தென் கொரியாவில் எட்டு மணிநேரம் நடக்கும் மிக கடினமான தேர்வு – இளைஞர்களின் வாழ்வை மாற்றுவது எப்படி?
- எழுதியவர், ரேச்சல் லீ
- பதவி, பிபிசி நியூஸ்
எட்டு மணி நேரம், ஐந்து பாடத்தேர்வுகள், நான்கு இடைவேளைகள், ஒரு நாள் மற்றும் ஒரு வாய்ப்பு. தென் கொரியாவின் இளைஞர்களின் வாழ்க்கையே மற்றும் ‘சுனங் தேர்வு’ இப்படிதான் இருக்கும்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே தென்கொரியா மாணவர்கள், எந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பயிலுவார்கள் என்பது முடிவாகும். அவர்களின் வேலை, வருமானம் மற்றும் பிற உறவுகளில் கூட இதன் தாக்கம் இருக்கும்.
சுனங் தேர்வு என்பது தென்கொரியாவில் நடத்தப்படும் ஒரு திறனறிதல் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெற்றால்தான் மாணவர்களுக்கு அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் தேர்வு, வருடத்திற்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டுமே நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்துவர்கள். இந்த ஆண்டு இந்த தேர்வு நவம்பர் 14-ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.
இந்த வருடம் சுனங் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் சிலரை சந்தித்து நாங்கள் பேசினோம். இந்தக் கடுமையான தேர்வினை எதிர்கொள்ளும் சில வழிமுறைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
‘எனது ஒவ்வொரு நாளும் சுனங் தேர்வை சுற்றியே இருக்கும்’
சுனங் தேர்வு மொத்தம் எட்டு மணி நேரம் நடைபெறும். இதில் ஒவ்வொரு பாடத்தேர்வுக்கு இடையிலும் 20 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். மேலும் மதியம் உணவருந்த 50 நிமிடங்கள் இடைவேளை.
ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வு நேரம் சுமார் 80 முதல் 107 நிமிடங்கள். இதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.
தனது சில நண்பர்கள், தேர்வு நாள் அன்று என்ன உணவை உண்ண வேண்டும் என திட்டமிட்டு தினமும் அந்த உணவை சாப்பிட்டு பழக்கி கொள்கிறார்கள்.தேர்வு நாள் அன்று எந்த செரிமான பிரச்னையும் ஏற்பட கூடாது என்பதை உறுதி செய்ய இதை செய்கிறார்கள் என 19 வயதாகும் ஹியூன்-மின் ஹ்வாங் கூறுகிறார்.
தேர்வு எழுதும் மாணவர்களிடம் இந்த பழக்கம் பெரும்பாலும் காணப்படுகின்றது, ஏன் என்றால் தேர்வு எழுத வரும்போது அவர்கள் சாப்பிட சொந்தமாக உணவை எடுத்து வர வேண்டும் என்கிறார் அவர்.
காரசாரமான உணவு, மாவு கொண்டு செய்யப்படும் உணவு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மாணவர்களின் பெற்றோர்களும், ஆன்லைன் தேர்வு குழுவில் உள்ள மாணவர்களும் இதுபோன்ற அறிவுரைகளை வழங்குகின்றனர். இதில் மாணவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பவை அடங்கும்.
பொதுவாக மாணவர்களுக்கு வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடும்படி அறிவுறுத்தப்படுகிறது. புரதச் சத்துக்களும் இவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
சோறு, மீன், கோழி இறைச்சி, காய்கறிகள் மற்றும் சூடான சூப் போன்றவற்றை தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மதிய உணவாக சாப்பிட உகந்தது.
“என்னுடைய நண்பர்கள் சிலர் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, எழ பழகிக்கொள்கின்றனர். கவனச் சிதறல் இல்லாமல் தேர்வை எழுத உடலுக்கு ஓய்வு மிகவும் அவசியம்”, என்று ஹியூன்-மின் ஹ்வாங் கூறுகிறார்.
தேர்வு நேரத்தின் கழிவறைக்கு செல்வதால் கூட கவனச் சிதறல் ஏற்பட்டுவிட கூடாது.
