தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி: உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? 20 குழந்தைகளை மீட்டது எப்படி?

உத்தரப் பிரதேசம், ஜான்சி மருத்துவமனையில் தீ

பட மூலாதாரம், ANI

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு, (நவம்பர் 15) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்ததை ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சனிக்கிழமை அதிகாலை சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற அவர் , குழந்தைகளை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். “சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மட்டத்தில் முதற்கட்ட விசாரணை சுகாதாரத் துறை சார்பில் நடத்தப்படும். விபத்துக்கான காரணம் என்பதை கண்டறிய இரண்டாம் கட்ட விசாரணையை காவல்துறை சார்பிலும், மூன்றாம் கட்ட விசாரணை நீதித்துறையாலும் நடத்தப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, விபத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விபத்து எப்போது, எப்படி நடந்தது?

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சி மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சச்சின் மோஹர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் செறிவூட்டியில் ஏற்பட்ட தீ காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், “பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 54 குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வந்தனர். அப்போது திடீரென்று ஆக்ஸிஜன் செறிவூட்டி தீப்பிடித்து எரிந்தது. அதனை அணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அறை முழுவதும் ஆக்ஸிஜன் அதிகம் இருந்ததால் தீ விரைவாக பரவியது. எங்களால் முடிந்த அளவிற்கு குழந்தைகளை வெளியே எடுத்தோம். பெரும்பாலான குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் 10 குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்,” என்று தெரிவித்தார்.

மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து; குழந்தைகள் மரணம்

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரவு 10:30 முதல் 10:45 மணிக்குள் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின

இந்த சம்பவம் குறித்து ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் பேசும் போது, “ வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இரவு 10:30 முதல் 10:45 மணிக்குள் விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளது,” என்று கூறினார்.

“இதுவரை இந்த விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். காவல்துறை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அதன் விசாரணை முடிவுகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்றும் கூறினார் அவினாஷ்.

மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து; குழந்தைகள் மரணம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜான்சியின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சச்சின் மோஹர் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

தீ விபத்திற்குப் பிறகு, பல குழந்தைகளை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகிறார். அங்கே சிகிச்சை பெற்று வந்த தன் குழந்தையைக் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய குழந்தைக்கு உணவு அளிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் நின்று கொண்டிருந்த க்ரிபால் சிங், “மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவர் அந்த அறைக்குள் ஓடி வந்து, தீ விபத்து குறித்து பதற்றத்துடன் கூறினார். அப்போது நாங்கள் ஒரு 20 குழந்தைகளை பத்திரமாக மீட்டு ஊழியர்களிடம் கொடுத்தோம்,” என்று தெரிவித்தார்.

“சில குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தனர். ஆனாலும், பத்திரமாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் அவர்களை எடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். தீ விபத்துக்கான காரணம் ஷார்ட் சர்க்யூட் என்று கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் அதிக வெப்பமடைந்தது. இதனால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்,” என்று கூறுகிறார் சிங்.

விபத்தை நேரில் பார்த்த ரிஷப் யாதவ் என்பவர் விபத்து நடந்த போது, குழப்பமாக இருந்தது என்று தெரிவிக்கிறார். “தீ விபத்து ஏற்பட்ட போது குறைந்தபட்சம் 50 குழந்தைகள் அங்கே இருந்திருக்கலாம். விபத்து ஏற்பட்டதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினார்கள்,” என்று கூறினார்.

சில குடும்பங்களுக்கு தங்கள் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. மருத்துவமனை, நிர்வாகம் இந்த தகவலை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து; குழந்தைகள் மரணம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த விபத்து குறித்து மூன்று கட்டங்களாக விசாரணை நடத்தப்படும் என்று உத்திரப் பிரதேச துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

உ.பி. அரசு கூறுவது என்ன?

இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். துணை முதல்வர் பிரஜேஷ் பதக் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

பதக் கூறுகையில், “விபத்து நடந்தது எப்படி, அதற்கான காரணங்கள் என்ன என்பதை விரைவில் கண்டுபிடிப்போம். அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் இருந்து ஒருவரும் தப்பிக்க இயலாது,” என்றார்.

“அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டதா என்பதை முதலில் ஆய்வு செய்வோம். அவ்வாறு இல்லாமல் இயல்பாக நடந்த விபத்து தான் என்றால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களிடம் பேசினோம். அனைவரும் மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். குழந்தைகளும், அவர்களின் தாய்மார்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்,” என்று பதக் கூறினார்.

மருத்துவமனையின் தீ விபத்து பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த, பதக், “மருத்துவமனையின் தீத்தடுப்பு பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது என்றார். கடந்த ஜூன் மாதத்தில் ‘தீத்தடுப்பு ஒத்திகை’ நடத்தப்பட்டது. இதனையும் மீறி நடந்த தீ விபத்து எதனால், ஏன் எப்படி நடந்தது என்பதை விசாரணை முடிவுகளுக்குப் பிறகே தெரிய வரும்” என்று தெரிவித்தார்.

உ.பி. முதல்வர் யோகி அவருடைய எக்ஸ் தள பக்கத்தில், “ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது,” என்று கூறினார். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு