அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி பிரதீபா மஹாநாம

by sakana1

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி பிரதீபா மஹாநாம வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று  ஜெனிவாவில்  இனி கேள்வியெழுப்ப முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  21 தேர்தல் மாவட்டங்களிலும் அமோக வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விலகி புதிய அரசியல் கலாச்சாரத்துக்குள் பிரவேசித்துள்ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

எவ்விதமான அரசியல் கூட்டணியுமில்லாமல் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்திலும்,  சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தொடர்ச்சியாக குறிப்பிட்டது.

இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

ஆகவே, பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்று இனி ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்  2025 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் புதிய அரசியல் கட்டமைப்புக்குள் பிரவேசித்துள்ளார்கள், பழைய பாரம்பரியமான அரசியல் கட்டமைப்பை புறக்கணித்துள்ளார்கள் என்ற செய்தியை அரசாங்கம் சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எவ்விதமான எதிர்பார்ப்பு மற்றும் நிபந்தனைகளின்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

ஆகவே தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் இருந்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் நாட்டில் மனித உரிமையை மென்மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற பொறிமுறைக்குள் விசேட செயற்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்