இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: இறுதி யுத்தத்திற்குப் பின் தமிழர்கள் வாக்களிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
-
இலங்கையில் தமிழ் தேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் வாக்கு 2009-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமிழ் தரப்பினருக்கு வழங்குவது படிப்படியாக குறைவடைந்திருந்தது.
இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பெரும்பாலான வாக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து ஏனைய தமிழர் பகுதிகளில் வாழும் மக்களும், தமது வாக்குகளை தேசிய ரீதியான கட்சியொன்றுக்கு வழங்கியுள்ளனர்.
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முடிவுகள் யாருக்கு சாதகமாக வந்துள்ளன? இறுதிக்கப்பட்ட யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்துள்ள தேர்தல்களில் தமிழர்களின் வாக்களிக்கும் போக்கு எவ்வாறு மாறியுள்ளது?
2010-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 65,119 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு மூன்று ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனமும் அப்போது யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்தது.
வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 41,673 வாக்குகளை பெற்றதுடன், மூன்று ஆசனங்களை தன்வசப்படுத்தியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 66,235 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை தன்வசப்படுத்தியது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் தலா ஒரு ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றிருந்தனர்.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி நான்கு ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் 2010ம் ஆண்டு பெற்றுக்கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இரண்டு ஆசனங்களை பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொண்டன.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 14 ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்தில் வலுவான கட்சியாக செயற்பட்டது.
அத்துடன், டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும், ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தனர்.
2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 16 ஆசனங்கள் கிடைத்திருந்தன.
நேரடி வாக்குப்பதிவின் ஊடாக 14 ஆசனங்களும், 2 தேசிய பட்டியல் ஆசனங்களுமான இந்த 16 ஆசனங்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி அப்போது தன்வசப்படுத்தியது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 207,577 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30,232 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை அப்போது பெற்றுக்கொண்டது.
வன்னி மாவட்டத்தில் 89,886 வாக்குகளை பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 127,185 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தன்வசப்படுத்தியது.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 45,421 வாக்குளை பெற்று ஒரு ஆசனத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் 45,894 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2015-ஆம் ஆண்டு தன்வசப்படுத்தியது.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் பகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 16 ஆசனங்கள் கிடைத்ததுடன். மேலும் சில தமிழர்களும் ஏனைய கட்சிகளில் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றிருந்தனர்.
2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் கட்சிகள் 17-க்கும் அதிகமான ஆசனங்களை கைப்பற்றியிருந்தன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2020-ஆம் ஆண்டு தேர்தலில் 10 ஆசனங்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனமும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், தமிழ் மக்கள் தேசியக் கட்சிக்கு ஒன்று என இந்த ஆசனங்கள் கிடைத்திருந்தன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 112,967 வாக்குகளை பெற்றதுடன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 55,363 வாக்குகளை பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதன் போட்டியிட்டு, 49,373 வாக்குகளை தனிநபராக பெற்றார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 45,797 வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசியக் கட்சி 35,927 வாக்குகளையும் பெற்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி 69,916 வாக்குளை பெற்று முதல் இடத்தை பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 67,692 வாக்குகளையும் பெற்றன.
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 39,570 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றது.
திகாமடுல்ல மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 25,255 வாக்குகளை பெற்று, 7வது இடத்தை பிடித்திருந்தது.
இந்தநிலையில், 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாத்திரம் போட்டியிட்ட கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்திற்கு 17-க்கும் அதிமான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வருகைத் தந்திருந்தனர்.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற தேர்தலாக 2024-ஆம் ஆண்டு தேர்தல் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து மாவட்ட தேர்தல் தொகுதிகளிலும் மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் அமைந்துள்ளது.
இதன்படி, 593,187 வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 358,079 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
இவர்களில் 325,312 வாக்குகளே செல்லுப்படியான வாக்குகளாக கருதப்பட்டதுடன், 32,767 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இதில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குளை பெற்றுக்கொண்டு, மூன்று ஆசனங்களை தன்வசப்படுத்தியது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 63,327 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டது.
சுயாதீன குழு 17க்கு 27,855 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த குழுவிற்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
வன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள்
மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைந்த வகையில், வன்னி தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 306,081 வாக்காளர்களை கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 211,140 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
இவர்களில் 195,886 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கருதப்பட்டதுடன், 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 39,894 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், 2 ஆசனங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 32,232 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 29,711 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, அந்த கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனமும், இலங்கை தொழிலாளர் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியை 15,007 வாக்குகளை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு மன்னார் தேர்தல் தொகுதியில் 7,948 வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 7,490 வாக்குகள் கிடைத்துள்ளன.
வவுனியா தேர்தல் தொகுதி
வவுனியா தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு 19,786 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், வவுனியா தேர்தல் தொகுதியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 5,575 வாக்குகள் கிடைத்துள்ளன.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,886 வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக தேசிய கூட்டணிக்கு 6,556 வாக்குகள் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளை பெற்றுள்ளதுடன், இலங்கை தொழிலாளர் கட்சி வவுனியா தேர்தல் தொகுதியில் 8,354 வாக்குகளை பெற்றுக் கொண்டன.
முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 14,297 வாக்குகளை பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
தேசிய மக்கள் சக்திக்கு முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 7,789 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 5,133 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி 4,664 வாக்குகளை பெற்றுக்கொண்டது.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளை பெற்றுக்கொண்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு மூன்று ஆசனங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றிற்கு தலா ஒவ்வொரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.
449,686 வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 302,382 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
இவர்களில் 287,053 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கருதப்பட்டதுடன், 15,329 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 87,031 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், இரண்டு ஆசனங்களை அந்த கட்சி பெற்றுக்கொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளை பெற்றுக்கொண்ட அதேவேளை, அந்த கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 34,168 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.
315,925 வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தல் மாவட்டத்தில், இம்முறை 218,425 வாக்காளர்களே வாக்களித்திருந்தனர்.
இவர்களில் 204,888 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக கருதப்பட்டதுடன், 13,537 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை)
திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை கைப்பற்றி, வெற்றியீட்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 146,313 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இரண்டாவது இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 46,899 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு 33,911 வாக்குகளும்,இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 33,632 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.
மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்தாலும், அந்த பகுதிகளிலுள்ள தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தவாறே தேர்தலை எதிர்கொள்வது வழக்கமானது.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் மாத்திரமே தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தேர்தல் மாவட்டங்களிலும், மலையகம் உள்ளிட்ட ஏனைய தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் முழுமையான ஆதிக்கத்தை தேசிய மக்கள் சக்தி செலுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள், தமிழ் கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளமை, இந்த தேர்தல் முடிவுகளில் வெளிப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு