இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்கா – இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா, அர்ஷ்தீப்
- எழுதியவர், க.போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திலக் வர்மாவின் அற்புதமான சதம், அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம், அர்ஷ்தீப் பந்துவீச்சு ஆகியவற்றால் செஞ்சுரியனில் நேற்று (நவ. 13) நடந்த 3வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.
அதிகபட்ச ஸ்கோர்
கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அதிகபட்சமாக இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்களை இந்திய அணி சேர்த்திருந்தது. இதுதான் இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை இந்த ஆட்டத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி முறியடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
தோல்வி தொடர்கிறது
கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி சொந்த மண்ணில் எந்த டி20 தொடரையும் வென்றதில்லை என்ற நிலை இந்தத் தொடரிலும் தொடர்கிறது.
கடைசி ஆட்டத்தில் ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வென்றாலும், தொடர் சமநிலை ஆகுமே தவிர டி20 தொடரை வெல்ல முடியாது. 2022ஆம் ஆண்டுக்குப் பின் தென் ஆப்ரிக்க அணி 5 டி20 தொடர்களை இழந்து, 2 தொடர்களை சமன் செய்துள்ளது. ஆனால், இதுவரை வெல்லவில்லை.
ஆட்டநாயகன் திலக்
செஞ்சுரிய மைதானத்தில், டி20 போட்டியில் சதம் அடித்த 12வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 32 பந்துகளில் அரைசதமும், 51 பந்துகளில் தனது முதல் சதம் அடித்து 107 ரன்களுடன் (7 சிக்ஸர், 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி இந்த காலண்டர் ஆண்டில் 8வது முறையாக டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதுவரை ஒரு காலண்டர் ஆண்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
அதுமட்டுமல்லால், ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணியில் 5 வீரர்கள் ரோஹித் சர்மா(121), அபிஷேக் சர்மா(100), சாம்ஸன்(111, 107), திலக் வர்மா(107) சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வாலுக்குப் பின் டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையை திலக் வர்மா பெற்றார். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் இணைந்து 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், 5வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார்.
ஒன்பதாவது ஓவரில் 100 ரன்களை இந்திய அணி எட்டியதாலும், நடுப்பகுதி ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் 85 ரன்களை குவித்ததால், ஸ்கோர் 240 ரன்களை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், 219 ரன்களுடன் சுருங்கியது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 65 ரன்கள் குவித்தாலும், யான்சென் வீசிய 20வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
திருப்புமுனை நாயகன் அர்ஷ்தீப் சிங்
இந்திய அணியின் வெற்றி கிளாசன், யான்சென் களத்தில் இருந்தவரை உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், இருவரின் விக்கெட் சரிந்த பின்புதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடக்கத்தில் ரிக்கில்டன் விக்கெட்டை வீழ்த்தியும், நடுப்பகுதியில் கிளாசன், யான்சென் என இரு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியும் திருப்புமுனை ஏற்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அர்ஷ்தீப் தவிர ரவி பிஸ்னோய், அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினர். ஆனால், கடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் பேட்டர்கள் அதிக ரன்களை குவித்துவிட்டனர். அதேபோல, ஹர்திக் பாண்டியா ஓவரும் வெளுக்கப்பட்டது.
ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர்
ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் நேற்று இந்திய அணி களமிறங்கியது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அர்ஷ்தீப் உறுதி செய்யும் விதத்தில் பந்துவீசினார்.
அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் பும்ரா, புவனேஷ்வர் குமார் எண்ணிக்கையைக் கடந்து 59 இன்னிங்ஸ்களில் 92 விக்கெட்டுகளுடன் அர்ஷ்தீப் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
முதலிடத்தில் சஹல் 96 விக்கெட்டுகளுடன் உள்ளார். பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளுடனும், புவனேஷ்வர் குமார் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.
அனுபவமின்மை
டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் தென் ஆப்ரிக்க அணி இன்னும் புதிய வீரர்களுடன் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. பேட்டிங்கில் எந்த வீரரைக் களமிறக்குவது, அதன் ஆழம், தீவிரத்தன்மை, திட்டங்கள் என எதுவும் தெளிவாக இல்லாமலே போட்டியில் விளையாடியது.
அனுபவ பந்துவீச்சாளர்கள் காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நார்ஜே இல்லாமல் தென் ஆப்ரிக்க அணி புதிய வீரர்களுடன் விளையாடியது. இதனால், நேற்று 10 வைடுகள், 3 நோ பால்களை வீசி அனுபவமின்மையை வெளிப்படுத்தினர்.
போராடிய தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு ஓவருக்கு 12 ரன்ரேட் தேவைப்பட்டது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ரன்ரேட்டை தொட்டனர்.
ஆனால், கடைசி 5 ஓவர்களில் தேவைப்படும் ரன்ரேட் 17 ஆக உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால், கிளாசன், மில்லர் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 35 பந்துகளில் 58 ரன்களை சேர்த்தவுடன் ஆட்டம் சூடுபிடித்தது.
