அரசு மருத்துவர்களின் அதீத பணிச்சுமையே நோயாளிகள் உடனான பிரச்னைக்குக் காரணமா?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
“எழுபது புற நோயாளிகள், 80 உள்நோயாளிகள், 30 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், நான்கு அல்லது 5 பிரசவங்கள்.” இவை ஒரு மருத்துவமனையால் ஒரே நாளில் தரப்படும் மொத்த சேவைகள் அல்ல, ஒரே ஒரு அரசு மருத்துவர் செய்ய வேண்டிய பணிகள்.
கடலூர் மாவட்டத்தில், தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையின் சூழலை பிபிசி தமிழிடம் விளக்கினார், அங்கு பொறுப்பில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர்.
“எங்கள் மருத்துவமனையில் ஏழு மகப்பேறு மருத்துவர்களுக்கான தேவை இருக்கும் நிலையில், மூன்று மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 2005இல் மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு 70 பிரசவங்கள் நடைபெற்றன, இப்போது அதே காலகட்டத்தில் 270 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இங்கு அனுமதிக்கப்பட்ட படுக்கைகள் 234 என்றாலும், நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 284 படுக்கைகள் போட்டுள்ளோம்,” என்று அவர் விவரித்தார்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் பாராட்டுக்குரிய வகையில் மேம்படுத்தப்பட்ட போதிலும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் களத்தில் இல்லை என்ற வாதம் அரசு மருத்துவர்களின் தரப்பிலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்துக்குப் பிறகு நடுத்தர மக்களும் அரசு மருத்துவமனைகளை அதிகம் நாடும் நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவர்களின் சுமை கூடுதலாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறூகின்றனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் பணியிடங்களில் சுமார் 20% காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “முதல் கட்டமாக 2553 காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டதாக” தெரிவித்தார்.
சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவப் பிரிவின் தலைவராக உள்ள பாலாஜி என்ற மருத்துவருக்கு நோயாளரின் மகன் கத்தியால் தாக்கியதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையின் சேவைத் தரம் பற்றிய விவாதம் மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையில், அங்கு போதுமான மருத்துவ இடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும் மருத்துவர்கள் விவரிக்கின்றனர்.
எஸ்.டி.பி.ஜி.ஏ எனும் அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம், “கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் துறை சார்ந்த நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் நிர்வாகத்துக்கு அடிப்படைத் தேவையான பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை ஆகிய இரண்டு துறைகள் இந்த மருத்துவமனையில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்
“இந்தத் துறைகள்தான், நோயாளிகளை முதலில் பரிசோதித்து அவர்களைச் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களுக்கு அனுப்புவர். இந்த மருத்துவமனைக்கு ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரை ஓராண்டுக் கால ஒப்பந்தப் பணியில் இயக்குநராக நியமித்துள்ளனர். இதுவும் பிரச்னையின் முக்கியக் காரணம். பணியில் இருக்கும் தகுதியான மூத்த மருத்துவரை நிரந்தரப் பணியில் ஏன் அமர்த்தவில்லை?” என்று கேட்கிறார் மருத்துவர் ராமலிங்கம்.
‘மருத்துவர்களுக்கு உணர்வுச் சுமை’
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் இந்த நிலைமை குறித்து மேலும் விவரித்தார்.
“பணிச்சுமை மட்டுமே பிரச்னையில்லை, சரியான நேரத்திற்கு சிகிச்சையைத் தொடங்க முடியாமல் அதனால் இழப்பு ஏற்பட்டால் மருத்துவர்களுக்கு அது உணர்வுச் சுமையாக மாறுகிறது. பெரும்பாலும் மதிய வேளையில் இருந்தே மருத்துவர்களால் சுழற்சி முறையில்தான் பணியாற்ற முடிகிறது. ஆள் பற்றாக்குறையால், அனைத்து நிபுணர்களும் ஒரே நேரத்தில் இருக்க முடிவதில்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு மருத்துவரே தனது துறை சார்ந்தது மட்டுமல்லாமல் பிற வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு என அனைத்தையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட்டார்.
