தெளிவான செய்தியை அனுப்ப முயற்சிக்கும் அரபு நாடுகள்; முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையில் டிரம்ப் – மத்திய கிழக்கில் சூழல் என்ன?

 அரபு நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

சௌதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரானுடனான மோதல் போக்கை குறைக்க வேண்டும் என விரும்புகின்றன.

அமெரிக்கா – இரானுடனான உறவுகளை மேம்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சமாதானப்படுத்தப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இரானுடனான சௌதி அரேபியாவின் உறவு பதற்றமாகவே உள்ளது. ஆனால் அரபு நாடுகள், டிரம்ப் தனது இரண்டாவது முறை பதவிக்காலத்தில் இரான் மீது சுமூகமான போக்கை கொண்டிருக்க வேண்டும் என்றும், காஸா மற்றும் லெபனானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன.

இரானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு சீனா மத்தியஸ்தம் செய்த பிறகு, இரான் மீதான சௌதி அரேபியாவின் அணுகுமுறை மாறிவிட்டது.

இரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சுமூகமாக்க வேண்டும் என்று சௌதி அரேபியா விரும்புகிறது.

சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில், இரான் மீதான இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் குறித்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விமர்சித்து பேசியுள்ளார்.

இரானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில் இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார், மேலும் அதன் மீது பல தடைகளையும் விதித்தார்.

சமீபத்தில், ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் இறந்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

திங்கட்கிழமையன்று அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் ஆலோசகர் அன்வர் கர்காஷ் கூறும் போது, “டிரம்ப் நிர்வாகத்துடன் ஒரு முழுமையான அணுகுமுறையை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.

2017-ல் டிரம்ப் அதிகாரத்திற்கு வரும் போது கவலையில்லாமல் இருந்த சௌதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தற்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

உறுதியற்ற தன்மை, உலகளாவிய விவகாரங்களில் ஒதுக்கப்படுவது போன்ற அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த அச்சங்கள் அரபு நாடுகளிலும் அதிகரித்துள்ளது.

2018-ம் ஆண்டு, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் முறித்துக் கொண்டபோது, சௌதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பிறகு இரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார் டிரம்ப்.

ஆனால், இந்த முறை இரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்க நினைக்கும் கடுமையான நிலைப்பாட்டை சௌதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை.

மைக் ஹக்கபீ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக ஆகன்சா மாகாணத்தின் ஆளுநர் மைக் ஹக்கபீயை டிரம்ப் நியமித்துள்ளார்

இரான் விவகாரத்தில் அரபு நாடுகள் சொல்வதை டிரம்ப் கேட்பாரா?

ஐநாவுக்கான அமெரிக்க தூதராக எலைஸ் ஸ்டெஃபானிக்-கை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

இரானுக்கு அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்கும் பிரசாரத்திற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக எலைஸ் ஸ்டெஃபானிக், எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர், “நீண்ட காலமாக, பைடன்- ஹாரிஸ் நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக எங்கள் எதிரிகள் தைரியமாகிவிட்டனர். அதிபர் டிரம்ப் திரும்பிய உடன், வலிமை மூலம் அமைதி திரும்பியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தொடர்பாக டிரம்ப் மீது அரபு நாடுகள் அழுத்தம் கொடுக்க முயற்சித்தாலும், அது டிரம்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதாக தெரியவில்லை.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக ஆகன்சா மாகாணத்தின் ஆளுநர் மைக் ஹக்கபீ-யை நியமிப்பதாக அறிவித்ததன் மூலம், இஸ்ரேல் தொடர்பான தனது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்த காலத்தில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவை அளித்தார்.

டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே இந்த மாநாட்டை அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறது.

இதன் மூலம், காஸா மற்றும் லெபனானில் நடக்கும் பிரச்னைகளை விரைவில் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அறிவுறுத்த அமெரிக்கா மீது அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

ஹக்கபீ இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூத குடியிருப்புகள் நிறுவப்படுவதை அவர் ஆதரிக்கிறார்.

காஸா மற்றும் லெபனான் மீது நடக்கும் இஸ்ரேலிய நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து டிரம்ப் என்ன செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும்.

