கங்குவா: படம் எப்படி இருக்கிறது? – ஊடக விமர்சனம்
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இருவருக்கும் சிறு இடைவெளிக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா.
ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இத்திரைப்படம், பீரியட் டிராமா என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. டிரெய்லரில் சூர்யாவின் தோற்றமும், சண்டைக் காட்சிகளும் எதிர்பார்ப்பை அதிகரித்தன.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், உலகம் முழுதும் இப்படம் 2,000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என இயக்குநர் சிவா கூறியிருந்தார். இந்திய திரையுலகமே படத்தை வியந்து பார்க்கப் போகிறது என்று நடிகர் சூர்யா கூறியிருந்தார்.
படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் சொல்வது என்ன? படம் எப்படி இருக்கிறது?
படத்தின் கதை என்ன?
திரைப்படத்தின் கதை, 1070 மற்றும் 2020 என இருவேறு காலகட்டங்களில் நகர்கிறது. இரு நூற்றாண்டுகளையும் மாறி மாறி காட்டுகிறார்கள்.
தற்போதைய காலகட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஒரு பவுன்ட்டி ஹன்டர் (பணத்திற்காகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பவர்). 1070இல் இருக்கும் சூர்யா ஒரு பழங்குடியின போர்வீரன். அவரைக் காட்டும்போது தூய தமிழில் விவரிக்கிறார்கள். 1070இல் இருந்த 5 கிராமங்களைப் பற்றிக் காட்டுகிறார்கள்.
நிகழ்காலத்தில் பணத்திற்காகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பிரான்சிஸுக்கு, ஒரு சிறுவன் மூலம் கடந்த காலம் பற்றிய நினைவு வருகிறது. கடந்த காலத்தில் பெருமாச்சி எனும் பழங்குடி கிராமத்தின் தலைவராக இருக்கிறார், கங்குவா.
அந்தக் கிராமத்திற்கு அவர்களை ஆள வேண்டும் என நினைக்கும் ரோமானியர்களிடம் இருந்து ஆபத்து வருகிறது. ரோமானியர்கள் மட்டுமின்றி மற்றோர் இனக்குழுவின் தலைவரான உதிரனிடம் இருந்தும் (பாபி தியோல்) ஆபத்து வருகிறது. இது கங்குவா – உதிரனுக்கு இடையிலான போராக மாறுகிறது.
கதையில் தெளிவின்மையா?
“எந்தத் தொடர்பும் இல்லாமல் கோவாவில் நடக்கும் ஒரு பார்ட்டியில் இருந்து கதை பழங்கால கிராமத்தில் நடக்கும் போருக்குச் செல்வதாக” டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
நிகழ்காலத்தில் வாழும் பிரான்சிஸின் (சூர்யா) ஆரம்பக் காட்சி, காலாவதியான கங்குவா திரைக்கதைக்கு முன்னோட்டமாக இருப்பதாகவும், எதிரிகளைத் தாக்குவதுடன் கதாநாயகன் அறிமுகம் இருப்பதாகவும், அத்துடன் வழக்கமான காதல் பாடல், பிரேக்-அப் காட்சி என கதை நகர்வதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் கூறுகிறது.
பாம்புகள் மற்றும் தேள்களுடன் சண்டையிடுவது, அக்காலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எதிரிகளுடன் சண்டையிடுவது போன்ற புதுமையான சண்டைக் காட்சிகள் உள்ளதாகப் பாராட்டியிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கதைக்கேற்ற அனுபவத்தை 3டி தொழில்நுட்பம் தருவதாகவும் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளும் படத்தில் இருப்பதாகவும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவு பிரமாண்டமான காட்சிகளுக்கு மத்தியிலும் தெளிவின்மை இருப்பதாக விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
“கடந்த காலத்தில் நிகழும் காட்சிகள் கற்பனை திறத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் கவனமாகக் கையாளப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, போர் அறிவிக்கப்பட்ட பின் சூர்யா சிறிது காலம் நாடு கடத்தப்படுகிறார், அங்கு சிறுவனுடன் மீண்டும் இணையும்போது பாடல் வருகிறது. இப்போது அவர்களுக்கு இடையிலான பிணைப்பு கதையின் மையமாக இருக்கிறது. இருவரின் காட்சிகளும் எங்கெங்கோ கதையில் செருகப்பட்டிருப்பதால், அவர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் வாய்ப்பு பார்வையாளர்களுக்குக் கிடைக்கவில்லை” எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
விமர்சனங்களுக்கு மத்தியில் சூர்யாவின் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா. கங்குவா பாத்திரத்தில் சூர்யா வசீகரிப்பதாகவும் இருவிதமான கதாபாத்திரங்களுக்கும் தன் உடல்மொழி மூலம் வித்தியாசத்தைக் காட்டியிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கூறியுள்ளது.
நடனம், சடங்குகள், போருக்கு முன்பு வேண்டுதலின்போது ஆயுதங்களை வைக்காத பழக்கம், இருமுனை கொண்ட ஆயுதங்கள் என, அந்தக் கிராமத்தின் கலாசாரங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவ படக் குழுவினர் முக்கியத்துவம் அளித்துள்ளனர், ஆனால், அனைத்தும் படத்தில் அரைகுறையாகவே தோன்றுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
“உதாரணமாக, எதிரி கிராமத்தைச் சேர்ந்த வில்லன் பாபி தியோலுக்கு நான்கு மகன்கள் உள்ளனர், ஆனால் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ படத்தில் நேரமில்லை. நகைச்சுவைக்கான காட்சிகளும் காலவதியானவையாக உள்ளன. படத்தின் கதை சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது” எனக் கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம்.
