கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய சிக்கல்
- எழுதியவர், டிஃபனி டர்ன்புல்
- பதவி, பிபிசி செய்திகள், சிட்னி
“உலகில் மிக சிறப்பான கல்வி திட்டங்களை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது,” என்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த 21 வயது மாணவி அனன்யா குப்தா. ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பது என்பது அவரது கனவு.
ஜூலையில், மெல்போர்னில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக் கழகத்தில் இளங்கலை கல்வியை முடித்த அவர் சமூகப் பணியாளராக பணியாற்ற பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பித்தார். ஆஸ்திரேலியாவில் சமூக பணியாளர் போன்ற திறன்சார் வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகின்ற சூழலில், “நான் இங்கே படித்து, என்னுடைய திறனை இங்கே வழங்கி, இந்த சமூகத்திற்காக பணியாற்ற விரும்புகிறேன்,” என்கிறார் அனன்யா.
ஆனால் அனன்யா போன்று தற்போது ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், புதிதாக ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது அந்த நாட்டு அரசு எடுத்திருக்கும் சமீபத்திய முடிவு.
வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க திட்டமிட்டுள்ளது அந்த நாடு. 32 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்த திறையில் வருவாயை எதிர்பார்க்க திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், அந்த நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடினமான ஆங்கில மொழித் தேர்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பின்னணியை சரிபார்க்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதலாக, விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
உள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த திட்டம் குறித்து முறையாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என்றும், இதனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதாரம் பாதிப்பிற்குள்ளாகும், வேலைவாய்ப்புகள் பறிபோகும், ஆஸ்திரேலியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கல்வித்துறையில் இருக்கும் நபர்கள் தெரிவிக்கின்றனர்.
விருந்தோம்பலைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா இருக்காது என்ற செய்தியையே இந்த அறிவிப்பு கடத்துகிறது என்று கூறுகிறார், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களுக்கான குழுவான, க்ரூப் ஆஃப் 8′-ன் துணை செயற்தலைவர் மேத்யூ ப்ரவுன்.
கனிம வளங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் நான்காவது முக்கிய துறையாக அமைந்துள்ளது கல்வி. வெளிநாட்டு மாணவர்கள், ஆஸ்திரேலிய மாணவர்கள் வழங்கும் கட்டணங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணங்களை செலுத்துகின்றனர். ஆராய்ச்சி, நிதி உதவி மற்றும் உள்நாட்டு கல்விக் கட்டண குறைப்பு போன்றவற்றில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு அதிகம்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் 40% வருவாயை ஈட்டித் தருபவர்கள் வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வரும் மாணவர்கள் தான்.
குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார் அந்த நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பனீஸ். இது வீடுகளை எளிதில் வாங்கவும், அன்றாட வாழ்வில் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய கல்வித்துறை கூறுவது என்ன?
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு திரும்பும் வகையில் அடுத்த ஆண்டில் 2,70,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவில் படிக்க அனுமதி வழங்கப்படும் என்ற உச்ச வரம்பை ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தில் எவ்வளவு மாணவர்கள் இங்கே தங்கி படித்தனர் என்பதை ஒப்பீடு செய்வதற்கு என்பதற்கான துல்லியமான தரவுகள் ஏதும் இல்லை என்கின்றனர் கல்வி நிபுணர்கள்.
கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர், “ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திற்கும் தனித்தனி வரம்பு வழங்கப்படும். தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் அதிக இழப்பை சந்திக்கலாம். தலைநகரங்களில் உள்ள பல்கலைக்கழங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
இந்தக் கொள்கை மாணவர்களை நெரிசலான பெரிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழங்களுக்குப் பதிலாக, இரண்டாம் கட்ட நகரங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குத் மடைமாற்றம் செய்யும் என்று அரசாங்கம் கூறுகிறது.
இந்த மாற்றங்கள் வருங்கால மாணவர்களை “நெறியற்ற” கல்வி நிறுவனங்களில் இருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அரசு கூறுகிறது. சிலர் போதிய மொழித் திறன் அல்லது கல்வி தகுதி இல்லாத மாணவர்களையும், படிப்பிற்குப் பதிலாக வேலை செய்ய விரும்பும் நபர்களையும் சில கல்வி நிறுவனங்கள் சேர்ப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது அரசாங்கம்.
“சர்வதேச கல்வி மிகவும் முக்கியமானது. இந்த சீர்திருத்தங்கள் அதை சிறந்ததாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அது முன்னேறிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கிளேர் கூறினார்.
அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட முடிவா இது?
