இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அநுர குமார மாபெரும் வெற்றி; மக்கள் சொன்ன செய்தி என்ன? – ஓர் அலசல்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன?
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் வெற்றி
இலங்கையின் ஜனாதிபதியாக கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில் தேர்வான அநுர குமார திஸாநாயக்க, பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார்.
உடனடியாக புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக உள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமாகவும் நிரப்பப்படுகிறார்கள்.
தற்போது வந்துள்ள முடிவுகளின்படி, அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மக்கள் வாக்களிப்பின் மூலம் 141 இடங்களையும் தேசியப் பட்டியலின் மூலம் 18 இடங்களையும் பெற்று, ஒட்டுமொத்தமாக 159 இடங்களை அடைந்துள்ளது.
“இந்தத் தேர்தல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த எந்த அவதானியும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமெனக் கருதவில்லை. அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கலாம் அல்லது பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பார் என்றுதான் கருதப்பட்டது. இது யாருமே எதிர்பார்க்காத வெற்றி” என ஆச்சரியம் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம்.
சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் வடக்கு – கிழக்கில் மட்டக்களப்பு தவிர்த்த எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியதே பெரும் ஆச்சரியத்தை அளித்த ஒரு ஜனநாயக நிகழ்வாக இருந்தது.
இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலிலும்கூட, வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாமல், விருப்ப வாக்குகளின் மூலமே அநுரவின் வெற்றி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருக்கும் வெற்றி எல்லாத் தரப்பினருக்குமே மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
“இது ஒரு வரலாற்று வெற்றி. ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியை நோக்கிய அலை இருந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் கிடைக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், எதிர்க்கட்சிகள்தான். எதிர்க்கட்சிகள் சீர்குலைந்து போயிருந்தன. அவற்றால், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரு வலுவான போட்டியைக்கூட தர முடியவில்லை” என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.
2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரிடர், இலங்கைக்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2022-ஆம் ஆண்டில் ‘அரகலய’ என்று குறிப்பிடப்பட்ட மக்கள் போராட்டம் வெடித்தது. ஒட்டுமொத்தக் கோபமும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசின் மீது திரும்பியது. இதற்குப் பிறகு, அவர் பதவி விலகி, ரணில் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
“இந்நிலையில், மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருந்தார்கள். ஒரு மாற்றத்தை எதிர் நோக்கியிருந்தார்கள். பழைய அரசியல்வாதிகளை தூக்கியெறிய வேண்டுமென நினைத்தார்கள். இதனால் மற்ற அரசியல் கட்சிகளால் பல இடங்களில் மக்கள் மத்தியில் சென்று பிரசாரம்கூட செய்ய முடியாத சூழலில்தான் இந்தத் தேர்தல் நடைபெற்றது. ஆகவே இவ்வளவு பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்திருக்கிறது” என்கிறார் அகிலன் கதிர்காமர்.
அகிலன் சுட்டிக்காட்டுவதைப்போல, பல பாரம்பரிய, மூத்த தலைவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தே ஒதுங்கிக் கொண்டார்கள்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு முன்பும் பின்பும் இலங்கை அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷஷிந்திர குமார ராஜபக்ஷ மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியைத் தழுவினர்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சிகள், மீண்டெழுவதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி, அந்த வெற்றியின் அலையிலேயே இந்த வெற்றியைப் பெற்றுவிட்டார் அநுரகுமார என்கிறார் தனபாலசிங்கம்.
“எதிர்க்கட்சிகள் தங்களை ஒரு வலுவான சக்தியாக முன்வைக்கவில்லை. மாறாக, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனுபவமில்லாதவர்கள் என்பது போன்ற குறைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இவர்களைத் தேர்வுசெய்தால், ‘எல் போர்ட்’ நாடளுமன்றம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்றார்கள். இவர்களைத் தேர்வு செய்தால் மீண்டும் பொருளாதார வங்குரோத்து நிலை ஏற்படும் என்றார். ஆனால், மக்கள் தெளிவாக இருந்தார்கள். இது எதையுமே காதுகொடுத்துக் கேட்கவில்லை” என்கிறார் தனபாலசிங்கம்.
இலங்கையின் வடக்கும் கிழக்கும் சொல்லும் செய்தி என்ன?
வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த வெற்றி, பல செய்திகளை குறிப்பிட்டுக் காட்டுவதாகச் சொல்கிறார் அகிலன்.
“வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தேசியக் கட்சி இவ்வளவு பெறிய வெற்றியைப் பெற்றது இதுதான் முதல் முறை. இதற்குக் காரணம், அங்கிருந்த தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளால் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, பல்வேறு நெருக்கடிகளை அங்கிருந்த மக்கள் எதிர்கொண்டார்கள். கொரோனா காலகட்டத்திலும் அதற்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியின்போதும் அவர்களால் எந்தத் தீர்வையும் முன்வைக்க முடியவில்லை. எந்த நிவாரணத்தையும் தர முடியவில்லை. இந்த பொருளாதார நெருக்கடி வடக்கை பெரிதாக பாதிக்காது என்றெல்லாம்கூட சொன்னார்கள். ஆகவே, தமிழ் தேசியத் தலைமை மீதான கோபத்தில்தான் இப்படி ஒரு தீர்ப்பைத் தந்திருக்கிறார்கள்” என்கிறார் அகிலன் கதிர்காமர்.
இப்போது மிகப் பெரிய வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்றிருந்தாலும், பொருளாதாரத்தை மீட்பது, விலைவாசியைக் குறைப்பது, ஐஎம்எஃப் விதித்துள்ள பொருளாதார இலக்குகளை எட்டுவது போன்றவை மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.
புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு