ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள மோடி

by wp_shnn

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21ஆம் திகதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை இவரே.

நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ஆம் திகதி ஆரம்பமாகும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்கவுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் ஜனாதிபதி உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இது அவரது 3-வது பிரேசில் பயணமாகும். இதற்கு முன்பு 2014 மற்றும் 2019-ல் பிரேசில் சென்று இருந்தார்.

அதை தொடர்ந்து, கயானா ஜனாதிபதி முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று மோடி எதிர்வரும் 19ஆம் திகதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20 ஆம் திகதி  ஜனாதிபதி இர்பான் அலியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதையடுத்து கயானா பாராளுமன்றத்தில் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 21-ஆம் திகதி அவரது கயானா பயணம் நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்