மூளைச்சாவு அடைந்த 2 வயது ஆப்ரிக்க சிறுவன்: நான்கு பேரின் வாழ்வை மாற்றியது எப்படி?
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த, கென்யாவை சேர்ந்த இரண்டு வயது ப்ராஸ்பருக்கு, அக்டோபர் 26 அன்று ஒரு விபத்தின் மூலம் மூளைச்சாவு ஏற்பட்டது.
ஆனால், ப்ராஸ்பர் இந்த உலகைவிட்டுச் சென்றாலும், உடல் உறுப்பு தானம் மூலம் இந்தியாவில் உள்ள நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
“எனது மகன் மீண்டும் உயிருடன் வரமாட்டான், ஆனால் இறந்த பிறகும் அவனால் மற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன். எனவே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவனது உடல் உறுப்புகளைத் தானம் செய்தேன். எனக்குத் தெரிந்தவரை, அவனது உறுப்புகள் நான்கு உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. எனது மகன் ப்ராஸ்பரால் பிறருக்கு உதவ முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.” என்கிறார் ப்ராஸ்பரின் அம்மா, ஜாக்குலின் டயர்.
ப்ராஸ்பர், அக்டோபர் 17ஆம் தேதி, சண்டிகரில் உள்ள தனது வீட்டின், இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த ப்ராஸ்பர், சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். ப்ராஸ்பரின் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பம் விரும்பியது.
ப்ராஸ்பரின் ஒரு சிறுநீரகம் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கணையம் வேறொருவருக்கும், இரண்டு நபர்களுக்கு இரண்டு கண்கள் என மொத்தம் நான்கு பேருக்கு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
பிஜிஐ மருத்துவர்களின் கூற்றுப்படி, ப்ராஸ்பர் தான் இந்தியாவின் இளம் கணைய நன்கொடையாளர். அவரால் இந்த உலகில் வாழ முடியவில்லை, ஆனால் அவரது உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்படுவதில் மகிழ்ச்சி என குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.