகர சபைகள், 41 பட்டின சபைகள், 275 பிரதேச சபைகளுக்கு இந்தத் தேர்தல் நடத்தப்பட போகிறது. சாதாரண மக்களின் அடிமட்ட அரசியல் பங்களிப்புக்கானவைகளாக அமையும் இச்சபைகளை வென்றுவிட்டால் குட்டித்தீவு முழுவதுமே ஒரு கைக்குள் வந்துவிடும். இது இன்னொரு சூறாவளியாக மாறும். தேர்தலின் முடிவு ஒற்றைக்கட்சி ஆட்சியை இன மத வர்க்க பேதமின்றி மக்கள் அனுபவிப்பதற்கு அமைவது தவிர்க்க முடியாததாகும். 

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பலரது பார்வையையும் ஒன்றுசேர திரும்பிப் பார்க்க வைத்தது தமிழர் தரப்பிலிருந்து அநுர குமாரவுக்குக் கிடைத்த அபார வரவேற்பு. சாதாரணமான வரவேற்பாக ஓரிரு ஆசனங்களை தமிழர் பிரதேசங்களிலிருந்து இவர் பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட வேளையில், எதிர்பாராதவாறு தமிழ் தேசியத்தை காணாமல் செய்யும் வகையில் வெற்றி கிடைத்துள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு ஆசனங்களில் மூன்றை அநுர குமார பெற்றுள்ளார். வன்னி மாவட்டத்தில் இரண்டை இலகுவாக வசமாக்கியுள்ளார். மொத்தத்தில் வட மாகாணத்தில் ஐந்து தமிழர் அநுர குமார அணியில் வெற்றி பெற்றுள்ளது ஒரு வரலாற்றுச் சாதனை. இதுபற்றி சர்வதேசம் எவ்வாறு பார்க்கிறது என்பதற்கு ஓர் உதாரணமாக அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பந்தியை இங்கு பார்ப்பது பொருத்தமானது. 

‘இது பெரிய ஆச்சரியம். நாட்டின் தேர்தல் நிலப்பரப்பில் பெரியதொரு மாற்றமாக அவரது (அநுர குமார) கட்சி வடக்கில் தமிழின மக்களின் இதயப் பகுதியான யாழ்ப்பாண மாவட்டத்தையும், மற்றும் பல சிறுபான்மையினரின் கோட்டைகளையும் வென்றுள்ளது. யாழ்ப்பாண வெற்றியானது, சுதந்திரம் பெற்றதிலிருந்து வடக்கின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ் இனவாதக்  கட்சிகளுக்கு பெரும் பாதிப்பைக் குறிக்கிறது. பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள் மீது நீண்டகாலமாக சந்தேகம் கொண்டிருந்த தமிழர்களின் அணுகுமுறையிலும் இது பெரிய மாற்றமாகும். சிங்களவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அரசாங்கங்களால் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கூறி, தனியொரு தாயகத்தை உருவாக்க 1983-2009ல் தமிழின கிளர்;ச்சியாளர்கள் தோல்வியுற்ற உள்நாட்டுப் போரில் ஈடுபட்டனர்” என்று அசோசியேட்டட் பிரஸ் கூறியுள்ளதை மறுப்பதற்கில்லை. 

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வெறியாட்டம் மேற்கொண்டமை, மகிந்த ராஜபக்ச தமிழின படுகொலையை மேற்கொண்டபோது அதற்குத் தேவையான படைத்துறை ஆளணியை சேர்த்துக் கொடுத்தமை, 13ம் திருத்தத்தில் இடம்பெற்ற வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அலகை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இல்லாமற் செய்தமை போன்றவைகளை அநுர குமார தரப்பினர் கடந்த காலங்களில் மேற்கொண்டனர் என்பதையும் மறந்து தமிழர்கள் இப்பொதுத் தேர்தலில் அவருக்கு அமோக ஆதரவு வழங்கினர் என்பது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான். 

