மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தும் கோவை தொழில்துறையினர்- முதல்வரிடம் வைத்த கோரிக்கை என்ன?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொள்ளும் முதலைமைச்சர் மு.க. ஸ்டாலினின் திட்டத்தில், அவர் முதல் களஆய்வு மேற்கொண்டது கோவையில்.
கடந்த நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள், கோவையில் களஆய்வு மேற்கொண்டு, நடைபெற்றுவரும் திட்டங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பல புதிய திட்டங்களைத் துவங்கி வைத்தார்.
முதலமைச்சர் பல திட்டங்களைத் துவங்கி வைத்தாலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட மின் கட்டணம் உட்பட பல கோரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்ற குறையும் தொழில் அமைப்பினரின் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால், கோவைக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் எல்லாமே தொழில்துறையினர் வைத்த கோரிக்கைகள்தான், என்றும், மின்கட்டணம் தொடர்பான கோரிக்கையிலும் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார், என்றும் கூறுகிறார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்.
ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் என்ன?
கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் தங்கநகை உற்பத்தி சார்ந்த புதிய தொழில் வளாகம், கோவை டைடல் பார்க்கில் 17.17 ஏக்கரில் 30 லட்சம் சதுரஅடி பரப்பில் புதிய தகவல் தொழில் நுட்பப்பூங்கா, தமிழகத்தின் மிகநீளமான பாலமாக 10.1கி.மீ., துாரத்துக்குக் கட்டப்பட்டு வரும் அவினாசி ரோடு பாலத்தை மேலும் 5 கி.மீ. நீட்டிப்பது உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாக அறிவித்தார்.
ஆனால் மேற்கு மாவட்டங்களிலுள்ள தொழில் முனைவோர் இரண்டாண்டுகளாக முன்வைத்துரும் முக்கியக் கோரிக்கையான, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக இங்குள்ள தொழில் அமைப்பினர் கூறுகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு வந்தபோது, கோவையின் மிக முக்கியமான தொழில் அமைப்பான கொடிசியா சார்பிலும், தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபோசியா சார்பிலும், அதன் நிர்வாகிகள் அவரை நவம்பர் 5-ஆம் தேதி நேரில் சந்தித்து, இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மறுநாள் இதுகுறித்து ஏதாவது அறிவிப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
‘உற்பத்திச் செலவு அதிகம்’
தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கூறும் தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) செயலாளர் வாசு, “அவற்றில் 95% நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான். நமக்குப் பிற மாநிலங்களிடமிருந்து கடும் போட்டி இருக்கிறது. நாம் தரும் அதே விலைக்கு ஆந்திராவிலும் அதே பொருளைத் தருகின்றனர். அதனால் விலையையும் கூட்ட முடியாது. நமது உற்பத்திச் செலவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது,” என்கிறார்.
அதிலும் நிலைக்கட்டண உயர்வுதான் பெரும் பாரம் என்று சொல்லும் வாசு, “உதாரணமாக 100 கிலோவோல்ட் மின் இணைப்புப் பெற்ற ஒரு நிறுவனம், முன்பு நிலைக்கட்டணமாக ரூ.3,500 செலுத்திவந்தது. இப்போது ரூ.18,000-க்கு மேல், அதாவது 463% அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில்தான் மின்கட்டணம், கூலி அதிகம். இதனால் சிறுதொழில் முனைவோர் குறைந்த லாபம் (tight margin) வைத்து வேலை பார்க்க வேண்டியுள்ளது,” என்றார்.
ஆண்டுக்கு 5% அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தும் மின்பகிர்மானக் கழகத்தின் ஆலோசனையை ஏற்கும் தொழில்முனைவோர் பலரும், நிலைக்கட்டணத்தையும் படிப்படியாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.
முதலமைச்சரிடம் தரப்பட்டுள்ள கோரிக்கை மனு குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், “நிலைக்கட்டண உயர்வால், இரு ஆண்டுகளாகத் தொழிலை மேற்கொள்ளவும் முடியாமல், விடவும் முடியாமல் சிறுதொழில் முனைவோர் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலையிலிருந்து ‘பவர்ஃபேக்ட்’ முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறையும் எங்களை வாட்டி வதைக்கிறது,” என்கிறார்.
தொழில் நிறுவனங்களில் மின்சாரப் பயன்பாடு சீரற்ற முறையில் இருக்கும்போது வசூலிக்கப்படும் ‘பவர்ஃபேக்ட்’ பற்றி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியபின் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று அவர் வலியுறுத்துகிறார்.
