பிட்காயின் விலை திடீரென உயரக் காரணம் என்ன? கிரிப்டோகரன்சி பற்றிய முக்கிய கேள்விகளுக்கான பதில்
- எழுதியவர், அபினாவ் கேயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, பிட்காயின் எனும் இணைய நாணயம் (கிரிப்டோகரன்சி) 90,000 அமெரிக்க டாலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை உலகின் ‘கிரிப்டோ தலைநகராக’ உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார்.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை, இந்த வருடம் 80%-க்கு மேல் உயர்ந்துள்ளது.
பிட்காயின் மட்டுமின்றி இதரக் கிரிப்டோகரன்சியான டோஜ்காயினும் (Dogecoin) டிரம்பின் ஆதரவாளரான ஈலோன் மஸ்க் ஊக்குவித்ததால் அபரிவிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான அரசு, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக கேரி ஜென்ஸ்லரை நியமித்திருந்தது, இவர் கிரிப்டோ சந்தையின் பின்னணியைத் தகர்க்க வேலை செய்தவர்.
ஸ்டோன்எக்ஸ் நிதி நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் மேட் சிம்ப்சன் பிபிசி-யிடம், டிரம்ப் தலைமையிலான அரசு கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாட்டை மாற்றினால், பிட்காயினின் விலை 1 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தாண்டக் கூடும் எனக் கூறினார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்)
இது இவ்வாறிருக்க, கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதை எப்படி வாங்குவது? அதற்கு வரி விதிக்கப்படுமா?
இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைக் காணலாம்.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
பெரியக் கணினிகள் ஒரு சூத்திரத்தை அல்லது வழிமுறையைத் தீர்க்கின்றன. இது ‘சுரங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன்மூலமே கிரிப்டோகரன்சி உருவாகிறது.
பிட்காயின் உட்பட 4,000 வகையான மெய்நிகர் நாணயங்கள் (Virtual Coins) சந்தையில் இருக்கின்றன. இந்த நாணயங்கள்தான் ‘கிரிப்டோகரன்சி’ என்று அழைக்கப்படுகின்றன.
சாதாரண நாணயங்கள் ஏதேனும் ஒரு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுக் கட்டுப்படுத்துகிறது.
ஆனால், கிரிப்டோகரன்சியை எந்த நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை.
கிரிப்டோகரன்சி எவ்வாறு செயல்படுகிறது?
கிரிப்டோகரன்சியின் அனைத்து பறிமாற்றங்களும் உலகெங்கும் உள்ள பல கணினிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.
எளிமையாகச் சொல்வதெனில், உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரு பெரிய அறையில் அமர்ந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு ஒருவர் ஒரு கிரிப்டோகரன்சி பரிமாற்றம் செய்தால், அது அந்த அறையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் தெரியவரும். அதற்காகத்தான், இந்தத் தகவல்கள் பல இடங்களில் சேகரிக்கப்படுகின்றன.
உலகெங்கும் உள்ள பல கணினிகள் இந்தத் தரவுகளைச் சேகரிக்கின்றன. அதனால், இதனை நெறிப்படுத்தத் தனியாக வங்கிகள் போன்ற நிறுவனங்கள் தேவைப்படுவதில்லை.
2008-ஆம் ஆண்டு, பிட்காயின் எனப் பெயரிடப்பட்ட கிரிப்டோகரன்சி உருவக்கப்பட்டது. அப்போதிருந்து எந்த வாலட்டிலிருந்து (பணப்பை) எந்த வாலட்டுக்கு பிட்காயின் பரிவர்த்தனை நடைபெற்றது என அனைத்து தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதிலிருக்கும் பிரச்னை என்னவென்றால், இந்த வாலட் யாருக்குச் சொந்தமானது என்ற தகவல் தெரியாமலிருப்பது.
மெய்நிகர் சொத்து (Virtual Asset) என்றால் என்ன?
மெய்நிகர் என்பதை நம்மால் தொட்டுப்பார்த்து உணரமுடியாத ஒன்று.
பிட்காயின், டோஜ்காயின், எத்தரியம், உள்ளிட்ட அனைத்து கிரிப்டோகரன்சியும் மெய்நிகர் சொத்துகளே. இவை நான்-ஃபஞ்சிபிள் டோக்கன்கள் (Non-fungible tokens – NFT) எனும் தொழில்நுட்பத்தின் மூலமாகச் செயல்படுகின்றன.
