வரும் நாட்களில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு? சென்னையில் மழை தொடருமா?
சென்னையின் பல இடங்களில் நேற்று (வியாழன், நவம்பர் 14) நள்ளிரவு தொடங்கி, இன்று (வெள்ளி, நவம்பர் 15) காலை வரை மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்குத் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரம், லட்சத்தீவு மறும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது, என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்துவரும் நாட்களில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது?
தமிழகத்தில் மழை – களநிலவரம் என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (வெள்ளி, நவம்பர் 15) அதிகாலை முதலே மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை பெரம்பலூர், மாயவரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு லேசான மழை பெய்துள்ளது. திருச்சியில் லேசான மழை பெய்தது.
கோவையில் நேற்று மாலை மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை
தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், சென்னை நகரம் முழுதும் நல்ல மழை பதிவாகியுள்ளதாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்தப் போக்கு ஞாயிறு (நவம்பர் 17) வரை தொடரும். தினசரி மழை மூலமாக வடகிழக்குப் பருவமழையின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவருகிறது. இதனால் நிலத்தடி நீர் அளவு மேம்படும்,” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பகலில் ஆங்காங்கே மழை பெய்யும், இந்த மாவட்டங்களில் உள்ளூர் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று பதிவிட்டிருக்கிறார்.
வரும் நாட்களில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி-நவம்பர் 16, ஞாயிறு-நவம்பர் 17) ஆகிய இரு தினங்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
நவம்பர் 18 அன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை (நவம்பர் 19, 20) ஆகிய இருதினங்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.