ராஜமௌலியின் மகதீரா தாக்கம் தெரிகிறதா?
“ஜனரஞ்சகமான திரைப்படத்தில், நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் இணைக்கும் இயக்குநரின் யோசனை அவருடைய தைரியத்தை வெளிப்படுத்துகிறது. படத்தில் இயக்குநரின் அறிவுத்திறன் வெளிப்படுவதாக” பாராட்டியுள்ளது இந்தியா டுடே.
ஆனால், அந்த யோசனைகள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் முழுமை பெறாமல் இருப்பதால், பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாகவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நிகழ்காலத்தில் காட்டப்படும் படத்தின் முதல் 20 நிமிடங்கள் உண்மையில் பொறுமையைச் சோதிப்பதாகவும் விமர்சித்துள்ளது.
“கடந்த காலத்திற்கு நகரும்போதுதான் கதை வேகமெடுக்கிறது” என்கிறது இந்தியா டுடே.
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ‘மகதீரா’வில் இருந்து இப்படம் தாக்கம் பெற்றுள்ளதாகக் கூறும் இந்தியா டுடே, ஆனால் “இந்தப் படம் மகதீராவை போன்று சாதிக்கவில்லை. படத்தின் திரைக்கதை குழப்பமாகவும் பொருத்தமின்றி இருக்கிறது” எனவும் விமர்சித்துள்ளது.
கடந்த காலத்தில் நடைபெறும் கதையில் வசனங்கள் பேசப்படும் பாணியிலும் குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய இந்தியா டுடே, “முதலில் பண்டைய தமிழில் பேசும் அம்மக்கள், பின்னர் உடனேயே வழக்கு மொழியில் பேசுவதாக” கூறுகிறது.
சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு கங்குவா படத்தைக் காப்பாற்றியிருக்கிறது என்றும், “கங்குவா போன்ற படத்தில் பாபி தியோல் உரிய வகையில் பயன்படுத்தப்படவில்லை. திஷா பதானியின் பங்களிப்பு வெகுவாக இல்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இந்தியா டுடே.
“திரையரங்கில் பார்க்கும் அதிக சத்தம் நிறைந்த திரைப்படமாக கங்குவா இருக்கும். அவர்கள் பேசுவதன் டெசிபல் அளவு மிக அதிகமாக இருக்கிறது.”
வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவால் கங்குவா திரைப்படம் அழகாக இருப்பதாகவும் இந்தியா டே பாராட்டியுள்ளது. கடந்த கால கதை மற்றும் ஐந்து இனக் குழுக்களுக்கு இடையிலான அதிகார மோதலில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
மேலும், இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த குறிப்பு படத்தின் இறுதியில் இருப்பதாகவும் அனைத்து படங்களுமே பல்வேறு பாகங்களாக எடுக்கப்பட வேண்டுமா என்பதை இயக்குநர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா டுடே தெரிவித்திருக்கிறது.
‘குறைவில்லாத தரமான கலைப்பணி’
“முதலில் இயக்குநர் சிவா உள்பட மொத்த படக்குழுவினருக்கும் கைத்தட்டல் கொடுக்கலாம். காரணம், அனைத்து துறையினரும் பயங்கரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்”, என்கிறது தினமணி விமர்சனம்.
பிளாஷ்பேக் காட்சிகளில் நிஜமான காட்டிற்குள் சென்றதுபோல் தீவுகளை உருவாக்கியதில் தொடங்கி அந்தக் காலகட்டத்தின் உணவு, உடை, ஆயுதங்கள், தோற்றம் வரை அனைத்திலும் இயக்குநர் சிவா மற்றும் மறைந்த கலை இயக்குநர் மிலனின் நுட்பமான பார்வை பிரதிபலிப்பதாகவும் தினமணி பாராட்டியுள்ளது.
அதேவேளையில், “கதையாகவே கங்குவா, 7ஆம் அறிவு படம் போல சுவாரஸ்யமான முடிச்சுடன் உருவாகியிருக்கிறது. ஆனால், மேலோட்டமான உணர்ச்சியற்ற கதையும் திரைக்கதையும் படத்தைப் பாதிக்கிறது” எனவும் விமர்சித்துள்ளது.
பிளாஷ்பேக் காட்சிகளுக்கான கலைத்துறையும், விஎஃப்எக்ஸுகளும் தமிழ் சினிமாவிற்குப் புதிய பாய்ச்சலைக் கொடுத்திருக்கின்றன என்றும் முக்கியமாக, சூர்யாவுக்கும் முதலைக்குமான சண்டைக் காட்சி தத்ரூபமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
“திஷா பதானியா இது? எனக் கேட்கும் அளவிற்குத்தான் அவர் காட்சிகளில் இடம்பெறுகிறார். அப்பட்டமாக, படத்தின் வணிகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் தினமணி விமர்சித்துள்ளது.
அதேவேளையில், பாபி தியோல் தன் தோரணையால் கொஞ்சம் மிரட்டுவதாகவும் நடிகர்கள் அவினாஷ், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இசை, ஒளிப்பதிவு, கலைத்துறை, மேக்கப், விஎஃப்எக்ஸ் எனப் பல துறைகளின் கடுமையான உழைப்பு காட்சிக்குக் காட்சி தெரிந்தாலும் கதையும் திரைக்கதையும் தடுமாறும் இடங்களால் இவை அனைத்தும் பலத்தை இழக்கின்றன என்றும் விமர்சித்துள்ளது.
அதோடு, “கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை எடுக்க முன் வருபவர்கள் தேர்ந்த திரை எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்கு கங்குவா உதாரணம்” என்றும் தினமணி சுட்டிக்காட்டியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.