ஆஸ்திரேலியாவின் திறன்சார் இடம்பெயர்வு கொள்கையை (Australia’s skilled migration policy) வடிவமைத்த முன்னாள் அரசாங்க அதிகாரி அபுல் ரிஸ்வி இது குறித்து பேசுகையில், குறைவான நிதி ஒதுக்கப்பட்டு செயல்படும் இந்த துறை, வெளிநாட்டு மாணவர்களின் கல்வி வருவாயை நோக்கமாக கொண்டு, கற்றல் நேர்மையை தியாகம் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டார். .
சர்வதேச மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயை உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் நம்பியிருக்கிறோமா? அதை எவ்வாறு சரி செய்வது என்று கல்வி நிறுவனங்களே கேள்வி எழுப்புகின்றன என்று கூறும் பிரவுன், இந்த விவாதம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
இருப்பினும் உச்சவரம்பு அறிவிப்பு கல்வி நிறுவனங்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளது.
Go8 முன்மொழியப்பட்ட சட்டங்களை “கடுமையானது” என்று குறிப்பிடுகிறது. மற்றவர்கள் அரசாங்கம் இந்த சட்டங்களின் மூலம் பொருளாதாரத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். சர்வதேச மாணவர்களை குடியேற்ற விவகாரத்திற்கு எதிராக நடைபெறும் தேர்தல் போரில் இலக்காக மாற்றியுள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த உச்ச வரம்பு எவ்வளவு காலம் இருக்கும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் பொருளாதார இழப்பு குறித்து பிரவுன் பின்வருமாறு தெரிவிக்கிறார். “Go8-ன் கணக்குப்படி, முதல் ஆண்டில் மட்டும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழங்கங்களில் 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான இழப்பீடுகள் ஏற்படும். பொருளாதாரத்தில் 5.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான பாதிப்புகள் ஏற்படும். இதன் விளைவாக 20,000 வேலைகள் இழக்கப்படும்,” என்று கூறுகிறார். .
ஆஸ்திரேலியாவின் கருவூலத்துறை இந்த கணிப்புகளை “சந்தேகத்திற்குரியது” என்று குறிப்பிட்டது. ஆனால் இந்த அறிவிப்பால் ஏற்பட இருக்கும் பொருளாதார தாக்கத்திற்கான மதிப்பீடுகள் குறித்து எந்தவிதமான சொந்த மாதிரியை அரசு வெளியிடவில்லை.
“சில பல்கலைக்கழகங்கள் இந்த உச்ச வரம்பு காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்வதையும், முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களை ரத்து செய்வதையும் காண இயலும். இது ஆஸ்திரேலிய மாணவர்களுக்கான கட்டண உயர்வுக்கும் வழிவகை செய்யும்” என்றும் பிரவுன் தெரிவித்தார்.
மாற்றங்களை வரவேற்கும் சிறிய பல்கலைக்கழங்கள்
உச்சவரம்பால் நன்மை அடையும் ஒரு சில சிறிய பல்கலைக்கழகங்கள் இந்த அறிவிப்பிற்கு வரவேற்கின்றன.
லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தியோ ஃபாரெல், ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் வளர்ச்சியை நிர்வகிப்பதற்கான வெளிப்படையான, விகிதாச்சார நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
“குடியேற்ற அளவைக் குறைக்க அரசியல் மற்றும் சமூக ஆதரவு இருப்பதை நாங்கள் அறிகின்றோம்,” என்றும் அவர் கூறினார்.
ஆனால் பிரவுன் ஆஸ்திரேலியாவின் நற்பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுவதோடு கனடாவின் நிலையை எடுத்துக்காட்டாக கூறுகிறார். கனடா இந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கான உச்ச வரம்பை அறிமுகப்படுத்தியது. அதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள், இந்த அறிவிப்பால் மாணவர்கள் சேர்க்கை முன்பு எப்போதைக் காட்டிலும் குறைவாக இருப்பதை தெரிவித்துள்ளன. புதிய அறிவிப்புகளால் பதற்றமடைந்த மாணவர்கள் தங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பும் நாடுகளில் படிக்க விண்ணப்பிப்பார்கள்.
“வளர்ச்சிக்கு உதவும் சர்வதேசக் கல்வி முறை நமக்குத் தேவை. அரசியல் முடிவை திருப்திப்படுத்தும் சில மனக்கணக்குகளின் அடிப்படையில் ஒருதலைப்பட்சமாக உச்சவரம்பு குறித்து அமைச்சர் முடிவெடுக்க முடியாது,” என்று தெரிவிக்கிறார் பிரவுன்.
ஆஸ்திரேலியாவில் முன்மொழியப்பட்ட வரம்புகளுக்குப் பதிலாக, குறைந்தபட்ச பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் ரிஸ்வி.
