2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலினூடாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்திற்கு அதிகளவான பெணகள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளாக 1989, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளைக் சுட்டிக்காட்ட முடியும். குறித்த வருடங்களில் தலா 13 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.
மேலும்,2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 12 பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர்.
ஆனால் இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளமை மிகவும் சிறப்புக்குரியது.
கொழும்பு மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹரிணி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்தார். ஆனால் ஹரிணி அந்த சாதனையும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தகத்கது.
கம்பஹா மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹேமாலி குணசேகர களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நிலந்தி கொட்டஹச்சி, ஓஷனி உமங்கா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, மலையகத்திலிருந்து இம்முறை 03 தமிழ் பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கும் தேர்வாகியுள்ளமை மிகவும் விசேட அம்சமாகும்.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட துஷாரி ஜயசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமிந்திராணி கிரியெல்லவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்திலிருந்து, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட தீப்தி வாசலகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரோஹினி குமாரி கவிரத்னவும் தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்திலிருந்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட நிலுஷா லக்மாலியும் சாகரிக்கா கங்காணி கேகாலை மாவட்டத்திலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து முது ரத்வத்தே, குருணாகல் மாவட்டத்தில் கீதா ஹேரத், புத்தளம் மாவட்டத்தில் ஹிருனி மதுஷா விஜேசிங்க மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து சதுரி கங்காணி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.