முன்னைய சிங்களத் தலைவர்களுக்கு அவ்வப்போது ஆதரவு வழங்கி, தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்தோம். அநுரவுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் என்பதிலும் பார்க்க, தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றி எத்திப் பிழைக்கும் அரசியல் நடத்தும் தமிழ் கட்சிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமென்ற சிந்தனையே இந்த மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதே யதார்த்தம். அதிலும் முக்கியமாக, முள்ளிவாய்க்கால் 2009 மௌனத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தலைவர்கள் உருட்டி விளையாடி மக்களை ஏமாற்றியதற்கு தண்டனை வழங்க வேண்டுமென்ற நோக்கமும் அநுர குமாரவுக்கான ஆதரவுக்கு காரணமாக இருந்தது. 

இதிலும் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான கூட்டு தமிழ் இளையோர் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டகம் என வர்ணிக்கப்பட்ட சுமந்திரன் அதற்கேற்றாற்போல் முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைத்தெறிந்தார். பின்னர் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தினார். அதன் தலைமை பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னர் தலைமைப் பீடத்திலேயே கை வைக்கத் தொடங்கினார். 

அதேசமயம், தெற்கில் ரணில், சஜித், அநுர ஆகியோருடன் வெவ்வேறு தளங்களில் தமது சுயதேவைக்காக தமிழ்த் தேசியத்துக்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார். ஜே.வி.பி. வடக்கில் நடத்திய மே தின கூட்டத்தில் செஞ்சட்டை அணிந்து அநுர குமாரவுடன் முன்வரிசையில் சென்றார். செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் வாக்குகளை சஜித்துக்கு அள்ளிக் கொடுக்க அவரது மேடையேறி உரையாற்றினார். அநுர குமாரவின் பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் விவகாரப் பகுதியை தாமே தயாரித்துக் கொடுத்ததாகக் கூறி புளகாங்கிதம் அடைந்தார். இவரை சட்ட மாஅதிபர் என்று ரணில் புகழாரம் சூட்டியதையும் மறந்துவிட முடியாது. 

பொதுத்தேர்தலில் இவர் வென்றால் அதற்கான சன்மானம் அமைச்சர் பதவி என்றும் கூறப்பட்டது. தமிழருக்கு இன்னுமொரு லக்~;மன் கதிர்காமரா என்று பலரை கேட்கவும் வைத்தார். இப்படியெல்லாம் நாடகம் ஆடியவருக்கு தேர்தல் மூலம் சரியான பாடத்தை மக்கள் புகட்டினர். யாருக்கு வாக்களிப்பது என்பதைவிட யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்ற பட்டியலில் தமிழ் மக்களிடையே முதலிடம் பெற்றிருந்தவர் சுமந்திரனேதான். பல தடவை வாக்குத் தவறிய இவரை தங்கள் வாக்குகளால் தோற்கடித்து தங்கள் முடிவை பொதுமக்கள் பதிவு செய்தனர். 

தேர்தலில் தோற்றால் தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி.யாக மாட்டேன் என்று கூறிய சத்தியவாக்கை மறந்த சத்தியவானான இவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் தேசியப் பட்டியல் எம்.பி.யை ஏற்பேன் என்று இப்போது கூறுவதை அரசியல் விபசாரம் என்றில்லாமல் வேறு எவ்வாறு கூற முடியும்? மத்திய குழு என்பதே இவரது ஆட்கள் அடங்கிய குழு என்பதை தேர்தல் அபேட்சகர் நியமனம் அம்பலப்படுத்தியது. இப்போது அதே குழுதான் இவரை தேசியப் பட்டியலுக்கும் தெரியப் போகிறதாம். 

பின்கதவால் (தேசியப் பட்டியல்) உள்வந்தவரை, முன்கதவால் (தேர்தலில் தோற்கடித்து) வெளியேற்றினாலும் அவர் விடுவதாக இல்லை. மீண்டும் பின்கதவால் (தேசியப் பட்டியல்) உள்நுழையவே முயற்சிக்கிறார். போக்கிரித்தனமான அரசியலுக்கு இடமளிக்காது பார்த்துக் கொள்வது மானமுள்ள தமிழரின் பாரிய பொறுப்பு. 

தொடர்புடைய செய்திகள்