“நமக்கு நாமே சூடுபோட்டுக் கொள்வது போல் இது இருக்கிறது. இந்த அறிவிப்பு மோசமான மாணவர்களுக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது. ஆனால் நன்றாக செயல்படும் மாணவர்கள் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வேறு இடங்களுக்கு செல்வார்கள்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில், பசுமைக் கட்சியினர், இந்த கொள்கை “இன பாகுபாடு கொண்ட ஒரு தரப்பினரின் ஆதரவை பெறுவதற்காக” உருவாக்கப்பட்ட கொள்கை என்று கூறினர்.
“இந்த கடினமான உச்ச வரம்பு ஆஸ்திரேலியாவின் மனித மூலதனத்திற்கும் திறமைக்கும் தீங்கிழைக்கும். சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு எதிராக அமையக்கூடும்” என்று தி ஆஸ்திரேலியன் என்ற செய்தித்தாளிடம் ஜூலியன் ஹில் கூறினார்.
இத்தகைய விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த வாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆதரவுடன் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில கல்வி நிறுவனங்கள் கடினமான நிதிசார் முடிவுகளை மேற்கொள்ளக் கூடும் என்று கிளேர் ஒப்புக்கொண்டார், ஆனால் முன்மொழியப்பட்ட கொள்கைகள் சர்வதேச கல்விக்கான நோக்கத்தை ஒன்றுமில்லாமல் செய்கிறது என்ற விமர்சனம் தவறானது என்று கூறினார்.
மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அவை மாணவர்களிடையே மிகுந்த கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வழிகளை தேடும் மாணவர்கள்
ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய சர்வதேச சந்தை நாடுகளாக கருதப்படும் சீனாவிலும் இந்தியாவிலும் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கு இது சவாலானது. அவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வெளிநாட்டில் படிக்க பல ஆண்டுகளாக திட்டமிடுபவர்கள். அவர்களின் கனவுகள் நிறைவேறாமல் போகக் கூடும்” என்று அமிர்தசரஸை தளமாகக் கொண்ட குடியேற்ற ஆலோசகர் ருபிந்தர் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
மோனாஷ் பல்கலைக்கழத்தில் படிக்கும் வேதாந்த் கதவி, குஜராத்தில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்துள்ளனர் என்று கூறினார்.
தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக தற்போது அவர்களின் திட்டங்களில் சில மாற்றங்கள் உள்ளன. வேலை மற்றும் வாழ்க்கையை திட்டமிடுவது இங்கே சவாலாக இருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்று அவர் கூறினார்.
சீனாவில் கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு பல்கலைக்கழகத்தில் சேருவதைக் காட்டிலும், ஆஸ்திரேலியாவில் சிறப்பான கல்வியை பெறுவது மிகவும் எளிமையானது என்பதால் நான் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்து வைத்திருந்தேன் என்று கூறுகிறார் சீனாவின் அனுஹூய் மாகாணத்தில் மேல்நிலைப் பள்ளி படிப்பை படிக்கும் ஜென்னி.
இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று கூறுகிறார் அவர்.
மதிப்பீட்டில் குறைவான இடத்தில் உள்ள பிராந்திய பல்கலைக் கழங்களுக்கு செல்வதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறும் அவர், “இதற்கு நான் ஆஸ்திரேலியா செல்லாமலே இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட இந்த சட்டங்கள் இதர சங்கடமான உணர்வுகளை தூண்டிவிட்டன என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்கள் துறையின் தலைவர் ரிஷிகா அகர்வால்.
“அரசாங்கத்திடம் இருந்து குடியேறிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் மனக்கசப்பின் சமிக்ஞை இது என்று மாணவர்கள் நிச்சயமாக நினைக்கிறார்கள்.
சர்வதேச மாணவர்களால் இந்த சமூகம் அடைந்த பலன்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு போதுமான வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதும் வெறுப்பு வளர்வதற்கு காரணமாக உள்ளது.
கல்விக்காக பெரும் தொகையை செலவு செய்து அந்த தொகைக்கான வெகுமதிகள் ஏதும் கிடைக்காமல் அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
பணம் கறக்கும் இயந்திரங்களாக பார்க்கப்படுவதாக அவர்கள் உணர்கின்றனர்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வந்தாலும் கூட அனன்யா அதிகாரப்பூர்வ முதுநிலைப் பதிவுச் சான்றிதழையும் புதிய படிப்பு விசாவையும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் பல மாணவர்கள் இன்னும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
“அவர்களின் இடத்தில் நான் இருந்திருந்தால், மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பேன். இது ஆஸ்திரேலியா மீது வைத்திருந்த நம்பகத்தன்மையை பறித்துவிட்டது,” என்கிறார் ரிஷிகா.
கூடுதல் செய்திகளை வழங்கியவர்கள் ஃபான் வாங் (சிங்கப்பூர்), ஜோயா மதீன் (டெல்லி)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு