“யுரேனஸின் நிலவில் மீன்கள் நீந்தலாம்” – 40 ஆண்டு கருதுகோளை தலைகீழாக மாற்றிய புதிய கண்டுபிடிப்பு
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் நிருபர்
பல ஆண்டுகளாக யுரேனஸும் அதன் ஐந்து பெரிய நிலவுகளும் உயிர்கள் வாழ தகுதியற்றவையாக விஞ்ஞானிகளால் கருதப்பட்டன. ஆனால் இந்த சிந்தனை தற்பொழுது மாறியுள்ளது.
இதற்கு பதிலாக இங்கு பெருங்கடல்கள் இருக்கலாம், மற்றும் இதன் நிலவுகளில் உயிர்கள் வாழக்கூடியதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யுரேனஸை பற்றி நமக்கு தெரிந்த செய்திகள் அனைத்துமே நாசாவினுடைய வாயேஜர்-2 விண்கலத்தின் மூலம் அறியப்பட்டவையே. இது நடந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால் சமீபத்திய ஆய்வில் வாயேஜர்-2 பயணமும் சக்தி வாய்ந்த சூரியப்புயலும் ஒரே சமயத்தில் ஒத்துப்போனதால் யுரேனஸைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் தவறான சிந்தனைகள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யுரேனஸ் மிகவும் அழகான கோள், பனிக்கட்டி வளையங்கள் கொண்டு நமது சூரியக் குடும்பத்தின் வெளிப்புற பகுதியில் உள்ளது. இது மிகவும் குளிரான கோள்களில் ஒன்று. இது மற்ற கோள்களுடன் ஒப்பிடுகையில் ஒருபுறமாக சாய்ந்து இருக்கும். இதனாலேயே இது விசித்திரமான ஒரு கோளாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கோளின் படங்களும் அதன் நிலவுகளின் புகைப்படங்களும் 1986ல் வாயேஜர் 2-வால் அனுப்பப்பட்டது.
யுரேனஸைப் பற்றியும் அதன் அமைப்பை பற்றியும் விஞ்ஞானிகள் முதலில் அறிந்திருந்ததை விட வாயேஜர் 2 அனுப்பிய தரவுகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
இந்த விண்கலம் மூலம் கிடைத்த தரவுகளின் படி இந்தக் கோளும் அதன் நிலவுகளும் மற்ற நிலவுகளைப் போல இல்லாமல், மாறாக செயற்படாமல் இருந்தது. யுரேனஸுடைய காந்தப்புலம் மிகவும் விசித்திரமான முறையில் சிதைந்திருப்பதாகவும் அது காட்டியது. அதாவது இப்புலம் நசுக்கப்பட்டு சூரியனிடமிருந்து தள்ளி வீசப்பட்டது போல உள்ளது.
யுரேனஸ் – உயிர் வாழத் தகுதியில்லாத கோளா?
ஒரு கோளின் காந்தப்புலம், தன்னிடமுதும் தனது நிலவுகளிலும் உள்ள வாயுவையும், பிற பொருட்களையும் வெளியேற விடாமல் தனக்குள் பூட்டி வைத்துக்கொள்ளும். இது அங்கிருக்கும் கடல்கள் மூலமாகவோ அல்லது மற்ற புவிசார் செயல்பாடுகள் மூலமாகவோ நடக்கும். ஆனால் வாயேஜர்2 இதைப்பற்றி எதுவுமே கண்டுபிடிக்கவில்லை. அதனால் யுரேனஸும் அதன் ஐந்து பெரிய நிலவுகளும் உயிர்கள் வாழ தகுதியில்லாத கோளாக பார்க்கப்பட்டது.
இது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஏனென்றால் சூரியக் குடும்பத்திலுள்ள மற்ற கோள்களும் அதன் துணைக் கோள்களைப் போலவும் இல்லாமல் யுரேனஸ் மிகுந்து மாறுபட்டு இருந்தது.
ஆனால் தற்போதைய ஆய்வினால் பல ஆண்டு கால மர்மம் உடைக்கப்பட்டுள்ளது. வாயேஜர்2 விண்கலம் அங்கு சென்றபொழுது நிலைமை சாதகமாக இல்லை எனத் தெரியவந்துள்ளது.