ஆனால், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமாரின் கேட்சை நினைவுபடுத்தியது போல மில்லருக்கு டீப் மிட்-விக்கெட்டில் அக்ஸர் படேல் பிடித்த கேட்ச் மில்லர்-கிளாசன் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. மில்லர் 18 ரன்களில் ஏமாற்றத்துடன் சென்றார்.
அதேபோல, கிளாசன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வருண் சக்ரவர்த்தியின் 14வது ஓவரை வெளுத்த கிளாசன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 23 ரன்களை குவித்தார். 22 பந்துகளில் 41 ரன்களுடன் அதிரடியாக பேட் செய்த கிளாசனின் விக்கெட்டை ஆஃப்சைடு விலக்கி ஸ்லோபாலாக வீசியதன் மூலம் எடுத்தார் அர்ஷ்தீப் சிங்.
யான்சென் மிரட்டல் அரைசதம்
கிளாசன் ஆட்டமிழந்தபின் ஆட்டம் விரைவாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணுகையில் யான்செனின் ஆட்டம் சூடுபிடித்தது. ரவி பிஸ்னோய் வீசிய 17வது ஓவரில் இரு சிக்சர்களை யான்சென் பறக்கவிட்டார். கடைசி இரு ஓவர்களில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தது.
ஆனால், ஹர்திக் பாண்டியா வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்கவிட்டு 26 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை கோட்ஸி தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தை சந்தித்த யான்சென் சிக்ஸர் விளாசி 16 பந்துகளில் முதல் டி20 அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனால், 3வது பந்தில் கால்காப்பில் வாங்கி 54 ரன்களில் யான்சென் ஆட்டமிழந்தார்.
மூன்று பந்துளில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய சிமிலேன் 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் சமிலேன் ஒரு ரன் எடுத்தவுடன் வெற்றி இந்தியாவின் பக்கம் சாய்ந்தது. தென் ஆப்ரிக்க அணியின் யான்சென், கிளாசன், மில்லர் ஆகியோர் கடைசி வரை போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
சாம்சன் டக்-அவுட், அபிஷேக் அதிரடி
சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்திலும் டக்-அவுட்டில் யான்சென் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 சதங்களை அடித்த சாம்சன், தொடர்ந்து 2 டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த அபிஷேக் சர்மா நேற்று நிதானமாக ஆடி, பின்னர் தன்னை நிலைப்படுத்தியபின் அதிரடிக்கு மாறினார்.
அபிஷேக் சர்மா, திலக் வர்மா இருவரின் பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. கோட்ஸி, சிபாலா, சிமிலேன் ஓவர்களை இருவரும் வெளுத்தனர்.
ஐந்து சிக்சர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது.
அபிஷேக்-திலக் கூட்டணி 107 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தது. அபிஷேக் 50 ரன்களில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் ஒரு ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் 18 ரன்களில் மகராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
ரிங்கு சிங்- திலக் வர்மா கூட்டணியில் திலக் வர்மா சேர்த்த ரன்கள்தான் அதிகம். இருவரும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அதில் 45 ரன்களை திலக் வர்மாதான் சேர்த்தார். ரிங்கு சிங் 8 ரன்னில் சிமிலேன் பந்துவீச்சில் போல்டானார். ராமன் தீப் சிங் 15 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.
ஆட்டத்தை நிறுத்திய ஈசல்கள்
தென் ஆப்ரிக்க சேஸிங்கின் போது, மின் ஒளிக்கு ஏராளமான ஈசல்கள் மைதானத்தைச் சுற்றி வட்டமிட்டன. இதனால் இந்திய வீரர்களும் ஃபீல்டிங் செய்ய, பந்துவீசச் சிரமப்பட்டனர்.
தென் ஆப்ரிக்க பேட்டர்களின் கண்களில் ஈசல் பட்டதால் பேட் செய்ய முடியாமல் தவித்தனர். இதையடுத்து, ஈசல் பறப்பதை நிறுத்த மின்ஒளி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஈசலால் ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை.
அச்சமில்லாத இளம் வீரர்கள்
வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் கூட்டத்தில் என்ன ஆலோசித்தோமோ அதை ஆட்டத்தில் செய்துள்ளோம். இளம் வீரர்கள் அச்சமின்றி ஆடுகிறார்கள். வலைபயிற்சியில் ஆடும் ஆட்டத்தைப் போன்று, ஐபிஎல் தொடரில் அணிக்கு ஆடுவதைப் போன்று தங்கள் மாநிலத்துக்கு ஆடுவதைப் போன்று இங்கும் விளையாட வேண்டும் எனக் கூறினோம்” என்றார்.
சில போட்டிகளில் சிலர் வாய்ப்பைத் தவறவிட்டாலும், வீரர்கள் மீண்டும் தங்களை ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்டதாகக் கூறிய சூர்யகுமார், “3வது வீரராகக் களமிறங்கவா என என்னிடம் திலக் கேட்டார், இன்று உன்னுடைய நாள் அடித்து தூள் கிளப்பு என்று கூறினேன். திலக்கின் திறமை, பேட்டிங் குறித்து எனக்கு நன்கு தெரியும் என்பதால் நம்பிக்கையுடன் தெரிவித்தேன்,” எனத் தெரிவித்தார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.