புல்டோசர் நடவடிக்கை: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முந்தைய வழக்குகள் மீது தாக்கம் செலுத்துமா?
- எழுதியவர், உமாங் போடார்
- பதவி, பிபிசி நிருபர்
“உங்களுக்கு சொந்த வீடு, அதுவும் சுற்றுச் சுவருடன் இருக்கக்கூடும், ஆனால் பலருக்கு இது கனவு, மனிதர்களின் இதயங்கள் விரும்புவது இதைத்தான். ஒரு வீடு வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடக் கூடாது.”
புல்டோசர் மூலம் ஒருவரின் வீட்டையோ அல்லது அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிக்கும் முன் அரசு அல்லது நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று பிறப்பித்தது.
‘புல்டோசர் ஆக்ஷன்’ தொடர்பான நீதிமன்ற வழிகாட்டுதல், கவிஞர் பிரதீப்பின் இந்த நான்கு வரிகளில் இருந்து தொடங்குகிறது. இந்த வரிகளின் சாராம்சம்தான் நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் சாரம்.
நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிப்பது, சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.
நோட்டீஸ் வழங்குவது, விசாரணை நடத்துவது மற்றும் வீட்டை இடிக்க உத்தரவுகளைப் பிறப்பிப்பது தொடர்பான பல வழிகாட்டுதல்கள் இந்தத் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்களின் விவரங்கள்
இது முக்கியமான முடிவு என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் சட்டவிரோதமாக கட்டடங்களை இடிக்கும் செயல்பாடுகள் நிறுத்தப்படும்.
ஒரு வீட்டையோ அல்லது எந்தவொரு கட்டடத்தையோ இடிக்கும் முன், குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
மாநிலங்களின் சட்டத்திலும் இதுபோன்று நீண்ட அறிவிப்புக்கான விதிமுறை இருந்தால், அந்தக் கால அளவைப் பின்பற்ற வேண்டும்.
இடிப்பதற்கான காரணம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் அடங்கிய நோட்டீஸ், பதிவு செய்யப்பட்ட தபால் வாயிலாக அனுப்பப்பட வேண்டும். இதனுடன், அந்தக் கட்டடத்திலும் ஒட்டப்பட வேண்டும்.
நோட்டீஸ் முன்தேதியிட்டு இருக்கக்கூடாது. இதுபோன்று எழும் குற்றச்சாட்டைத் தவிர்க்க, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உடன், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கைக்கான காரணம், எந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதையும் நோட்டீஸில் குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
சம்பந்தப்பட்டவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை நடைபெறும்போது, அதன் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்குப் பின், அதிகாரிகள் அதற்கான காரணத்தை உத்தரவில் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.
இடிக்கப்போகும் கட்டடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமானதா அல்லது முழு கட்டடமும் அங்கீகரிக்கப்படாததா என்பதையும் பார்க்க வேண்டும். முற்றிலுமாக இடிப்பதற்குப் பதிலாக அபராதம் அல்லது வேறு ஏதாவது தண்டனை வழங்க முடியும் எனில் அது வழங்கப்பட வேண்டும்.
கட்டடத்தை இடிக்கும் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் விதி இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும்.
வழிகாட்டுதல்களின்படி, ஒருவேளை அப்படி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும்கூட அங்கீகரிக்கப்படாத கட்டடத்தைச் சரி செய்ய அல்லது அகற்ற உரிமையாளருக்கு 15 நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை எனில் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
வழிகாட்டுதல்கள் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்ப வேண்டும், இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்குப் பிறகு நடைபெறும் எந்தவொரு இடிப்பு நடவடிக்கையிலும், அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
இதைச் செய்யாவிட்டால், இடிக்கப்பட்ட சொத்திற்கு ஈடாக, அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட சொத்துகளைக் கொடுத்து ஈடுசெய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம். இந்த உத்தரவு அதிகாரிகளின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, விசாரணையின்போது வீடு அல்லது கட்டடங்களை இடிக்கும் பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த அறிவிப்பில் முந்தைய தேதி இருப்பதாகக் கூறினர்.
இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க, ஆட்சியருக்கு நோட்டீஸை மின்னஞ்சலில் அனுப்புவது, அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றுவது போன்றவை பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சில மனுதாரர்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட அல்லது குற்றத்தைச் செய்ததாகக் கூறப்பட்ட உடனேயே தங்கள் சொத்துகள் இடிக்கப்பட்டதாகக் கூறினர்.
நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, அறிவிப்புக்கும் இறுதி உத்தரவுக்கும் இடையில் குறைந்தபட்சம் 15 நாட்கள் இருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால், இந்த நீதிமன்ற உத்தரவு நாட்டில் ‘புல்டோசர் நடவடிக்கை’ என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்று பல சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த முடிவு புல்டோசர் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
முந்தைய வழக்குகள் என்னவாகும்?
உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னை தொடர்பாகப் பல பொதுநல மனுக்களை விசாரித்து வந்தது. அதன் விளைவாக இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டன.
இந்தப் பொதுநல மனுக்களை ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் போன்ற சில அமைப்புகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் மற்றும் சில தனிநபர்கள் தாக்கல் செய்தனர்.
நீதிமன்றத்தில் சிலர் தங்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டதாகக் கூறினர். அவர்களின் வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு முன்பு பதிவான வழக்குகளில், இடிப்பு நடவடிக்கையில் சட்ட செயல்முறை பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதை நீதிமன்றம் சரிபார்க்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுமானம் தொடர்பான சட்டங்கள் உள்ளன. ஒரு வீட்டை இடிப்பதற்கு முன் நோட்டீஸ் கொடுப்பது மற்றும் விசாரணைகளை நடத்துவது போன்ற நடைமுறைகள் இதில் அடங்கும்.
அரசின் புல்டோசர் நடவடிக்கைகளில் இந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதையும் நீதிமன்றம் பார்க்க வேண்டும். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் கூறுகையில், “இந்த முடிவு பல விஷயங்களை மாற்றும். நிலுவையில் உள்ள வழக்குகள் கையாளப்படும் போக்கிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, புதன்கிழமை வெளியான உத்தரவில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள கொள்கைகள் முந்தைய வழக்குகளையும் பாதிக்கும்.
அரசாங்கமும் அதிகாரிகளும் நிதானமாகச் சிந்திக்காமல் இடிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. அப்படி நடந்தால், அதன் விளைவுகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கில், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், வேறு சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட உரிமையாளரின் சொத்துகள் இடிக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர். சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்படாமல் அந்தக் குறிப்பிட்ட நபரின் சொத்துகள் மட்டும் இடிக்கப்பட்டதாகவும் கூறினர். அதுவும் வேறு சில குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட உடனேயே அவரது சொத்து இடிக்கப்பட்டது என்றனர்.
இதுகுறித்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இடிக்கப்பட்ட சட்டவிரோத கட்டடம் வேறு சில வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமானது என்பது தற்செயலாக நடப்பது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்துக் குறிப்பிட்ட நீதிமன்றம், “ஒரு கட்டடம் திடீரென்று இடிக்கப்பட்டு, அதைச் சுற்றியுள்ள ஒரே மாதிரியானக் கட்டடங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால், இடிப்பு நடவடிக்கை தவறான நோக்கத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
ஒரு கட்டமைப்பை இடிப்பதற்குச் சற்று முன்பு, அதன் உரிமையாளர் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதைக் கண்டால், இந்த இடிக்கும் செயல்பாட்டின் உண்மையான நோக்கம் எந்தவொரு நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பதாகும் என்றே கருதப்படும். இந்த வழக்கில், அதிகாரிகள் தங்களின் நோக்கம் அது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றது.
உ. பி. அரசுக்கு அபராதம் விதித்த வழக்கு
இந்த வழக்கின் அடுத்த விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு நடக்க உள்ளது.
முந்தைய புல்டோசர் நடவடிக்கை வழக்குகளில் உச்சநீதிமன்றம் என்ன செய்யும் என்பது அந்த விசாரணையில் இன்னும் தெளிவாகத் தெரியும்.
இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2019ஆம் ஆண்டில் ஒரு வீட்டை இடித்த வழக்கில் உத்தர பிரதேச அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது.
வீடு அல்லது குடியிருப்பை இடிப்பது சட்டவிரோதமாகச் செய்யப்பட்டது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. கட்டடத்தை இடிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மற்ற நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
“அந்த வழக்கில், “எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும், புல்டோசர்கள் மூலம் நீதி வழங்கப்படக் கூடாது” என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு