மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்ட, அதிகஸ்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அமைந்துள்ளது. இவ்வலயத்தில் கடமையாற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக வலயப் பாடசாலைகள் தேசிய பரீட்சைகளிலும், இணைப்பாடவிதான போட்டிகளிலும் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றன. இலங்கையில் 100 கல்வி வலயங்கள் உள்ளன. அவ்வலயங்களில் அண்மையில் வெளியாகிய சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 25வது வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. இச்சாதனை வெறுமனே இலகுவாக பெறப்பட்டதல்ல. கல்வி ஆளணியினரின் இரவு, பகலான அர்ப்பணிப்பினாலேயே சாத்தியமானது. அதேபோன்று விளையாட்டு, மொழித்தினம், புத்தாக்கம், சமூகவிஞ்ஞானப்போட்டியென பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தேசியமட்டத்தில் சாதனை புரிகின்ற நிலைமையை எட்டியிருக்கின்றது.
இச்சாதனைகள் பலவற்றை பாடசாலைகள் புரிந்தாலும் வேதனைகள் பல உள்ளன. மனிதனின் உறையுளுக்காக எவ்வாறு வீடு அவசியமோ? வீட்டிற்கு தேவையான பொருட்கள் அவசியமோ? அதே போன்று பாடசாலைகளுக்கு கட்டிடங்களும், அதற்கு தேவையான பொருட்களும் அவசியப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் 24மணித்தியாலயமும் இயங்கும் நிலையை உடையன. அவ்வாறானாயின் அங்குள்ள கட்டிடங்கள், அதனை சுற்றியதான பாதுகாப்பு, தேவையான தளபாட வசதிகள் எந்தளவு முக்கியம் என்பதனை உணர்ந்துகொள்ள முடியும்.
21ம் நூற்றாண்டில் இன்னமும் சோக், கரும்பலகையில் இருந்து மாற முடியாத துர்ப்பாக்கிய நிலை உள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள பாடசாலைகள் ஸ்மார்ட் நிலையை எட்டிவரும் சூழலில் இன்னும் பழைய நிலையில் கிராமப்புறப்பாடசாலைகள் அமைந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததே.
தற்காலிக கொட்டில்களிலும், உடைந்த கதிரைகளிலும் இருக்கும் நிலை இன்னும் மாறவில்லை. பாடசாலையில் நிகழ்வுகள் நடத்துவதற்கு இடமில்லாமல் மரநிழல்களிலும், கொட்டில்கள் அடித்தும் நடத்தும் நிலையும் இந்நிமிடம் வரை இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. பாடசாலை வேலிகள் பாதுகாப்பின்மையினால் நாள்தோறும் மாணவர்கள் பாடசாலை வருகைதந்து சாணி அள்ளும் நிலை நீங்கவில்லை.
விளையாட்டுப்பயிற்சிகள் பெறுவதற்கு போதிய உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் அல்லலுறுகின்றனர். பொதுப்போக்குவரத்து வசதிகள் இன்றிய சூழலிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இடர்களை சந்திக்கின்றனர்.
காவலாளி, சிற்றூழியர்கள் இல்லாமல் பாடசாலையை பாதுகாக்க முடியாத சூழல்நிலை காணப்படுகின்றது. காட்டுவிலங்குகளான யானை, குரங்கு போன்ற மிருகங்களினால் பாடசாலைகள் இடர்களை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றிற்கு இன்னமும் தீர்வுகள் காணப்படவில்லை. இவ்வாறான பல்வேறான பிரச்சினைகளுடன் உள்ள பாடசாலைகள் குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை கொள்ள வேண்டும்.