“பல மாதிரித் தேர்வுகளை எழுதிய பின்னர் அடிக்கடி கழிவறைக்கு செல்லாமல் இருக்க பழகிக்கொண்டேன். தேர்வு நடுவே உள்ள 20 நிமிட இடைவேளைக்கு உள்ளையே எனது எல்லா வேலையையும் செய்து முடிக்க பழக்கமாக்கிக் கொண்டேன்”, என்றும் அவர் கூறினார்.
20 வயதாகும் காங் ஜுன்-ஹீ, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இந்த தேர்வை எழுதுகிறார். இந்த தேர்வுக்காக தன்னை முழுவதுமாக அற்பணித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
இதற்கு முன் இந்த தேர்வை எழுதியபோது, அவர் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் இன்னும் அதிகமாக முயற்சி செய்திருக்கலாம் என்றும் கூறினார்.
தற்போது இந்த தேர்வுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளதாகவும், வாழ்நாளே சுனங் தேர்வை பொருத்தே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இதற்காக காலை 6.30 மணிக்கு எழுந்த உடனே மாதிரி தேர்வு எழுதி தயாராகிறார். இது போன்ற மாதிரி தேர்வுகள் சுனங் தேர்வு போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை எழுதிய தேர்வு முடிவுகளை கண்டு 20 வயதாகும் காங் ஜுன்-ஹீ மகிழ்ச்சியடையவில்லை. தனது நண்பர்கள் குழுவில் இவர் மட்டுமே மீண்டும் இந்த முறை இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார்.
அவருடைய நண்பர்கள் அனைவரும் தங்களது கல்லூரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதாகவும், இந்த முறை இன்னும் சிறப்பாக தேர்வெழுத முயற்சிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“சுனங் தேர்வுக்காக தயார் செய்வது உங்களது கனவுகளை எவ்வாறு அடைவது என்று உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்,” என்றார் அவர்.
மாதிரி தேர்வுகள் எவ்வாறு உதவுகின்றன
சுனங் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை எழுதுவது மிகவும் அவசியமாக இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்காக மூன்று மாதிரி தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெறும். இது மட்டுமல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்களின் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி பெறலாம்.
மாதிரி தேர்வுகள் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக யூ-ஜங் காங் கூறுகிறார்.
தொடக்கத்தில் தேர்வில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும் மாதிரி தேர்வு எழுதிய பின்னர் தன்னால் நன்றாக கவனம் செலுத்த முடிவதாக அவர் தெரிவித்தார்.
‘பதற்றம் கூடாது’ என்பதை தாரகமந்திரமாக அவர் தனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
தென் கொரிய தலைநகரான சோலில் படிக்கும் மாணவியான காங் என்பவரை சந்தித்தோம்.
“கிராம் ஸ்கூல்” எனப்படும் பயிற்சி நிலையங்கள் தென் கொரியாவில் மிகவும் பிரபலமானது. மாணவர்கள் சுனங் தேர்வுக்கு தயாராக இவை பெரிதும் உதவுகின்றன.
இதுபோன்ற பள்ளிகளை சுற்றி பல கஃபேக்களில் மாணவர்கள் வந்து படிக்கின்றனர், அவர்களை ஊக்குவிப்பதற்காக அதன் ஜன்னல்களில் “குட் லக்” போன்ற வாக்கியங்கள் கொண்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பலர் வீட்டில் இருந்தபடியே இந்த தேர்வுக்கு தயாராகுகின்றனர். “கல்வி மட்டுமே உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரே வழி,” என்று அவர்கள் கருதுகின்றனர்.
“தேர்வின் முடிவுகள் சமூகத்தில் உங்கள் நிலை பற்றியும், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் முடிவு செய்யும். நீங்கள் தகுதியானவர் என்று தெரிந்தால்தான் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணையும் கிடைக்கும்”, என்றனர் யூ-ஜங் காங்
சுனங் தேர்வில் ஐந்து கட்டாய பாடங்கள் இருக்கின்றன. கொரியன், கணிதம், ஆங்கிலம், கொரிய வரலாறு மற்றும் சமூக அறிவியல்/ அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்கள் ஆகும்.
இதை தவிர்த்து மாணவர்கள் ஒரு கூடுதல் மொழிப்பாட தேர்வை எழுத வேண்டும். ஃபிரெஞ்சு, சைனீஸ், ரஷ்யன் அல்லது அரேபிக் போன்ற மொழிப்படத்தில் ஒன்றை மாணவர்கள் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யலாம்.
சாங்-வோன் லீ இந்த ஆண்டு இந்த தேர்வெழுத உள்ளார். திறன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவை மாணவர்களுக்கு தேவை என்று அவர் வலியுறுத்துகிறார்.
“மாணவர்கள், காலையில் விரைவாக எழுந்து சுனங் தேர்வு எழுதும் நேரத்திலே மாதிரி தேர்வுகளை எழுதி பழக வேண்டும். இது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் ” என்றார் அவர்.
“முதல் தேர்வில் நீங்கள் தவறிழைத்துவிட்டால் அடுத்தடுத்த தேர்வுகளை அது பாதிக்கும்,” என்றார்.
”மதிய உணவு இடைவேளைக்கு பின்பு மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இதற்கு பின் நடக்கும் ஆங்கில படத்தேர்வின்போது சொல்வதை கேட்டு எழுதும் பகுதி இருப்பதால், கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இது போன்ற நேரத்தில் தூங்காமல் இருக்கவும் வேண்டும்” என்றார் அவர்.
வாழ்க்கையையே மாற்றும் தினம்
பயிற்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ரோ ஜொங்-ஹோ, கிராமப்புற மாணவர்கள் உட்பட பலருக்கு தேர்வு எழுத பயிற்சி அளித்து வருகிறார்.
“மாணவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்திருத்தல் மிகவும் முக்கியம். ஏனென்றால் தேர்வு எழுதும்போது வேறு யாரும் அவர்களுக்கு உதவ முடியாது,” என்று அவர் கூறினார்.
”தேர்விற்கு முன்பு, மாணவர்கள் தினமும் படிப்பதற்கான பழக்கத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். தேர்வு காலை 8.40 மணிக்கு தொடங்கும் என்பதால் மாணவர்கள் மாதிரி தேர்வுகளையும் அந்த நேரத்திலே தொடங்குவது அவசியம்” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இந்த நேரத்தில் தென் கொரியா முழுவதும் இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒன்று கூடி உதவுகிறது.
சுனங் எழுத செல்லும் மாணவர்களுக்காக முழு நாடும் உதவுகின்றது. காவல் துறை, தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் என அனைத்துமே தேர்வுக்கு தாமதமாக செல்லும் மாணவர்களுக்கு உதவுகின்றன.
மாணவர்கள் நேரத்துடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவும், அதற்காக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் அங்குள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை தாமதமாக வர அறிவுறுத்துகின்றன.
மேலும் தேர்வு நாள் அன்று பங்குச் சந்தை சற்று தாமதமாக தொடங்குகிறது. 35 நிமிடங்கள் வானில் விமானங்கள் செல்லாது.
அங்குள்ள சில பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்படுகின்றன. சீனியர்கள் தேர்வெழுதும்போது ஜூனியர்கள் தேர்வு மையங்களின் வெளியில் நின்று சீனியர்களை உற்சாகப்படுத்துகின்றனர்
8 மணி நேரம் நடக்கும் தேர்வின் போது மாணவர்கள் தங்களது ஆற்றலை தக்க வைக்க, எழுந்து நடக்க வேண்டும் என்று ஆசிரியர் ரோ ஜொங்-ஹோ அறிவுறுத்துகிறார்.
“மாணவர்கள் தேர்வுக்கு முன் படித்த படங்களை திருப்புதல் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்த நேரத்தில் அவர்கள் சற்று நடக்குமாறு நான் கேட்டுக்கோள்கிறேன். ஏனென்றால் தேர்வின்போது அவர்கள் விழிப்புடன் இருக்க இது உதவுகிறது. ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்கு முன் இதை செய்ய வேண்டும் அப்போதுதான் தூக்கம் வராமல் இருக்கும்”, என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.