4B இயக்கம், தென்கொரியா, பெண்ணுரிமை, பாலியல் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நிஹாரிகா ராம ராவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர்.

இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

4B இயக்கம் என்றால் என்ன?

4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது.

இந்த இயக்கம், அந்த நாட்டில் ‘மீ டூ’ (Me Too) இயக்கத்திலிருந்து உருவானது.

தென் கொரியாவில் காணப்படும் பாலினச் சமத்துவமின்மைக்கு எதிராகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.

4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன?

  • பி ஹான் (திருமணம் வேண்டாம்)
  • பி யேனி (டேட்டிங் வேண்டாம்)
  • பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்)
  • பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்)

அதாவது, இந்த இயக்கத்தின் நோக்கம், திருமணம், டேட்டிங், உடலுறவு, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது.

இத்தகைய தீவிரமான முடிவை தென் கொரியப் பெண்கள் எடுப்பதற்கு என்ன காரணம்?

அவர்களை இப்படி முடிவெடுக்க வைத்த காரணிகள் என்ன?

இந்த இடத்தை அடைய அவர்களை எது ஊக்கப்படுத்தியது?

 4B இயக்கம், தென்கொரியா, பெண்ணுரிமை, பாலியல் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது

அமெரிக்கப் பெண்களுக்கு இருக்கும் அச்சம் என்ன?

அமெரிக்காவில் 4B இயக்கம் வேகமெடுக்க, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி முக்கியக் காரணமாக உள்ளது.

அவருடைய தேர்தல் பிரசாரத்தின் போது, கருக்கலைப்புக்கான உரிமையைக் கூட்டாச்சி அந்தஸ்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார்.

அவருடைய இந்த அறிவிப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை வழங்குகிறதா? அல்லது நீக்குகிறதா?

அதனை அந்தந்த மாகாணங்கள் தீர்மானிக்கும்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருக்கலைப்பை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள் கூட கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக உள்ளன.

டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்திருந்தனர்.

அவர்களது உரிமையை அங்கிகரிக்காத ஆண்களுடனான காதல் உறவுகளிலிருந்து அவர்கள் விலகப் போவதாகக் கூறுகின்றனர். ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைதளச் செயலிகளிலும் இந்தப் போக்குப் பரவியுள்ளது.

இதற்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாகச் சமூக வலைதளத்தில் செல்வாக்கு உடையவரான நிக் ஃபண்டெஸ் தனது எக்ஸ் வலைதளத்திப் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், ‘உங்கள் உடல் மீது எங்களுக்கு எப்போதும் அதிகாரம் உள்ளது,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நிக் ஃபண்டெஸ் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் தனது சமூக வலைதளத்தில் டிரம்பிற்காகப் பிரசாரங்களையும் மேற்கொண்டார். நிக்கின் பதிவு பல இளைஞர்களால் ஆதரிக்கப்பட்டது. அந்தப் பதிவு 35,000 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

26 வயதான அலெக்ஸா, இந்த இயக்கம் பற்றி டிரம்பின் வெற்றிக்குப் பிறகு பல காணொளிகளை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண்களை அவர்களது உரிமைக்காக இந்த இயக்கத்தில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

என்.பி.சி செய்தி முகமையுடனான நேர்காணலில், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இயக்கத்தில் பங்கேற்கப் போகிறீர்களா? என்று கேட்டபோது, அவர், “இல்லை. நாங்கள் எங்கள் உரிமை மீறப்படுவதற்கு எதிராகப் போராட விரும்புகிறோம். எங்களுக்கு கருக்கலைப்பு உரிமை இல்லையெனில், நாங்கள் உடலுறவு கொள்ள ஒப்புக்கொள்ள மட்டோம். டிரம்பின் வெற்றிக்குப் பின், நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லை,” என்கிறார்.

இதுகுறித்துப் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர், சுனிதா, “பெண்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை அமெரிக்காவில் அரசியலாக்கப்படுவது புதிதல்ல. பல தசாப்தங்களாக நடந்துகொண்டிருக்கும் அரசியலின் ஒரு பரிமாணமே. இருப்பினும், ஆண்களுடனான உறவை முற்றிலுமாகத் துண்டிப்பது தற்காலத்தில் ஒரு புதிய செய்தி. இந்த இயக்கம் தன்னிச்சையாக உருவாகவில்லை. இது பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான எதிர்வினை. அது இணையத்தின் மூலம் நடைபெறுவதால் அதனுடைய தாக்கத்தை அறியமுடியவில்லை. ஆனால், இந்தச் செயற்பாட்டாளர்கள் இணையத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்கிறார்.

