தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்ட 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணி, மன்னார், பியகம பகுதியை சேர்ந்தவர்களே பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக இன்று கைது செய்யப்பட்டனர்.19, 26, 49 வயதுடைய நபர்களே மன்னார் மற்றும் பியகம பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தவிர பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. எவ்வாறாயினும், பொலிஸாரின் பாதுகாப்பு அனைத்து இடங்களிலும் பலப்படுத்தப்பட்டே உள்ளன. துரதிஷ்டவசமாக தேர்தல் கடமைகளில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சுகயீனம் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அந்தவகையில், யாழ்ப்பாணம், கோப்பாய், உரும்புராய் பகுதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.
33 வயதுடைய குறித்த நபர், மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதேபோன்று, கெஸ்பேவ பகுதியில் வாக்களிப்பு நிலையமொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, கொபேகன பிரதேசத்திலும் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த 57 வயதுடைய ஒருவரும் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவை தவிர தேர்தல் வாக்களிப்பின்போது எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை” இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.