ஒரு நோயாளியிடம் குறைந்தது 15 நிமிடங்களையாவது மருத்துவர் செலவிட வேண்டும் எனக் கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவர், “ஆனால் மூன்று மணிநேரம் வெளி நோயாளிகள் பிரிவில் செலவிட்டு 60-70 வெளிநோயாளிகளைப் பார்த்துவிட்டு வார்டுக்கு செல்லும்போது எப்படி நேரம் ஒதுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“நள்ளிரவில் நிலைமை இன்னும் மோசமாகும், அந்த நேரத்தில் 2 அல்லது 3 நோயாளிகக்கு அவசரக் கவனம் தேவைப்பட்டால், 3வது நோயாளிக்கு கவனம் தருவதற்கு 40 நிமிடங்கள் ஆகிவிடும். இதெல்லாம் உணர்வுச் சுமைதான்” என்கிறார் அவர்.
‘போதிய மருத்துவர்கள் இல்லை’
தமிழ்நாடு முழுவதுமே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணிச்சுமை இப்படித்தான் இருப்பதாகக் கூறுகிறார், அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சாமிநாதன்.
“கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, தற்போது 37 கல்லூரிகள் உள்ளன. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிக்கவில்லை. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இல்லை” என்கிறார் சாமிநாதன்.
மேலும், “மாநிலத்தில் உயர்நிலை சிகிச்சை எனப்படும் துறை சார்ந்த நிபுணர்கள் வழங்கும் மருத்துவ சேவைக்கான கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்போது அதற்குப் புதிய மருத்துவர் இடங்கள் உருவாக்கப்படும். அதுபோன்ற அதிகரிப்பு மட்டுமே இருந்து வந்தது. தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கவில்லை,” என்று தற்போதைய நிலைமை குறித்துக் கூறினார் அவர்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு 24 மணிநேர ஷிஃப்ட் வழங்கப்படுவது வழக்கம். அப்படியான ஒருநாள் பணியை பிபிசி தமிழிடம் பேசிய அரசு மருத்துவர் விவரித்தார். மேலும், பொதுவாக மேம்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரிகளிலும் இதே நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அவர், தனது பணிச்சுமை குறித்துப் பின்வருமாறு விவரித்தார், “காலை 8 மணிக்கு முன்பே, உள் நோயாளிகளை ஒரு சுற்று பார்த்து வரவேண்டும், 8 மணி முதல் 12 மணி வரை புற நோயாளிகளைப் பார்க்க வேண்டும். ஒரு நாளில் சுமார் 80 புற நோயாளிகளைப் பார்க்க வேண்டியதிருக்கும். அதன் பின்னர் தேவைப்படும் புறநோயாளிகளுக்கு எக்கோ பரிசோதனை எடுக்க வேண்டும். ஒரு நாளுக்கு சுமார் 50 பேருக்கு இந்தப் பரிசோதனை எடுக்க வேண்டி வரும்.”
“அதில் சிலருக்கு ட்ரெட் மில் சோதனை செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் குறிப்பு எடுத்து வைக்க வேண்டும். மதியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவர்களைப் பார்க்க வேண்டும். குறைந்தது 10 பேருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும், உடனே ஸ்டண்ட் பொருத்த வேண்டிய நோயாளிகள் நான்கு அல்லது ஐந்து பேர் இருப்பார்கள்.”
“கடந்த வாரம் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, இரவு 12 மணி ஆனபோது தற்காலிக பேஸ் மேக்கர் வைத்திருந்தவர்கள் தங்கள் கை, கால்களை அசைத்ததால் அவை விலகியிருந்தன. அவற்றைச் சென்று சரி செய்து, குறிப்பு எழுதிவிட்டு வந்தேன். பின்பு, அதிகாலை 3 மணிக்கு இதயத் துடிப்பு மிகவும் குறைந்த நிலையில் வந்தவருக்கு சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் வைத்து, பிறகு 4 மணிக்கு மாரடைப்புடன் வந்தவரை வென்டிலேட்டர் உதவியுடன் உடல் நிலையைச் சீராக்கினேன்.”