 4B இயக்கம், தென்கொரியா, பெண்ணுரிமை, பாலியல் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகின்றனர்

4B இயக்கம் உருவானது எப்படி?

2019-ஆம் ஆண்டு பர்னிங் சன் (Burning Sun) அவதூறு தென் கொரியாவை உலுக்கியது. கங்னம் மாவட்டத்தில் (Gangnam) உள்ள பெண்களுக்குப் போதை வஸ்துக்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதைப் படம்பிடித்து, அவர்கள் துன்புறுத்தப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இந்தப் பாலியல் குற்றத்தில் பல தென் கொரிய பிரபலங்களின் பங்கு இருந்தது, அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது, அவர்களுக்குத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அவர்களைப் படம் எடுக்கும் செயல்முறை தென் கொரியாவில் ‘மோல்கா’ (molka) என்று அழைக்கப்படுகிறது.

இது தென் கொரியா முழுவதும் அடிக்கடி நிகழும் குற்றமாகும். பல குற்றவாளிகள் பொது ஓய்வறைகள், தங்கும் விடுதிகள், மற்றும் வேறு பல இடங்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படம்பிடித்து அவற்றை இணையத்தில் வெளியிட்டனர்.

இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததும், மோல்காவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி ‘மீ டூ’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். இந்த குற்றச் செயல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்தது.

தென் கொரியாவில், ஆண்களது ஊதியத்தைவிட பெண்களுக்கான ஊதியம் மூன்றில் ஒரு பங்கு குறைவு. தென் கொரியா தான் ஆண்-பெண் ஊதியத்தில் இவ்வளவு வித்தியாசம் உள்ள பணக்கார நாடு.

இந்த இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடந்து வருகின்றன.

 4B இயக்கம், தென்கொரியா, பெண்ணுரிமை, பாலியல் குற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை

மாற்றம் சாத்தியமா?

தேர்தலுக்கு முன்னதாக, தென் கொரியாவின் தற்போதைய அதிபர், யூன் சுக் யோல், பாலியல் சமத்துவத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தை நீக்குவதாகவும், அரசாங்கத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும் பல முறை தெரிவித்திருந்தார். அந்நாட்டில் குறைந்து வரும் மக்கள்தொகைக்கு பெண்ணியவாதிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், 4B இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசாங்கம் அவர்களைக் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாகக் கருதுவதாகக் கூறுகின்றனர்.

தென் கொரியாவில், பெண்ணியத்திற்கு எதிரான ஆணாதிக்கம் வேரூன்றி இருப்பதாகத் தென்கொரியாவின் பிபிசி செய்தியாளர் ரேச்சல் லீ தெரிவிக்கிறார்.

4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் விதமாக ஆண்களுடனான பாலியல் உறவை முற்றிலும் தவிர்ப்பதாகக் கூறுகின்றனர்.

4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. இது ‘மீ டூ’ (MeeToo) இயக்கத்திலிருந்து உருவான ஒரு சிறிய இயக்கமாகும். இது தென்கொரியாவில் 2010 முதல் 2016 வரை வலுவாகப் பரவியது. கூடுதலாக, ‘எஸ்கேப் தி கார்செட்’ (Escape the Corset) என்ற பெயர் கொண்ட இயக்கமும் அந்நாட்டில் பிரபலமடைந்தது. தென் கொரியப் பெண்களுக்கு விதிக்கப்பட்டக் கடுமையான அழகு சார்ந்த நிபந்தனைகளுக்கு எதிராக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்திற்கு எதிரானவர்கள், தென் கொரியாவில் இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் மிகச் சொற்பமானது என்றும், பாலினச் சமத்துவத்தை அடைவதில் அதன் இலக்கை இது அடையவில்லை எனவும் கூறுகின்றனர்.

ஆண்களுடன் உறவுகொள்ளாமல், ஆனால் சமூகத்தில் அவர்களுடன் தங்களுக்கான உரிமைகளை கோருவதற்கு போராடுவதன் மூலம் சமத்துவதிற்கான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.