மகாராஷ்டிரா  கொலை வழக்கு; பீட் மாவட்டம்

  • எழுதியவர், ப்ரியங்கா ஜக்தப்
  • பதவி, பிபிசி மராத்திக்காக

புனேவின் ஹடாப்சரில் உள்ள ஃபர்சுங்கியில் , வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை சோஃபாவுக்கு அடியில் கொலைக்காரர் மறைத்து வைத்துள்ளார்.

இரண்டு நாட்களாகத் தனது மனைவியைக் கணவர் தேடி வந்துள்ளார். ஆனால் அவர் இரண்டு நாள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் அவரது மனைவியின் உடல் இருந்தது அவருக்குத் தெரியவில்லை.

கொல்லப்பட்டப் பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக கிராமத்திற்குச் சென்றிருந்த போது, குற்றவாளி அப்பெண்ணை கொலை செய்துவிட்டு, உடலை மறைத்து வைத்துள்ளார்.

குற்றவாளி தற்போது வரை காவல்துறையின் பிடியில் சிக்கவில்லை எனவும், தொடர்ந்து அவரைத் தேடி வருவதாகவும் பிபிசி மராத்தியிடம் காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொலை செய்யப்பட்ட பெண் 24 வயதான, ஸ்வப்னாலி உமேஷ் பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, கொலை செய்யப்பட்ட ஸ்வப்னாலியின் கணவர் உமேஷ் ஒரு ஓட்டுநர். கடந்த 8ஆம் தேதி, காலை 5 மணிக்கு உமேஷ் தன்னுடைய பணிக்குச் சென்றிருக்கிறார்.

அவர் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, அவருக்கு ஏதோ அந்நியமாக இருந்துள்ளது. அவர் வீட்டின் கதவுகளைத் திறந்து பார்த்தபோது அவரது மனைவியைக் காணவில்லை. அதனால், அவர் தனது மனைவியைத் தேடியுள்ளார்.

அவருக்குத் தனது மனைவி எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. இதனால், உமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை கொலை, கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.

ஸ்வப்னாலிக்கு என்ன நடந்தது?

காவல்துறை விசாரணைப்படி, கடந்த காலத்தில் ஸ்வப்னாலிக்கும் உமேஷுக்கும் வேறு வேறு நபர்களுடன் திருமணம் நடந்து அதிலிருந்து வெளியேறியுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டனர். உமேஷ் ஹடாப்சர் பகுதியில் உள்ள ஃபர்சுங்கியில் உள்ள ஹுண்டேகர் பஸ்தியில் வசித்து வந்தார்.

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

பட மூலாதாரம், Getty Images

உமேஷ் ஒரு வாகன ஓட்டுநர். அவர் நவம்பர் 7ஆம் தேதி சவாரிக்குச் சென்றுள்ளார். ஸ்வப்னாலியை அவர் இறுதியாகச் சந்தித்ததும் பேசியதும் அன்றுதான். அதன் பிறகு உமேஷால் அவருடைய மனைவியைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் இவர் தொடர்ந்து ஸ்வப்னாலியை தொடர்புகொள்ள அலைபேசியில் பேச முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரது மொபைல் ஸ்ட்விச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.

கவலையடைந்த உமேஷ் தனது நண்பர்ளை அழைத்து, அவர்களைத் தனது வீட்டிற்குச் சென்று ஸ்வப்னாலி குறித்து அறிந்து வருமாறு கூறியுள்ளார். அவர் கூறியது போல், அவரது நண்பர்கள் அவரின் வீட்டிற்குச் சென்றுப் பார்த்தபோது, அவர் அங்கு இல்லை.

அதைத் தொடர்ந்து, மனைவியைப் பற்றி கவலையடைந்த உமேஷ், 8ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டிற்குச் சென்றபோது, அவரின் வீடு வெளிப்புறத்தில் இருந்து பூட்டப்பட்டிருந்தது.

அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஸ்வப்னாலி குறித்து விசாரித்துள்ளார். ஆனால், அவருடைய மனைவி பற்றி எந்தத் தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. உமேஷ் தொடர்ந்து தனது மனைவியைத் தேடி வந்துள்ளார்.

அவரது உடல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

மகாராஷ்டிரா  கொலை வழக்கு; பீட் மாவட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 8ஆம் தேதி மனைவியை காணவில்லை என்று தேடும் பணியில் ஈடுபட்டார் உமேஷ்

ஃபர்சுங்கி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மங்கள மோத்வே பிபிசி மராத்தியிடம் பேசுகையில், “உமேஷ் தனது மனைவியை இரண்டு நாட்களாகத் தேடியிருக்கிறார். பிறகு, 9ஆம் தேதி காலை அவரின் வீட்டில் நகை ஏதேனும் திருடப்பட்டுள்ளதா என்று அவர் வீடு முழுவதும் தேடியிருக்கிறார்” என்றார்.

“அப்போது, ஸ்வப்னாலி சுயநினைவின்றி கட்டிலுக்கு அடியில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மனைவியை இந்த நிலையில் பார்த்த அவர், உடனே காவல் துறையைத் தொடர்பு கொண்டார். காவல்துறை விசாரணைக்காக ஒரு குழுவை உமேஷ் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. விசாரணையில் ஸ்வப்னாலி இறந்தது தெரிய வந்துள்ளது. அவரது உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது,” என மோத்வே கூறினார்.

அதேநேரம், காவல் ஆய்வாளர் மங்கள மோத்வே ஸ்வப்னாலி எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என்று விவரித்தார்.

“உடற்கூறாய்வின்படி, ஸ்வப்னாலி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது கழுத்துப் பகுதியில் அதற்கான சில நகக் கீரல்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

“உமேஷ் தூங்கிய அதே கட்டிலுக்கு அடியில் யாரோ ஸ்வப்னாலியின் உடலை மறைத்து வைத்தது மிகவும் கவலைக்குரியது,” என்றும் மோத்வே தெரிவித்தார்.

கொலைக்குப் பின்னால் இருப்பது யார்?

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்வப்னாலி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூராய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

கடந்த 7ஆம் தேதி இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் கொலையைச் செய்த நபர் ஸ்வப்னாலியின் குடும்பத்திற்குத் தெரிந்தவராக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

பிபிசியிடம் பேசிய, மங்கள மோத்வே, “சந்தேகத்திற்குரிய நபர் தனது வீட்டில் சண்டை எனக் கூறி, ஸ்வப்னாலியின் வீட்டில் அடிக்கடி தங்க வந்திருக்க வேண்டும். அக்கம் பக்கத்தினர் அவர், உமேஷின் உறவினர் எனக் கூறுகின்றனர். ஆனால் காவல்துறையின் விசாரணை முடிவுகள் அந்த நபர் உறவினர் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.”

“உமேஷ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அதிகம் இருப்பதில்லை. மேலும் அவர் வாகன ஓட்டுநர் என்பதால், அவர் அதிக நேரம் வீட்டைவிட்டு வெளியில் இருப்பார். அதனால், காவல்துறை சந்தேகிக்கும் நபர் அதிக நேரம் இந்த வீட்டில் தங்கியிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஸ்வப்னாலியின் மரணத்திற்குக் காரணம் என்னவென்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் உறுதியாக இந்தக் கொலைக்குக் காரணம் இதுதான் என்று கூறிவிட இயலாது. சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் என்னவென்று தெரியும் என்று மோத்வே கூறினார்.

மேலும், “இந்தக் கொலையில் நாங்கள் சந்தேகிக்கப்படும் நபர் யார் என்று வெளியே கூற இயலாது. எங்களுடைய இரண்டு குழுவினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள கெவ்ராய் பகுதியில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வப்னாலியில் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து, நாங்கள் சந்தேகிக்கும் நபரின் அலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடரும்,” என்று மோத்வே கூறினார்.

உமேஷ், ஸ்வப்னாலி இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அந்தக் கட்டடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதும் இல்லை. கொலை நடந்த நேரத்தில் அங்கே பாதுகாப்புப் பணியில் ஒருவரும் இல்லை.

எனவே காவல்துறையினர், பிரதான சாலையில் இருந்து அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கையகப்படுத்தி விசாரணை நடத்த உள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.