நான்-ஃபஞ்சிபிள் டோக்கன் என்பது ப்ளாக் செயினில் கணினித் தரவு வடிவில் பதிவு செய்யப்படிருக்கும் ஒரு குறியீடு. இந்தக் குறியீடு ஒரு கலைப்படைப்பையோ, ஒரு பொருளையோ குறிக்கும். இந்தக் குறியீட்டை வேறு பொருளுக்கு மாற்ற முடியாது. அதனால்தான் அது ‘நான்-ஃபஞ்சிபிள்’ என்று அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, உலகில் முதல் முதல் அனுப்பப்பட்ட SMS குறுஞ்செய்தியை ஒரு நபர் நான் ஃபஞ்சிபிள் டோக்கனாக மாற்றிப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
NFT மூலம் பலர் ஓவியங்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை உருவாக்கினர். அவறை மெய்நிகர் வடிவில் வாங்கவோ விற்கவோ முடியும்.
‘டிஜிட்டல் வாலட்’ என்றால் என்ன?
ஒரு நபர் தனது பணத்தைத் தனது வாலட்டில் (பணப்பை, பர்ஸ்) வைத்துக்கொள்கிறார். அதுபோல, கிரிப்டோகரன்சியை வைத்துக்கொள்ள டிஜிட்டல் வாலட் (Digital Wallet) தேவைப்படுகிறது.
டிஜிட்டல் வாலட்டைத் திறக்கக் கடவுச்சொல் அவசியம். டிஜிட்டல் வாலட்டின் கடவுச்சொல்லை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் கிரிப்டோகரன்சியை வாங்கவும், விற்கவும் முடியும்.
டிஜிட்டல் வாலட்டிற்கு 40 முதல் 50 இலக்க முகவரி உள்ளது. இந்த முகவரி, எண்கள் மற்றும் எழுத்துக்களால் ஆனது.
அனைத்து டிஜிட்டல் வாலட்டுகளுக்கும் ஒரு தனிப்பட்ட முகவரி இருக்கும். டிஜிட்டல் உலகில் இதுபோல பல கோடி வாலட்கள் உள்ளன.
ப்ளாக்செயின் (Blockchain) என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி தொடர்பான ஒரு பரிவர்த்தனை மேற்கொண்டால், அது ‘ப்ளாக்’ (Block) ஆகப் பதிவு செய்யப்படும். ஒரு ப்ளாக் என்பது பல கணினித் தரவுகள் கொண்ட ஒரு திரட்டு. ஒரு ப்ளக்கில் ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனைக்கான தரவுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
ஒரு ப்ளாக் நிறைந்தபிறகு, பரிவர்த்தனை தரவுகள் மற்றொரு ப்ளாக்கில் பதிவு செய்யப்படும்.
இதுபோல அடுத்தடுத்த ப்ளாக்-கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொள்ளும். இந்தச் சங்கிலிப் பிணைப்புதான் ‘ப்ளாக் செயின்’ என்று அழைக்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை என்றால் என்ன?
கிரிப்டோகரன்சியை வாங்கவும், விற்கவும் ஒரு தளம் உள்ளது. பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்ற அதற்கான பரிமாற்றுத் தளத்தை அணுகி மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கிரிப்டோகரன்சியை விற்றுவிட்டு மற்றொன்றை வாங்கவும், இந்தப் பரிமாற்ற நடவடிக்கை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்குவது போல, கிரிப்டோ பரிமாற்ற தளங்களின் உதவியுடன் கிரிப்டோகரன்சி வாங்கப்படுகிறது.
இங்கு கிரிப்டோகரன்சியை வாங்குபவர்களும், விற்பவர்களும் இருக்கிறார்கள்.
கிரிப்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு வரி விதிக்கப்படுமா?
இந்தியாவில் கிரிப்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
உதாரணமாக, ஒரு நபர் ரூ.1 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சி வாங்கி, இரண்டு மாதங்கள் கழித்து அதை ரூ-2 லட்சத்துக்கு விற்பனை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இதன்படி, அவர் ரூ.1 லட்சம் ஒரு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார். இப்போது, அந்த நபர் அந்த லாபத்திலிருந்து 30%, அதாவது ரூ.30,000-த்தை இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.
கிரிப்டோகரன்சி மீதான 1% வரிப் பிடித்தம் என்றால் என்ன?
