- எழுதியவர், அந்தோணி ஸர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர், பிபிசி
-
டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்நிலையில், வெள்ளை மாளிகை பதவிகளுக்கான அவரது புதிய நியமனங்கள், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து உணர்த்துவது என்ன?
டிரம்ப், முதல் கட்டமாகத் தனது வெள்ளை மாளிகை நியமனங்கள் மற்றும் முக்கிய அரசாங்கத் துறைகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.
அவர், 2025 ஜனவரி மாதம் பதவியேற்கும்போது அவரது முன்னுரிமைகள் என்ன என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும், குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது முதல் பதவிக் காலத்தின்போது, சில நேரங்களில் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை உணர்ந்த டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் நிர்வாகத்திற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்து வருகிறார். அதற்கென தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டத்தையும், அதைச் சரி வரச் செயல்படுத்தும் பணியாளர்களையும் நியமித்துள்ளார். அதுகுறித்து இதுவரை தெரிய வந்திருப்பதை இங்கு காணலாம்.
கடுமையான நிலைப்பாட்டுடன் குடியேற்றக் குழு
“அமெரிக்காவில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் முறையான ஆவணங்களின்றி வசிக்கின்றனர். அவர்களை நாடு கடத்துவதாக அளிக்கப்பட்ட டிரம்பின் பிரசார வாக்குறுதி மிகையானதல்ல” என்று டிரம்ப் அரசாங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டிரம்பின் நெருங்கிய ஆலோசகராகவும், அவரது உரையாசிரியராகவும் இருந்து வரும் ஸ்டீபன் மில்லரை, வெள்ளை மாளிகை கொள்கைகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு டிரம்ப் நேரடியாகத் தேர்வு செய்துள்ளார்.
பெருமளவிலான நாடு கடத்தல் தொடர்பான கொள்கைகளை ஸ்டீபன் மில்லர் வடிவமைப்பார். மேலும், ஆவணமற்ற மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்த இரண்டு கொள்கைகளையும் மில்லர் சரி பார்ப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை உருவாக்குவதில் மில்லர் ஈடுபட்டார்.
முதல் பதவிக்காலத்தில் குடியேறிகள் மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் (Immigration and Customs Enforcement) செயல் இயக்குநராகப் பணியாற்றிய தாமஸ் ஹோமன், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணமற்ற மக்களைக் கண்டறியும் அதிபரின் கொள்கையை ஆதரித்தார்.
இப்போது அவர் டிரம்பின் “குடியேற்றத் திட்டங்களின் நிர்வாக அதிகாரியாக” இன்னும் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார்.
“இந்த நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நாடு கடத்தல் படையைத் தான் இயக்கப் போவதாக” ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ஹோமன் கூறினார்.
டிரம்பின் இந்த மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், “செலவு” ஒரு பிரச்னை இல்லை என்று கடந்த வாரம் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.
“அவர்கள் மக்களைக் கொலை செய்தார்கள், போதைக் கடத்தல்காரர்கள் நாடுகளை நாசமாக்கினார்கள். இப்போது அவர்கள் அந்தந்த நாடுகளுக்கே திரும்பச் செல்லப் போகின்றனர். அவர்கள் இனிமேலும் இங்கே தங்க முடியாது,” என்று தனது நாடு கடத்தல் திட்டம் குறித்து அவர் கூறினார்.
சீனாவை கடுமையாக எதிர்ப்போருக்கு வெளியுறவு பதவிகள்
பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலர் நம்புகின்றனர்.
வர்த்தகம் என்ற எல்லைக்குள் சீனா குறித்தான தனது விமர்சனங்களை டிரம்ப் கவனமாக வெளிப்படுத்துகிறார். தனது வெளியுறவுக் கொள்கைக் குழுவுக்கு ஆதரவாக சீன விமர்சகர்களைக் குரல் எழுப்ப வைக்கிறார்.
தனது தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகராக, டிரம்ப் ஃப்ளோரிடா நாடாளுமன்ற உறுப்பினரான மைக் வால்ட்ஸை தேர்வு செய்துள்ளார். அவர் ஓர் ஓய்வுபெற்ற ராணுவ கர்னல். இது வெள்ளை மாளிகையின் முக்கிய வெளியுறவுக் கொள்கைப் பதவி.
அமெரிக்கா சீனாவுடன் “பனிப்போரில்” இருப்பதாகத் தெரிவித்த அவர், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அமெரிக்கா அழைப்பு விடுத்தபோது நாடாளுமன்ற கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் வால்ட்ஸ் இருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் ஸ்டெஃபானிக், கடந்த அக்டோபர் மாதம், சீனா அமெரிக்க தேர்தலை முடக்கத் திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
சீன ஆதரவு ஹேக்கர்கள் டிரம்பின் செல்போனில் உள்ள தகவல்களைத் திருட முயல்வதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் தற்போது டிரம்பால் ஐ.நா சபைக்கு அமெரிக்க தூதுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிரம்ப் தனது வெளியுறவுத் துறை செயலராக, ஃப்ளோரிடா செனட்டர் மார்கோ ரூபியோவை அறிவிக்கவுள்ளார். அவரும் சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020இல் ரூபியோ சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் போராடி வரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அதனால், சீன அரசு அவர்மீது பயணக் கட்டுப்பாடு மற்றும் வணிகரீதியாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், வர்த்தக சச்சரவுகள், கோவிட் பேரிடர் என அமெரிக்கா – சீனா உறவு நிலையற்றதாக, பதற்றம் நிறைந்து இருந்தது. சீனா மீதான டிரம்பின் பல கடுமையான கொள்கைகளை பைடன் நிர்வாகம் தொடர்ந்த போதிலும், மேலும் சில புதிய வரிகளைச் சேர்த்தது, சிறிதளவு பதற்றத்தைக் குறைக்க உதவியது. ஆனால், முழுமையாகப் பதற்றம் குறையவில்லை. இந்நிலையில், டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்து, சீனா மீதான அதே கடினமான நிலைப்பாட்டைத் தொடர்வார் எனத் தெரிகிறது.
ஈலோன் மஸ்க் புதிய அவதாரம்
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நியமனங்களின் பட்டியல் வளரும் அதேவேளையில், மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு சிறிய குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க், ஃப்ளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ தலைமையகத்தில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். டிரம்ப் தனது அமைச்சரவைக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் மஸ்க் உதவுவதாகவும், டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி இடையிலான தொலைபேசி உரையாடலிலும் அவர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஈலோன் மஸ்க், விவேக் ராமசாமியுடன் இணைந்து, அரசின் செலவீனங்களைக் குறைக்க “அரசாங்கத் திறன் துறையை” உருவாக்குவார் என்று டிரம்ப் அறிவித்தார்.
மஸ்க் தன் அரசியல் கருத்துகளைத் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். மேலும், ஃப்ளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட்டை அடுத்த செனட் பெரும்பான்மைத் தலைவராக ஆதரித்துள்ளார்.
மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைக் குழு டிரம்பின் பிரசாரத்திற்கு உதவுவதற்காக சுமார் 200 மில்லியன் டாலர்களை செலவிட்டது. எதிர்காலத் தேர்தல்களில் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுக்கு நிதியளிக்கும் முயற்சிகளைத் தொடர மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் டிரம்ப் நிர்வாகத்தில் எப்படிப் பங்கு வகிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்பை ஆதரிப்பதற்காக சுயேச்சையாகப் போட்டியிடுவதில் இருந்து விலகிய அவருக்கு அமெரிக்காவை மீண்டும் “ஆரோக்கியமானதாக” மாற்றுவது தொடர்பான வேலையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் பதவியேற்கத் தயாராகும்போது, குடியரசுக் கட்சியினர் செனட் சபையில் சிறிய வித்தியாசத்திலாவது பெரும்பான்மை பெறக்கூடும். ஆனால், டிரம்ப் நாடாளுமன்றத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதைவிட தனது அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.
செனட் சபையிலுள்ள குடியரசுக் கட்சியினர், செனட் சபையின் ஒப்புதலின்றிச் செயல்பட அவருக்கு உதவ வேண்டுமென்று பரிந்துரைத்தார். இது நாடாளுமன்ற அமர்வு இல்லாதபோது செனட் ஒப்புதலின்றி முக்கியமான அரசுப் பதவிகளை நிரப்புவதற்கான ஒரு வழி. புதிய நியமனங்களை அங்கீகரிப்பதில் செனட்டின் பங்கைப் புறக்கணிப்பதன் மூலம் இது அவருக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும்.
நாடாளுமன்றத்தில், குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையையும் டிரம்ப் மெதுவாகக் குறைத்து வருகிறார். அவரது நிர்வாகத்தில் சேர்வதற்காக செனட்டர்கள் வெளியேறினால், அவர்களின் இடங்களை மாகாண ஆளுநர்களால் விரைவாக நிரப்ப முடியும். ஆனால், செனட் சபை உறுப்பினர்கள் வெளியேறினால், சிறப்புத் தேர்தல்கள் தேவை. அதற்குச் சில மாதங்கள் ஆகலாம்.
ஈலோன் மஸ்க் உள்பட டிரம்பின் ஆலோசகர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் எண்ணிக்கையைக் குறைப்பது, சட்டங்களை இயற்றும் அவரது திறனைப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை இயற்ற நிறைய நேரமும், பேச்சுவார்த்தையும் தேவைப்பட்டாலும், குடியேற்றம் போன்ற விஷயங்களில் அதிபர் ஒரே கையெழுத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்.
டிரம்ப் இப்போது, நாடாளுமன்றத்தின் மூலம் பணியாற்றுவதற்குப் பதிலாக, அதிபராகத் தனது நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்.
விசுவாசிகளுக்கு முக்கியத்துவம்
மூத்த அரசாங்க ஊழியர்களை மாற்றுவது உள்பட புதிய அதிபரின் கீழ் நிர்வாகம் தொடங்கும்போது உருவாக்கப்படும் பதவிகளை நிரப்ப டிரம்ப் இப்போதுதான் தொடங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டில், அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதால், முக்கியப் பாத்திரங்களுக்கு அவர் பாரம்பரிய குடியரசுக் கட்சியினரையே நம்ப வேண்டியிருந்தது.
ஆனால், இப்போது நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, முதல் முறை ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கட்சிக்குள் இருந்து அவருக்கு விசுவாசமான நிறைய ஆதரவாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
கடந்த செவ்வாயன்று, டிரம்ப் தெற்கு டகோட்டா ஆளுநர் கிறிஸ்டி நோயமை உள்நாட்டு பாதுகாப்புச் செயலராகவும், ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் பீட் ஹெக்செத்தை பாதுகாப்புச் செயலராகவும் நியமித்தார். இருவரும் ஆரம்பம் முதலே டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்.
மார்கோ ரூபியோ, எலிஸ் ஸ்டெஃபானிக் போன்ற சிலர் ஆரம்பத்தில் டிரம்பை விமர்சித்தனர். ஆனால், காலப்போக்கில் அவர்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டியுள்ளனர்.
புகழ் அல்லது கவனம் ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவோரை நியமிப்பதில் டிரம்ப் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கிறார். எனவே, அவர் தனது ஆரம்பக்கால பணியாளர் தேர்வுகளில் விசுவாசத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்.
ஆனால், ஆட்சியின்போது ஏற்படும் அழுத்தங்களை அவர் எப்படி நிர்வகிக்கிறார் என்பதைப் பொறுத்தே, அவரது இரண்டாவது பதவிக் காலத்தின் ஆட்சி, முதல் ஆட்சியில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது தெரிய வரும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.