சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது: மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார்.
“ஆளுநரின் எண்ணித் துணிக” என்ற தலைப்பில், இளம் சாதனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைபுரிந்த குழந்தைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: சிறப்பு குழந்தைகள் குறித்து குறைந்த விழிப்புணர்வே உள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.உண்மையில் சிறப்பு குழந்தைகளுக்கு பெரிய அளவில் குறைபாடு கிடையாது. தகவல் தொடர்பில் சிறிய பிரச்சினை இருக்கலாம். அவர்களை பள்ளியில் சேர்ப்பதில் பிரச்சினை உள்ளது. பயிற்சிபெற்ற சிறப்பு ஆசிரியர்கள் தேவையான அளவுக்கு இல்லை. எனினும், முன்பைவிட தற்போது சிறப்பு குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
உயர்ந்த லட்சியம், சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை இருந்தால் ஒருவர் உயர்ந்த நிலையை அடையலாம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மாணவப் பருவம் அழகான, அற்புதமான பருவம். இப்போது என்னவாக வேண்டுமென கருதுகிறீர்களோ, அதேபோல எதிர்காலத்தில் ஆவீர்கள். எனவே, பெரிதாக கனவு காணவேண்டும். சிறிய அளவில் கனவு கண்டால், ஒருபோதும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. சுயகட்டுப்பாடும், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் அவசியம். சுயகட்டுப்பாடு இல்லாமல், வாழ்க்கையில் எதையுமே சாதிக்கமுடியாது. நேரத்தை திட்டமிட்டு, நல்ல முறையில் பயன்படுத்துங்கள். சமூக ஊடகங்களில் கவனத்தை சிதறவிடாதீர்கள். இவ்வாறு ஆளுநர் பேசினார்.