ஒரு நபர் ரூ.1 லட்சம் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை மற்றொரு நபரிடமிருந்து வாங்கியதாக வைத்துக்கொள்வோம்.
அப்போது, முதல் நபர் 1% வரிப் பிடித்தத்தை (TDS), அதாவது ரூ.1,000 தவிர்த்து மீதம் ரூ.99,000 ரூபாயைச் செலுத்துவார்.
இந்த ரூ.1,000 இந்திய அரசின் வருமானப் வரி பிடித்தமாக (TDS) வைப்பு வைக்கப்படும். பிறகு இது வரியாக வரவு வைக்கப்படும்.
இது அரசிற்கு அந்த கிரிப்டோகரன்சி பரிமாற்றம் பற்றிய தகவல்களை அறிய உதவும்.
பரிசாக வழங்கப்படும் கிரிப்டோகரன்சியின் மீது வரி விதிக்கபடுமா?
ஆம், சில சமயங்களில், நெருங்கிய உறவுகளுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படாது.
ஆனால், இந்தியாவில், கிரிப்டோகரன்சி பரிசுப் பொருட்களின் பிரிவில் சேர்க்கப்படவில்லை.
அதனால், உங்கள் உறவினருக்கு நீங்கள் கிரிப்டோகரன்சி பரிசளித்தால், அதற்கு வரி விதிக்கப்படும்.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் இழப்பு எற்பட்டால் என்ன ஆகும்?
கிரிப்டோகரன்சி மூலம் எற்படும் லாபம் அல்லது இழப்புகளை ஆண்டு வருமானத்தில் சேர்க்க முடியாது.
ஒருவேளை நீங்கள் உங்கள் தொழில் மூலம் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளீர்கள். அதேசமயம் கிரிப்டோகரன்சியில் ரூ.1 லட்சம் இழந்துள்ளீர்கள்.
இந்நிலையில், உங்களுக்கு லாபமாகக் கிடைத்த ரூ.5 லட்சத்துக்கான வரியை நீங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும். இதில், கிரிப்டோகரன்சி மூலம் எற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது.
இழப்பைக் கழித்துவிட்டு உங்கள் வருமானத்தை ரூ.4 லட்சமாகக் கணக்கு காட்ட முடியாது.
பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளில் இருக்கும் பணத்துக்கும் டிஜிட்டல் பணத்துக்கும் என்ன வித்தியாசம்?
டிஜிட்டல் நாணயம், உங்கள் கைபேசியில் அல்லது டிஜிட்டல் வாலட்டில் டிஜிட்டல் வடிவில் (கணினித் தரவுகளாக) இருக்கும்.
இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய வங்கி தேவையில்லை.
ஆனால், பேடிஎம் போன்ற இ-பரிவர்த்தனை நிறுவனங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் போன்ற சாதாரணப் பணத்தை ஆன்லைனில் பரிவர்த்தனை செய்ய உதவும் நிறுவனங்கள். இவை இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றன.
இவற்றின் மூலம் ஒருவர் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி அல்லது இ-வாலட்டைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இ-பரிவர்த்தனை – கிரிப்டோகரன்சி என்ன வேறுபாடு?
பிட்காயின்களின் மொத்த மதிப்பு 2.1 கோடியைத் தாண்ட முடியாது.
பிட்காயினின் இருப்பு வரையறுக்கப்படதால், பிட்காயின்கள் குறைவாகவே உள்ளன. பிட்காயினின் தேவை அதிகரிக்கும் போது அதன் விலை அதிகரிக்கிறது.
ஐந்து வருடங்களுக்கு முன், பிட்காயினின் விலை ரூ.22,000 ஆக இருந்தது.
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இது ரூ.30 லட்சமாக உயர்ந்தது.
இன்று ஒரு பிட்காயினின் மதிப்பு 90,000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம்.
பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
மறுபுறம், இ-பரிவர்த்தனை மூலம் அனுப்பப்படும் ரூபாய் போன்ற நாணயங்களின் மதிப்பு மாறாது.
இ-பரிவர்த்தனை மூலம் ரூ.10-ஐ எப்போது அனுப்பினாலும், அதன் மதிப்பு ரூ.10-ஆகத்தான் இருக்கும்.
இ-பரிவர்த்தனைகள் நாம் பணம் அனுப்பும் முறையை மட்டுமே மாற்றியுள்ளன.