இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

இலங்கை - ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், Anura Kumara Dissanayake

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் வரலாறு காணாத அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது ஆட்சியின்போது எவ்வாறான சவால்களை எதிர்நோக்கப் போகின்றது?

இலங்கை, பல்லின சமூகம் வாழும் நாடு என்ற நிலையில், இந்த ஆட்சியைத் தீர்மானிப்பதில் என்றும் இல்லாதவாறு அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், அதாவது 1931ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது.

அந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற 2020ஆம் ஆண்டு காலப் பகுதி வரை தமிழ், சிங்களம் எனப் பிரிந்த நிலையிலேயே, மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வந்தனர்.

எனினும், இலங்கை வரலாற்றில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும், மத்தியில் ஆட்சி நடத்தக் கூடிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, மத்தியில் ஆட்சியை அமைக்கக்கூடிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களின் அடிப்படைத் தேவைகள், உரிமை, பொருளாதாரம், மத சுதந்திரம், ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையே, இந்த மக்களை வாக்களிக்கத் தூண்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்து, நல்லாட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறான சவால்கள் காணப்படுகின்றன என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய மக்கள் பிரதிநிதிகள்

இலங்கை - ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம், NPP Media

தேசிய பட்டியல் அடங்களாக 159 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், மொத்தமாக 160 மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இந்த 160 மக்கள் பிரதிநிதிகளும், தமது பணிகளுக்குப் புதியவர்கள் என்பது மிக முக்கியமான விடயம்.

அநுர குமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற அனுபவம் இருந்தாலும், ஜனாதிபதி பதவிக்கு அவர் புதியவர் என்பதுடன், ஹரிணி அமரசூரியவும் பிரதமர் பதவிக்குப் புதியவராவார்.

அதேபோன்று, அமைச்சராகத் தற்போது பதவி வகிக்கும் விஜித்த ஹேரத் உள்ளிட்ட புதிய அமைச்சு பொறுப்புகளை ஏற்கவுள்ளவர்களும், அமைச்சுப் பதவிகளில் செயற்பட்ட அனுபவம் இல்லாதவர்கள்.

அத்துடன், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 95 சதவீத தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்புரிமைக்கும் புதியவர்களாவர்.

இந்த நிலையில், ஒட்டு மொத்த புதிய மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் எவ்வாறான சவால்களை எதிர்நோக்குவார்கள்?

இலங்கை  -அநுர குமார

பட மூலாதாரம், anura kumara dissanayake

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்து, ஏனைய அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் பெரும்பான்மை வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சி பீடத்தில் ஏறியுள்ளமை தொடர்பில் பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் அ.நிக்சன், ”அநேகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தத் தெரிவிற்கு வந்திருக்கிறார்கள்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பாரம்பரிய கட்சிகள், மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மீதான வெறுப்புகளும் இந்தத் தெரிவிற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார் நிக்சன்.

முக்கியமாக “மக்களின் வாழ்க்கைச் சுமை பிரச்னையானது, ஊழல், மோசடி, துஷ்பிரயோகங்களால்தான் வந்தது என்பதைத் தெரிவித்தே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள்தம் வாக்குகளைக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புதியவர்களாக இருக்கின்றார்கள். ஊழல், மோசடி, கமிஷன் போன்ற விடயங்களை இவர்கள் அம்பலப்படுத்துகின்றார்கள்.

இதனால், கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்துள்ளனர். நிச்சயமாக பொருளாதார நெருக்கடிதான் இதற்கான முக்கியக் காரணம். இந்தத் தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தனியே ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம் என நினைக்கின்றார்கள். ஆனால், அப்படியல்ல,” என்று குறிப்பிட்டார் நிக்சன்.

பொருளாதார நிபுணர்களுடைய கருத்துகளின் பிரகாரம், போர் இடம் பெற்ற காலத்தில்தான் இந்த ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயாகம் ஆரம்பித்ததாகக் கூறும் நிக்சன், பொருளாதார நெருக்கடி என்பது யுத்தத்தால் ஏற்பட்டது என்றும் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகவே, “சிங்கள மக்களைப் பொருத்த வரை, பொதுவாக இதைத் தங்களுடைய பொருளாதார நெருக்கடியாகவே பார்க்கின்றார்கள். உண்மையில் இன நெருக்கடிக்கான தீர்வொன்று வருமாக இருந்தால் மாத்திரமே இந்தப் பொருளாரதார நெருக்கடியைத் தீர்க்க முடியும். பொதுவாக ஊழல், மோசடி, கமிஷன், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றாலேயே இந்த நிலைமை உருவாகியது எனக் கருதி, மக்கள் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்,” என்றும் தெரிவித்தார் அ.நிக்சன்.

ஓரளவிற்கு மக்களுடைய மாற்றம் நியாயமானதாகத் தெரிவதாகக் கூறும் நிக்சன், “ஆகவே, இன நெருக்கடிக்கான தீர்வைக் கொண்டு வந்துதான், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வைக் காண முடியும். ஆனால், ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்கள் எப்படி இதைக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், இன நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனை தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, எதிர் வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடி மற்றும் இன நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள்தான் காணப்படுகின்றன” என்று கூறினார்.

தேசிய மக்கள் சக்திக்கான தமிழர்களின் வாக்களிப்பு

இலங்கை - அநுர குமரா

பட மூலாதாரம், Nikshan

படக்குறிப்பு, அரசியல் விமர்சகர் அ.நிக்சன்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பிரதேசங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கான வாக்கு வங்கி பல மடங்காக அதிகரித்து, நாடாளுமன்ற ஆசனங்களில் எண்ணிக்கையும் தமிழ்க் கட்சிகளை விடவும் அதிகரித்துள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளைத் தாண்டி, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செறிந்து வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை காலம் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்தப் பிரதேசங்களில் இம்முறை மூன்று தமிழர்கள் தெரிவாகியுள்ளமை வரலாற்று சாதனை போல அவதானிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் வாக்களித்ததை எவ்வாறு அவதானிக்கின்றீர்கள் என பிபிசி தமிழ், அரசியல் ஆய்வாளர் அ.நிக்சனிடம் வினவியது.

”தமிழ் மக்களைப் பொருத்த வரை அதை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுடைய பலவீனம். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், சரியான அரசியல் தலைமைத்துவம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. அப்படி இருந்தும், 2010, 2015, 2020 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஆசனங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து இருந்தாலும், மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், இந்த முறை கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள பெரும்பான்மைக் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அவர்கள் தமிழர் பிரதேசங்களில் சரியான தமிழர்களை நிறுத்தியிருக்கின்றார்கள். இவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடி மற்றும் தமது வாழ்க்கைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற நோக்கம் இருந்திருக்கின்றது” என அவர் கூறுகின்றார்.

இலங்கை - அநுர குமார

பட மூலாதாரம், NPP media

”தேசிய மக்கள் சக்தியை பொருத்த வரையில் வடக்கு, கிழக்கில் வழங்கக் கூடிய வாக்கு என்பது அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை ஸ்தாபித்தல் போன்றவற்றை நிறுத்துவோம் என்பதை உள்ளக ரீதியான உறுதிமொழியாக வழங்கியுள்ளதால் கிடைத்தது. அநேகமாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் வாக்களித்துள்ளார்கள் என்று சொன்னால், ஏதோவொரு வகையில் நிம்மதியான தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு தான் வாக்களித்துள்ளார்கள்” என அவர் குறிப்பிடுகின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையில் இந்தியாவால் இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையாக 13வது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது.

இந்த 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டு, 8 மாகாணங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் வடகிழக்கு மாகாணங்களாக இணைந்த வகையில், இந்திய – இலங்கை உடன்படிக்கை அமைந்திருந்தது.

