அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு

by adminDev2

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை  ஆரம்பமானது. 

காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறும்.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் மாலை வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 18 பேர், கம்பஹா மாவட்டத்தில் 19, களுத்துறை மாவட்டத்தில் 11, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 5, நுவரெலியா மாவட்டத்தில் 8, காலி மாவட்டத்தில் 9, மாத்தறை மாவட்டத்தில் 7, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 7, யாழ். மாவட்டத்தில் 6, வன்னி மாவட்டத்தில் 6, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5, திகாமடுல்ல மாவட்டத்தில் 7, திருகோணமலை மாவட்டத்தில் 4, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 8, அனுராதபுரம் மாவட்டத்தில் 9, பொலன்னறுவை மாவட்டத்தில் 5, பதுளை மாவட்டத்தில் 9, மொனராகலை மாவட்டத்தில் 6, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 9 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

மேலும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 போனஸ் ஆசனங்கள் (தேசிய பட்டியல்) பகிர்ந்தளிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்