புதிய ஆராய்ச்சியின் படி வாயேஜர்2 விண்கலம், யுரேனஸை நோக்கி பயணிக்கும் போது மிகவும் மோசமான சூரியப்புயல் வீசியதால் அங்குள்ள காந்தப்புலம் தற்காலிகமாக சிதைக்கப்பட்டிருக்கலாம்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் டாக்டர் வில்லியம் டன்னைப் பொறுத்தவரை கடந்த நாற்பது ஆண்டுகளாக யுரேனஸைப் பற்றியும் அதன் நிலவுகளைப் பற்றியும் தவறான பார்வை மற்றும் கருத்துகள் நம்மிடம் இருந்துள்ளது.
“இந்த முடிவுகளின் மூலம் யுரேனஸின் பல ஆச்சரியங்களை கொண்டுள்ளதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. உயிர்கள் வாழ்வதற்கு தேவையான சூழலை அங்குள்ள நிலவுகள் வழங்கலாம். அங்கு கடல்கள் இருக்கலாம், அதில் மீன்கள் கூட வாழலாம்”. என்கிறார் வில்லியம்.
யுரேனஸில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்
யுரேனஸின் தரவுகள் முதலில் வந்தபொழுது அத்திட்டத்தின் இளம் விஞ்ஞானியாக பணியாற்றினார் லிண்டா ஸ்பில்கர். இவர் இப்பொழுதும் கூட வாயேஜர் தொடர்பான செயல் திட்டங்களில் பணியாற்றுகிறார். நேச்சர் அஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியான புதிய ஆய்வு முடிவுகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.
“இந்த முடிவுகளைக் கண்டு நான் மகிழ்ந்தேன். யுரேனஸில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பது எனக்கு உற்சாகமளிக்கிறது,” என்று பிபிசி செய்திகளிடம் அவர் தெரிவித்தார்.
“வாயேஜரின் தரவுகளைக் கொண்டு இவ்வளவு ஆராய்ச்சி நடத்தப்படுவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். 1986-ல் கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு புதிய ஆராய்ச்சிகளையும் அதன் முடிவுகளையும் அறிவது மிகவும் அற்புதமான ஒன்று” என்றார் அவர்.
இந்த ஆராய்ச்சி குழுவுடன் எந்தவொரு தொடர்புமில்லாத டப்ளின் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸின் டாக்டர் அஃபெலியா விபிசோனோ, “இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,” என்று கூறினார்.
“பழைய தரவுகளை படிப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் சில சமயங்களில் அதற்கு பின்னால் புதிய கண்டுபிடிப்புகள் ஒளிந்திருக்கும். அதனைக் கொண்டு வருங்காலத்திற்கு தேவையான விண்வெளி ஆராய்ச்சி செயல்திட்டங்களை மேற்கொள்ளமுடியும்” என்கிறார்.
இதைத் தான் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நாசா செய்து வருகிறது.
நாசாவின் புதிய திட்டம்
வாயேஜர்2, யுரேனஸையும் அதன் நிலவுகளையும் சென்றடைந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த பத்தாண்டுகளில் யுரேனஸ் ஆர்பிட்டர் மற்றும் ப்ரோப் என்ற புதிய திட்டத்தை நாசா தொடங்கவுள்ளது.
நாசாவின் டாக்டர் ஜேமி ஜாசின்ஸ்கி தான், வாயேஜர்2 தரவுகளை மறு ஆய்வு செய்ய முடிவெடுத்தவர். இவருடைய இந்த ஆய்வின் முடிவுகளைப் பொறுத்துதான் அடுத்து தயாரிக்கப்படும் உபகரணங்களும், செயல்திட்டமும் அமையும்.
“வாயேஜர்2 வில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டதை வைத்துத்தான் தற்போது தேவையான விண்கலத்தையும் அதன் வடிவமைப்பையும் செய்துவருகிறோம். அது தவறான சூழ்நிலையில் அங்கு சென்று சேர்ந்ததால் இப்பொழுது நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். அதனால் மிக உன்னிப்பாக செயல்பட்டு இந்த புதிய திட்டத்தின் மூலம் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம்” என்றார் ஜேமி.
நாசாவினுடைய யுரேனஸ் ப்ரோப் 2045ஆம் ஆண்டு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோளை உயிரற்றதாக விஞ்ஞானிகள் நினைத்தார்களோ அங்கே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.