இஸ்ரேல் – அரபு நாடுகள்: டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது மத்திய கிழக்கில் யாருக்கு சாதகம்?

டொனால்ட் டிரம்ப், மத்தியக் கிழக்கு, இரான், சௌதி அரேபியா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Frank Gardner

படக்குறிப்பு, டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் சௌதி அரேபியாவுடன் நட்பான உறவைக் கொண்டிருந்தார்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் & பிபிசி வெரிஃபை

பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் நடக்கும் ஓர் உச்சி மாநாட்டில் கூடியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராவது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றிப் பரவலான ஊகங்கள் எழுந்துவருகின்றன.

டொனால்ட் டிரம்பின் அவரது கணிக்க முடியாத தன்மைக்காகப் பெயர் போனவர். இதுகுறித்து ஐரோப்பாவில் அச்சம் எழுந்துள்ளது. ஆனால், வளைகுடா அரபு நாடுகள் டிரம்பை ஸ்திரத்தன்மைக்கான சக்தியாக பார்க்க முனைகின்றன.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரபு செய்தி ஊடகத்தில் வெளியான கட்டுரையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய வணிகத் தலைவர் கலாஃப் அல்-ஹப்தூர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “மத்திய கிழக்கில் பாதுகாப்பு மிக முக்கியமானது. இதற்காக உடன்பாடுகளை வலுப்படுத்துவதிலும், தீவிரவாதச் சக்திகளைக் கட்டுப்படுத்துவதிலும் டிரம்பின் கவனம் செலுத்துவார். இது முன்னோக்கிச் செல்லும் வழியை வழங்குகிறது.”

சௌதி அரேபியா ஜோ பைடனை விட டிரம்பை சாதகமானவராகப் பார்க்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரியாத்தை தேர்ந்தெடுத்தார். அமெரிக்காவின் பெரும் பணக்காரரும் முதலீட்டாளருமான ரூபர்ட் முர்டோக் இந்த யோசனையை வழங்கி, அதனை நடத்தினார் என்று கூறப்படுகிறது.

தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மூலம், சௌதி அரேபிய ஆட்சியாளரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் டிரம்ப் நட்பு கொண்டிருக்கிறார்.

சௌதி அரேபியாவின் மனித உரிமைகள் மீறல்களுக்காக அந்நாட்டை ஒதுக்கி வைக்க வேண்டும் என ஜோ பைடன் கூறியதை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மன்னிக்கவுமில்லை மறக்கவுமில்லை.

டொனால்ட் டிரம்ப், மத்தியக் கிழக்கு, இரான், சௌதி அரேபியா, இஸ்ரேல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்ப் – மத்திய கிழக்கு உறவுகள்

டொனால்ட் டிரம்புக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலுள்ள உறவின் வரலாறு கலவையான ஒன்று.

ஒருபுறம், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்ததன் மூலமும், ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியதை அங்கீகரித்ததன் மூலமும், டிரம்ப் இஸ்ரேலை மகிழ்வித்தார், அரபு நாடுகளை வருத்தப்படுத்தினார்.

ஆனால் அவர் 2020-இல் ஆபிரகாம் உடன்படிக்கையை கொண்டுவந்தார். இது, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு ராஜதந்திர உறவுகளை நிறுவியது, சூடானை அதற்கு ஒப்புக்கொள்ள வைத்தது.

டிரம்ப் இரான் மீது மூர்க்கத்தனமாக இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு, கூட்டு விரிவான செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action – JCPOA) என்று அழைக்கப்படும் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். அதனை ‘வரலாற்றில் மிக மோசமான ஒப்பந்தம்’ என்று அழைத்தார் அவர்.

அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், இரானின் அணுசக்தி முயற்சிகளைக் கட்டுப்படுத்துவது. ஆனால் அது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைச் சமாளிக்கத் தவறி, இரானின் புரட்சிகரக் காவலர் படைக்கு நிதி கிடைக்க வழிசெய்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் டிரம்ப். இந்த நிதியை இரான் பல மறைமுகப் போராளிக் குழுக்களுக்கு வழங்கியது என்றும் அவர் கருதினார். அந்தப் பிராந்தியத்தின் பல அரசுகளும் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தன.

2020-ஆம் ஆண்டு, டிரம்ப் இரானின் புரட்சிகர காவலர் படையின் குட்ஸ் அணித் தலைவரான காசிம் சுலைமானியைக் கொலை செய்ய உத்தரவிட்டார். இது இரானுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் பல வளைகுடா அரபு நாடுகளை அது திருப்திப்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப், மத்தியக் கிழக்கு, இரான், சௌதி அரேபியா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்பின் முந்தைய நிர்வாகம் இஸ்ரேலுக்கும் பல அரபு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபிரகாம் உடன்படிக்கைகளைக் கொண்டுவந்தது

மத்திய கிழக்கின் இன்றைய நிலை

ஆனால் தனது முதல் ஆட்சிக்காலம் முடிந்து டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய போது இருந்த நிலைமை இன்றைய மத்திய கிழக்கு நாடுகளில் இல்லை.

இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவுடன் போரில் ஈடுபட்டுள்ளது. ஏமனில் உள்ள ஹூதிகள், இரானில் உள்ள அவர்களது ஆதரவாளர்களுடன் இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டுள்ளது.

ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் காஸா மற்றும் லெபனானில் போர் நடத்திவரும் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்காவால் கட்டுப்படுத்த இயலவில்லை என்று பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப், மத்தியக் கிழக்கு, இரான், சௌதி அரேபியா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் பெரும் சக்திகளான இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு தங்கள் ராஜதந்திர உறவுகளைச் சீர்படுத்தின

இரானின் நிலை என்னவாகும்?

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆவது, இரானில் உள்ள எண்ணெய் மற்றும் அணுசக்தி வசதிகள் போன்ற இலக்குகளைத் தாக்க இஸ்ரேலுக்குச் சுதந்திரத்தை வழங்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் பைடன் நிர்வாகம் அது அறவே கூடாது என்று கூறியிருந்தது.

இதுகுறித்து முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி ஜோசுவா ஸ்டெயின்ரிக் கூறுகையில், “இஸ்ரேலுக்கான டிரம்பின் உறுதியான ஆதரவும், இரானின் சீர்குலைக்கும் முயற்சிகள் மீதான தீவிரமான எதிர்ப்பும் அவரை பிராந்தியத்தில் ஒரு முக்கிய கூட்டாளியாக மாற்றியது. அவர் அதிகாரத்திற்கு திரும்புவது இரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறுகிறார்.

ஆனால் மத்தியக் கிழக்கில் வேறு ஒரு விஷயமும் மாறியிருக்கிறது.

சௌதி அரேபியாவும் இரானும் ஏழு ஆண்டுகளாக விரோதப் போக்கைக் கொண்டிருந்தன. ஏமனில் நடந்த போரின் போது, சௌதி விமானப்படை இரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களை குண்டுவீசித் தாக்கியது.

ஆனால், இப்போது சீனாவின் மத்தியஸ்தம் மூலம், சௌதி அரேபியாவும் இரானும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) சௌதி அரேபியாவின் ராணுவத் தலைவர் இரான் ராணுவத் தலைவரைச் சந்திக்க டெஹ்ரானுக்குச் சென்றார். இரு நாடுகளும் இப்போது ராணுவம் மற்றும் பாதுகாப்பில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி பேசி வருகின்றன.

1979-ஆம் ஆண்டு இரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், சௌதி அரேபியாவும் பிராந்தியத்தில் உள்ள சன்னி அரபு அண்டை நாடுகளும் இரானை தங்கள் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

2019-ஆம் ஆண்டு சௌதி எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் (இது இராக்கில் உள்ள இரான் ஆதரவுப் போராளிகளால் நடத்தப்பட்டது என்று கருதப்படுகிறது) இரானின் தாக்குதலுக்கு அவர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்பதை வளைகுடா அரபு நாடுகளுக்கு நினைவூட்டியது.

எனவே, காஸா மற்றும் லெபனானில் நடக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சிமாநாடு அழைப்பு விடுத்துள்ள நிலையில், டிரம்பின் இரண்டாவது அதிபர் பதவிக்காலம் மத்தியக் கிழக்கில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நம்பிக்கையும் உள்ளது நிச்சயமற்ற நிலையும் உள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.