“இதற்குத் தேவையான குறிப்புகளை எழுதி எனது பணிகளை முடித்த போது காலையில் மணி 6. அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு மீண்டும் அடுத்த நாள் பணிக்குத் திரும்பினேன்,” என்று தனது ஒருநாள் பணியை விவரித்தார் மதுரை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மருத்துவர்.
அரசு மருத்துவமனைகளை நாடும் நடுத்தர வர்க்கத்தினர்
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ் தட்டில் இருக்கும் மக்கள் அரசு மருத்துவமனைகளை அதிகம் நாடுகின்றனர். ஆனால், கொரோனா காலத்துக்குப் பிறகு உயர் நடுத்தரப் பிரிவினர் உள்படப் பலரும் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருகின்றனர் என்கிறார் சாமிநாதன்.
“கொரோனா பேரிடர் சமயத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தங்கள் சேவைகளை நிறுத்திவிட்டன. அப்போது எல்லா தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து இந்த சேவையைப் பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்த மக்களை அரசு மருத்துவமனைகளின் சேவைகள் ஈர்த்தன.”
“கொரோனா காலத்துக்குப் பிறகு, மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரும் அரசு மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். ஒருபுறம் சேவைகளை மேம்படுத்தும்போது, அதற்கு ஏற்ற மனித வளங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். அதைச் செய்யாததே இதற்குக் காரணம்” என மருத்துவர் சாமிநாதன் கூறினார்.
“மருத்துவர்களின் வேலைப் பளு நீண்டநாள் பிரச்னை என்றாலும், கொரோனா காலத்துக்குப் பிறகு அது தீவிரமடைந்திருப்பதால், மருத்துவர்களிடம் விரக்தியும் அதிகரித்துள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு இதுவும் காரணமாக அமைகின்றன” என்கிறார் அவர்.
வேலைப்பளு அதிகமான அளவுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாகவில்லை என்கிறார் மருத்துவர் ராமலிங்கம். “மருத்துவமனையின் அன்றாட செலவுகளுக்கான நிதியை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்தான் பெற வேண்டியுள்ளது. சில நேரங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் தாமதமாக நிதி தருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு ப்ரீமியம் கட்டுகிறது அரசு” என்று விமர்சனத்தை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் 3,500 மருத்துவர் காலிப் பணியிடங்கள்
இவ்வளவு பணிச்சுமைக்கும், சிரமங்களுக்கும் இடையில் எப்படி நோயாளிகளுக்கு நோய் குறித்த ஆலோசனைகளை வழங்க நேரம் இருக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு ரெசிடண்ட் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மன்.
“புற்றுநோயாளிகளுக்குத் தனியாக ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில், ஒரு நிபுணர் அதிகபட்சம் இத்தனை நோயாளிகளைத்தான் பார்க்க வேண்டும் என்ற வரம்பு உள்ளது. அப்போதுதான் தரமான மருத்துவம் கிடைக்கும் என்பதால் ஒரு நாளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோன்று இங்கும் செய்யலாமே” என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் 18 ஆயிரம் அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இதில் சுமார் 20% இடங்கள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “24 மணிநேரப் பணி என்பது மருத்துவ மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் சுய விருப்பத்தின் பேரில் எடுத்துக்கொண்டு பணி செய்கிறார்கள். அது கட்டாயம் இல்லை. முதல் கட்டமாக 2,553 காலிப் பணியிடஙகளை நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுத் தேதி ஜனவரி 27ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக காலிப் பணியிடங்கள் குறித்த மருத்துவர்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசியிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “பொது சுகாதாரத்துறையில் 1,353 இடங்களும், மருத்துவக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், ஊரக மருத்துவ சேவைகள் துறையில் 552 இடங்களும் காலியாக உள்ளதாக” தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் 3,505 மருத்துவர் பணியிடங்களும் 1,271 செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றார். இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரியை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியபோது, “காலிப் பணியிடங்களில் 80% ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும்” என்று மட்டும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு