காதல், உடலுறவு குறித்து சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி பெண்கள்
- எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன்
- பதவி, பிபிசி வேல்ஸ் லைவ்
“நீ மாற்றுத் திறனாளியாக இருப்பதால், எல்லோரையும் போல உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” என ஒருவர் ஹாலியிடம் கேட்டபோது அவருக்கு 16 வயது தான் ஆகியிருந்தது.
“சக்கர நாற்காலியில் இருந்தவாறு மட்டும் தான் உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” எனக் கடந்த காலங்களில், அவரிடம் உடலுறவு குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
“ஒருவர் என்னைக் காதலிப்பதை ஏதோ மிகப்பெரிய தியாகம் செய்வது போன்று மக்கள் நினைக்கிறார்கள். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் என்னை இப்போது காயப்படுத்துவதே இல்லை” என்கிறார் ஹாலி.
இப்போது 26 வயதாகும் ஹாலிக்கு நாள்பட்ட வலி மற்றும் ‘ஹைப்பர்மொபிலிட்டி சிண்ட்ரோம்’ (Hypermobility syndrome) உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் டேட்டிங் (Dating) மற்றும் காதல் உறவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் எதிர்மறையான நம்பிக்கைகள் மற்றும் மோசமான எண்ணங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் பல மாற்றுத் திறனாளி பெண்களில் ஹாலியும் ஒருவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழ்ச்சியான உறவுகள் குறித்து சமூகத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம் என்று ஹாலி கிரீடர் கூறுகிறார்.
அவர் பதின்ம வயதில், தனது கணவர் ஜேம்ஸை ‘டேட்’ (Date) செய்யத் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகளாக அவரைக் காதலித்த ஹாலி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.
“பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத் திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள். எங்களுக்கு ஒரு சோகமான கதை உள்ளது எனக் காட்டவே விரும்புகிறார்கள்,” என்று ஹாலி கூறுகிறார்.
தனது கணவர் ஜேம்ஸ், எப்போதும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், ஆனால் மற்றவர்களின் கருத்துகள் தன்னை சங்கடப்படுத்துவதாகவும் ஹாலி கூறுகிறார்.
“நாங்கள் முதன்முதலில் ஒன்றாக ஒரு வீட்டில் குடியேறியபோது, ‘உன் உடல்நிலை மோசமடைந்தால், நீ ஒரு சுமையாக மாறிவிடுவாய். அதனால் உன் கணவர் உன்னை விட்டுச் சென்றுவிடுவார்’ என்று சிலர் என்னிடம் கூறினர்” என்கிறார்.
பள்ளியில் படித்த காலத்தில் தன்னைப் பற்றி பலர் தவறான அனுமானங்களைக் கொண்டிருந்தார்கள் எனவும், சிலர் முகத்திற்கு நேராகவே அதைக் கேட்டார்கள் என்றும் ஹாலி கூறுகிறார்.
“சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக மக்களுக்கு எழும் முதல் கேள்வி, இந்த நபரால் உடலுறவு கொள்ள முடியுமா என்பதுதான்.”
பள்ளியில் தனது வகுப்பில் உள்ள சிறுவர்கள், அந்தரங்கமான மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்டார்கள் என்று ஹாலி கூறினார்.
“’சக்கர நாற்காலியில் மட்டுமே தான் உன்னால் உடலுறவு கொள்ள முடியுமா?’, ‘உனது மூட்டு எலும்புகள் இடம் மாறிவிடுமா? ‘ஒருவர் உன்னுடன் முரட்டுத்தனமாக உடலுறவு கொள்ள விரும்பினால், உன்னால் தாங்க முடியுமா?’ இப்படிப் பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.”
சமூக ஊடகங்களில், செக்ஸ் பற்றித் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் வந்ததாகக் கூறும் ஹாலி, “அவ்வாறு ஒருவர் எனக்கு வாய்ப்பு அளிப்பதற்கே நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கிலே அந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன,” என்கிறார்.
‘பாலியல் கல்வி’ (Sex Education) எனும் இணையத் தொடரில் வந்த ஐசக் குட்வின் என்ற கதாபாத்திரத்தை மேற்கோள் காட்டி, ‘சமீபத்தில் ஊடகங்களில்தான் பார்த்த, மாற்றுத் திறனாளிகள் குறித்த நல்லதொரு சித்தரிப்பு அது மட்டும்தான்’ என்று கூறும் ஹாலி, ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகள் குறித்து ஒரு சிறந்த, நேர்மறையான பிரதிநிதித்துவத்தைக் காண வேண்டுமென விரும்புகிறார்.
வேல்ஸ் நாட்டின் கேர்பில்லியை சேர்ந்த 38 வயதான நிக்கோலா தாமஸ், தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பதை முறையாகப் பதிவு செய்து, அரசின் சான்று பெற்றவர்.
“மக்கள் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, ‘நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்?’ இது எனக்கு ஒருவித அதிர்ச்சியை அளிக்கும். ஒருவரின் அந்தரத்தைக் குறித்த, அதே நேரம் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்வி இது” என்கிறார் நிக்கோலா தாமஸ்.
நிக்கோலாவுக்கு நியூரோமைலிடிஸ் ஆப்டிகா எனப்படும் ‘ஆட்டோ இம்யூன் நோய்’ உள்ளது. இதனால், அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்ணில் பார்வைத் திறனை இழந்தார். அடுத்து ஐந்து ஆண்டுகளில் மற்றொரு கண்ணிலும் பார்வைத் திறன் பறிபோனது.
“நிறைய பேருக்கு பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்துத் தவறான முன்முடிவுகள் உள்ளன. அவற்றைப் பொய்யாக்க விரும்புபவர்களில் நிச்சயமாக நானும் ஒருத்தி” என்கிறார் நிக்கோலா.
நிக்கோலாவின் பொழுதுபோக்குகளில் படகோட்டுதல், பேடல் போர்டிங் (நீர்நிலைகளில் துடுப்புப் பலகை பயன்படுத்தி விளையாடுவது) மற்றும் பயணம் செய்வது ஆகியவை அடங்கும். அவர் அடுத்ததாக ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நிக்கோலா தனது பார்வையை இழந்தபோது, அவருக்கு ஒரு காதலர் இருந்தார். ஆனால், பின்னர் அந்தக் காதல் உறவு முறிந்தது.
“நான் ஏதோ ஒரு சுமையைப் போல நடத்தப்பட்டேன். ‘நீங்கள் எப்போதும் அவளுக்கு ஒரு காப்பாளராகவே இருக்க முடியாது’ என்று சிலர் என் காதலனிடம் கூறுவார்கள். உண்மை என்னவென்றால், எனக்கு எப்போதும் ஒரு காப்பாளர் தேவைப்பட்டதில்லை” என்கிறார் அவர்.
நிக்கோலாவிற்கு இப்போது ஒரு காதலர் இருக்கிறார், அவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. “நாங்கள் இருவரும் பார்வை மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், ஒரு நகரத்தை மகிழ்ச்சியாகச் சுற்றி வருவோம். யாருடைய உதவியும் இல்லாமல் டேட்டிங் செல்வோம். எதுவும் எங்களைத் தடுக்காது” என்கிறார்.
மக்கள் தன் மீது ஆர்வம் காட்டும்போது, ஒரு முன்முடிவோடு அவர்கள் தன்னை அணுகுவதை உணர்வதாக நிக்கோலா கூறுகிறார்.
“சமூக ஊடகங்களில் என்னை அணுகி, டேட்டிங் செல்லலாமா எனக் கேட்பார்கள். நான் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி என்று சொல்லும்போது அவர்களின் அணுகுமுறை மாறுகிறது அல்லது வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.”
“அவர்கள் ஏதோ கஷ்டப்பட்டு உங்களுக்கு ஒரு உதவி செய்வதைப் போல நீங்கள் நடத்தப்படுவீர்கள். அது உடனடியாக உங்கள் உற்சாகத்தை குறைத்துவிடும்” என்கிறார் அவர்.
“எங்களது தனிப்பட்ட பண்புகளை, திறன்களைப் பார்க்காமல், ஒரு பொதுப் புத்தியுடன் எங்களை அணுகுகிறார்கள். அந்த எண்ணத்தை நான் உடைக்க விரும்புகிறேன், எனக்கென்று ஒரு முழுமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளது” என்று கூறுகிறார் நிக்கோலா.
தங்கள் பாலியல் அடையாளத்தை ஆராயவும், மற்றவர்களைப் போலவே தங்களது காதல் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிமை உண்டு என்று கேட் வாட்கின்ஸ் கூறுகிறார்.
இவர் வேல்ஸ் நாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘டிஸ்-எபிலிட்டி வேல்ஸ்’ (Disability Wales) எனும் அமைப்பு ஒன்றில் அரசியல் திட்ட அதிகாரியாக உள்ளார்.
“இந்தச் சமூகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பாலியல் மற்றும் காதல் உறவுகள் ஏன் தடைசெய்யப்பட்ட ஒன்றாக உள்ளன? வெறுமனே மூன்று வேளை சாப்பாடும், தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் போதும் என்ற நிலையை விட, வாழ்க்கையில் எங்களுக்கு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் கேட்.
“வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்தவாறு வாழ்வது அல்லது அனுபவிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. ஆனால், இந்த விஷயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை” என்று கூறுகிறார் கேட்.
மாற்றுத் திறனாளி பெண்களுக்கு மோசமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதும், அது குறித்து அவர்கள் கவலையுடன் புகார் கூறுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாகக் கூறும் கேட், “இது வருந்தத்தக்க ஒரு விஷயம்” என்கிறார்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செக்ஸ் பொம்மைகள் மற்றும் கருவிகள் தன்னைப் போன்றோருக்கு நம்பிக்கை அளிக்க உதவும் என்றும், அவற்றை முக்கிய பாலியல்சார் பொருட்கள் விற்கும் தளங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
“நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், இயல்பாக உணர வேண்டும். உங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மற்றவர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல முடியும். சுய அன்பு என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறுகிறார் கேட்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.