எனினும், வடகிழக்கு மாகாணங்களைப் பிரித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என அப்போது மக்கள் விடுதலை முன்னணியாகச் செயற்பட்ட தற்போதைய தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து, வடகிழக்கு மாகாணத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகப் பிரித்திருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் போராட்டம், மாகாண சபை முறைமை உள்ளிட்ட தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சிக்கு இன்று தமிழ் மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்துரைத்தார்.

”அது நிச்சயமாக மிகத் தவறானதுதான். ஏனென்றால், மக்களைப் பொருத்த வரையில் தமிழர்களின் இன நெருக்கடித் தீர்வில் தேசிய மக்கள் சக்திக்கு அந்த நிலைப்பாடு இல்லை என்று தெரிந்தாலும், ஏதோவொரு வகையில் வாக்களித்துள்ளார்கள். வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களும், தமிழ் மக்களிடையே பிரபல்யமானவர்கள்.”

இலங்கை - அநுர குமார

பட மூலாதாரம், NPP Media

ஆகவே “அவர்களை நம்பி வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை என்பது இதனூடாக வெளிப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம், தமிழ் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களுக்குச் சரியான அரசியல் புரிதலை வழங்கவில்லை. அரசியல் விழிப்புணர்வு செய்யப்படவில்லை. இதுதான் பிரதானமான காரணம்,” என்கிறார் நிக்சன்.

அடுத்ததாக, தமிழ் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற பிளவுகளைக் குறிப்பிடுகிறார் அவர்.

“தனிப்பட்ட மோதல்கள் போன்ற அனைத்து விதமான விரக்தியிலும் இருந்துதான் மக்கள் இப்படியொரு நிலைமைக்குப் போயிருக்கிறார்கள். என்னை பொருத்த வரையில் தமிழ் தேசியக் கட்சிகளின் பலவீனத்தால் ஏற்பட்ட ஒரு விளைவுதான் இது. ஆனால், இது தற்காலிகமானது. இந்தத் தொடர்ச்சியான வாக்களிப்பு அடுத்து வரும் தேர்தல்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது.

சுயநிர்ணய உரிமை, போர் குற்ற விசாரணை என்று கோரிக் கொண்டிருந்த சமூகமொன்று, போருக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள கட்சிக்கு, வடகிழக்கு மாகாணத்தை பிரிப்பதற்குப் பிரதான காரணமாக இருந்த கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று சொன்னால், அந்த மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் மீதான நம்பிக்கையும், மாற்றம் வரும் என்று நம்பிக்கையும்தான்,” என்று கூறுகிறார்.

அதோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்குத் தற்போது பாரிய பொறுப்பு உள்ளதாகவும் குறைந்தது தமிழ் மக்களுக்குத் தற்போது வழங்கிய வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘அநுரவின் பூகோள அரசியலை இந்தியாவே தீர்மானிக்கும்’

இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையை மையமாகக் கொண்ட பூகோள அரசியல் விவகாரம் என்பது, இலங்கையை ஒவ்வொரு நொடியும் பாரிய சவால்களை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையில் தமது பூகோள அரசியலை நேரடியாக, பலமாகச் செய்து வருகின்றன.

இந்த மூன்று நாடுகளும் இலங்கையை மையப்படுத்தி, தமது அரசியலை போட்டித்தன்மையுடன் முன்னெடுத்து வருவதை நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகவே அவதானித்திருந்தோம்.

இந்த நிலையில், ஆட்சி அனுபவமில்லாத தேசிய மக்கள் சக்தி இந்த பூகோள அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் கருத்து தெரிவித்தார்.

”பூவிசார் அரசியல் மாற்றத்தை எடுத்துக் கொண்டால், அமெரரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர், இந்தியாவிற்கு தற்போது ஒரு நெருக்கடி வந்திருக்கின்றது. தெற்காசியாவில் வல்லரசாக வளரக்கூடிய இந்தியா, இப்போது ரஷ்ய – சீனாவை மையப்படுத்திய பொருளாதார கூட்டமைப்பில் இருக்கின்றது.

அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பாவை மையப்படுத்தி மேற்குலக நாடுகளுடன் இந்தியா ஒரு உறவைப் பேணி வருகின்றது. வெளியுறவுக் கொள்கையில் இதுவரை இரட்டை தன்மையைக் கொண்டிருந்த இந்தியா, டிரம்பின் வருகைக்குப் பின்னர் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ஒன்று பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இருக்க வேண்டும். அல்லது அமெரிக்கா சார்ந்த மேற்குலக ஐரோப்பிய நாடுகளுடன் பயணிக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். தொடர்ச்சியாக இரண்டு நிலைப்பாட்டுடன் இருக்க முடியாது,” என்று விளக்கினார்.

இலங்கை: அநுர குமாரவினால் இந்தியா, சீனாவை ஒருசேர சமாளிக்க முடியுமா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆகையால், இந்தியா எடுக்கின்ற இந்த முடிவோடுதான் இலங்கை பயணிக்க வேண்டிய தேவை இருக்கும் என்றார். அதோடு, இலங்கையைப் பொருத்த வரை இந்தியாவை கடந்து ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோன்று, இந்தியாவை கடந்து சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கவும் முடியாது என்றார் நிக்சன்.

ஆகவே இப்போது இருக்கக்கூடிய புவிசார் அரசியல் மாற்றம் தேசிய மக்கள் சக்திக்குப் பல சவால்களைக் கொண்டிருக்கின்றது. சர்வதேச சட்டங்கள், சர்வதேச அரசியலில் அனுபவமற்ற அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு இதை எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பது கேள்வியாக இருக்கின்றது.

“நிச்சயமாக டிரம்ப் வருகைக்குப் பின்னர் உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள், இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள், இந்த நெருக்கடிகளில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வர போகின்றது, எப்படி கையாளப் போகின்றது என்பதைப் பொருத்துதான் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும். நிச்சயமாக இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்திக்கு வரக்கூடிய சவால் என்பது முக்கியமானதாக இருக்கும்,” என்று குறிப்பிடுகிறார் நிக்சன்.

நிச்சயமாக இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாத நிலைமையொன்று வந்திருப்பதாகக் கூறும் நிக்சன், அதோடு சீனாவுடனும் அனுசரித்துப் போக வேண்டும், அமெரிக்காவுடனும் இயைந்து செல்ல வேண்டும், இந்தியாவுடனும் செல்ல வேண்டும் என்ற தேவை இலங்கைக்கு இருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால், “இந்தியாவின் நிலைப்பாட்டை பொருத்துதான், இலங்கையின் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் இருக்கிறது. நிச்சயமாக அநுர குமார திஸாநாயக்கவிற்கு இது பாரியதொரு சவால்” என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கிறார்.

இலங்கை -  அநுர குமார

பட மூலாதாரம், Anura Kumara Dissanayake

இவற்றோடு, ஊழல், மோசடிகளை எவ்வாறு உடனடியாக இல்லாது செய்வது, உள்நாட்டிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மாற்றுகின்றபோது பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அவர் கூறுகின்றார்.

அத்துடன், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்று நாடுகளுக்கு இலங்கையில் கொடுக்கப் போகின்ற இடங்கள், அந்த நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் கொடுக்கவுள்ள இடங்கள் போன்றவற்றில் தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்நோக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. முக்கியமாக நட்டமடைகின்ற அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிடிவாதமான நிபந்தனை. இதை தேசிய மக்கள் சக்தி எதிர்க்கின்றது.”

அவ்வாறு எதிர்த்த தேசிய மக்கள் சக்தி இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு வழங்காது, அதைக் கொண்டு நடத்த முற்பட்டால், நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடு ஏற்படும் என்று கூறுகிறார் நிக்சன்.

“நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான் ரணில் விக்ரமசிங்கவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்ற கதை வெளிவரும்.

அப்போதுதான் தேசிய மக்கள் சக்தியின் முகத்தை மக்கள் கண்டு கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும். ஆகவே, இதுவொரு தேசிய மக்கள் சக்திக்கு பாரிய சவாலாக அமையும்” என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.