ஹக்கபீயின் நியமனத்தை தனது ட்ரூத் சமூக ஊடக தள பதிவில் அறிவித்த டிரம்ப், “அவர் (ஹக்கபீ) இஸ்ரேலையும் இஸ்ரேலிய மக்களையும் நேசிக்கிறார். இஸ்ரேலியர்கள் அவரை நேசிக்கின்றனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மைக் ஹக்கபீ அயராது உழைப்பார்” என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் ஆதரவாளரும், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவருமான ஹக்கபீ, 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலுக்கான முதல் யூதர் அல்லாத அமெரிக்கத் தூதராக இருப்பார்.

2008-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக யூதர் அல்லாத ஜேம்ஸ் கன்னிங்காமை நியமித்தார்.

டிரம்ப் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பாரா?

செளதியில் நடந்த அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதியில் நடந்த அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு

2025 ஜனவரியில் டிரம்ப் ஆட்சி பொறுப்பை கையிலெடுப்பதற்கு முன்பே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை நாட்டுடன் இணைக்க வேண்டிய ஆயத்தப் பணிகளைத் தொடங்குமாறு இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச் இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

“2025 – ஜுடியா மற்றும் சமாரியாவில் இறையாண்மை ஆண்டு” என ஸ்மோட்ரிச் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

(Judea and Samaria=மேற்குக் கரைப் பகுதியைக் குறிக்க பைபிளில் பயன்படுத்தப்பட்ட பெயர்கள்.)

திங்களன்று நடைபெற்ற தீவிர வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்பின் தேர்தல் வெற்றியை வரவேற்று பேசினார் ஸ்மோட்ரிச்.

மேலும், இஸ்ரேலுடன் பகுதிகளை இணைப்பதற்கான கள ஆய்வுகளை தயாரிக்கத் தொடங்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது கடந்த கால பதவிக்காலத்தில் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியதைப் போலவே, தனது இரண்டாவது பதவிக்காலத்திலும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஆதரிப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று ஸ்மோட்ரிச் கூறினார்.

டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்றினார்.

கோலான் குன்றை இஸ்ரேல் ஆக்கிரமித்ததையும் அவர் அங்கீகரித்தார். இது இஸ்லாமிய நாடுகளை கோபப்படுத்தியது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்த ஸ்மோட்ரிச்சின் கருத்துக்கு ஒரு நாள் கழித்து, டிரம்ப் மைக் ஹக்கபீ-யை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக நியமித்திருக்கிறார். இதன் மூலம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் டிரம்ப். இதிலிருந்து இஸ்ரேலுக்கான அவரின் ஆதரவு பழையபடி தொடரும் என்று தெரிகிறது.

மேற்குக்கரை இணைப்பு தொடர்பாக இஸ்ரேல் நிதியமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்மோட்ரிச் கருத்துக்கு எதிராக கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைக்க தேவையான உள்கட்டமைப்புகளை தயார் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள இஸ்ரேலிய நிதியமைச்சரின் கருத்தை கத்தார் வன்மையாகக் கண்டிக்கிறது. இது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 ஆகியவற்றின் அப்பட்டமான மீறலாகும். இது இந்த பகுதியில் அமைதிக்கான வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச்

பட மூலாதாரம், GE

படக்குறிப்பு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் நிதி அமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் இறையாண்மை குறித்து பேசிய இஸ்ரேல் அமைச்சரின் கருத்துக்கு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்றகருத்துக்கள், இரு நாடுகளுக்கும் இடையே சமரச தீர்வுகளை அமல்படுத்தி அமைதியை நிலைநாட்டும் மற்ற முயற்சிகளை பலவீனப்படுத்துவதாக சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் கடந்த பதவிக் காலத்தில், அரபு உலகம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தது. ஆனால், அவரது இரண்டாவது பதவிக்காலத்தில், விஷயங்கள் வேகமாக மாறிவிட்டன. டிரம்ப் தனது கடந்த பதவிக்காலத்தில் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் சௌதி அரேபியா. அந்தப் பயணம் அவரது முன்னுரிமைகள் என்ன என்பதை சுட்டிக்காட்டியது.

ஆனால், இப்போது அரபு நாடுகள் தங்கள் முன்னுரிமைகளை தீர்மானிக்கின்றன, இவை டிரம்பின் முன்னுரிமைகளுடன் முரண்படலாம்.

ரியாத்தில் நடந்த அரபு இஸ்லாமிய நாடுகளின் மாநாடு இந்த முயற்சிக்கு சான்றாக கருதப்படுகிறது.