“இதுவரை 18 கிலோவோல்ட்டுக்கு மேல் மின் இணைப்புப் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே ‘பவர்ஃபேக்ட்’ பார்க்கப்பட்டது. இப்போது 18 கிலோவோல்ட்டுக்கு உட்பட்ட நிறுவனங்களுக்கும் இந்த முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. நிலைக்கட்டணத்தை நிறுத்த வேண்டும், அல்லது குறைக்க வேண்டும். அபராதத்தைத் தள்ளி வைக்கவேண்டும்,” என்கிறார் அவர்.
மின்கட்டணத்தைப் போல இதையும் படிப்படியாக உயர்த்தியிருந்தால் பிரச்னையில்லை என்று கூறும் வாசு, மின்சாரம் என்பது பயன்படுத்தும் அளவின்படி கணக்கிடப்படுவதாகவும் ஆனால், மின்சாரத்தைப் பயன்படுத்தாவிட்டாலும் ஒரே மாதிரியாக நிலைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியவில்லை என்றும் கூறினார்.
சோலார் அமைப்புக்கு மானியம்
நிலைக்கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று பல்வேறு தொழில் அமைப்புகளும் வலியுறுத்திவரும் நிலையில், தொழிற்சாலைகளில் கூரை மற்றும் தரையில் அமைக்கப்படும் சோலார் அமைப்புகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற மாற்று ஆலோசனையை முதலமைச்சரிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளது கொடிசியா அமைப்பு.
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் விளக்கிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன், “சோலார் அமைப்புக்கு 25% மானியம் எதிர்பார்க்கிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தில், 112 கிலோ வாட் வரை சோலார் அமைப்பை நிறுவும் நிறுவனங்களுக்கு அரசு மானியம் தரவேண்டும், நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கக்கூடாது. உற்பத்தி அளவீட்டு மீட்டர்களைப் பொருத்துவதைத் தவிர்க்கவேண்டும்,” என்றார் அவர்.
மேலும், எவ்விதப் பிணையுமின்றி 7% குறைந்த வட்டி விகிதத்தில் குறைந்தது 7 ஆண்டுகளுக்குக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அல்லது தாய்கோ வங்கி மூலமாகக் கடன் வழங்க வேண்டும் என்பதுதான் முக்கியக் கோரிக்கை என்றார், கார்த்திகேயன்.
‘30% நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் திட்டம்’
ஆனால், சோலார் அமைப்பு, அனைத்து தொழில் முனைவோருக்கும் தீர்வாகாது என்று சொல்லும் டான்சியா செயலாளர் வாசு, “சொந்தக் கட்டடம் வைத்திருக்கும் தொழில் முனைவோரால்தான் அதைச் செயல்படுத்த முடியும். அதற்கும் பெரிய அளவில் இடம் தேவைப்படும். உதாரணமாக, 40 எச்.பி., பயன்பாடுள்ள லேத் ஒன்றுக்கு சோலார் மின்சாரத்துக்கு 3,000 சதுர அடியில் சோலார் பேனல் அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான லேத்கள், பத்தடிக்கு பத்தடி இடத்தில்தான் நடத்தப்படுகின்றன,” என்றார்.
இதை ஒப்புக் கொள்ளும் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், “இது 30% தொழில் முனைவோருக்குதான் பயன்படும் என்பதை நாங்களும் கணித்திருக்கிறோம். ஆனால், ஆண்டுக்கு 8% அளவுக்கு மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், சோலார் அமைப்பு பெரும் மாற்றாக இருக்குமென்பதே நம் ஆலோசனை,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சோலாருக்கு மானியம் கோரும் கோரிக்கை பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, எங்களிடம் விரிவாகப் பேசினார். தற்போது 20 நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் தயாராகி வருகின்றன, அதுவே அதிகரிக்கும் மின்தேவையைச் சமாளிக்கவும் உதவும், மின்கட்டணமும் மலிவாகவும் இருக்கும் என்றார். நாங்கள் இத்திட்டத்தை விரிவாக விளக்கியதும் திட்டம் நன்றாயிருப்பதாகத் தெரிவித்தார். அதனால் அரசிடமிருந்து இதுதொடர்பாக சாதகமான அறிவிப்பு விரைவில் வருமென்று நம்புகிறோம்,” என்றார்.
பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் ஒருமித்த கோரிக்கையான மின்சார நிலைக்கட்டணம் குறைப்பு, பவர்ஃபேக்ட் அபராதம் தவிர்ப்பு போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, தமிழக அரசின் கருத்து அறிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகத் தலைவர் நந்தகுமார் ஆகியோரை, பிபிசி தமிழ் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டும் பதில் பெற முடியவில்லை.
இதுதொடர்பான கேள்விகளை அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பியும், அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்,”நிலைக்கட்டணம் குறைப்பு தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதனால் முதல்வரும், துறை அமைச்சரும் விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.