டெல்லியை விடவும் லாகூரில் காற்றின் தரம் மிக மோசம் – பஞ்சாப் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதே காரணமா?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, லாகூரில் காற்றின் தரக் குறியீடு (AQI) இந்த மாதத்தில் பலமுறை ஆயிரத்திற்கும் மேல் பதிவானது.
  • எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
  • பதவி, பிபிசி பஞ்சாபி

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரமும், இந்தியாவின் தலைநகர் டெல்லியும் தற்போது காற்று மாசு மற்றும் புகை மூட்டத்தின் பிடியில் சிக்கி உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் லாகூரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து இந்திய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானிடம் பேச உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநில அரசு தனது நிலத்தில் இருந்து காற்று மாசு உருவாகிறது என்ற குற்றச்சாட்டுகளை அறிவியல் வாதம் மூலமும், உண்மை நிலையை மேற்கோள் காட்டியும் மறுத்து வருகிறது.

லாகூரில் காற்றின் தரக் குறியீடு (AQI) இந்த மாதத்தில் பலமுறை ஆயிரத்திற்கும் மேல் பதிவானது. இந்த அளவு, 300க்கு மேல் சென்றால், மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக சுற்றுச்சூழல் மாறிவிட்டது என்று அர்த்தம்.

இந்திய பஞ்சாபில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றத் துறை மற்றும் பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் படி, இந்திய பஞ்சாபின் கிராமப்புறங்களில் அறுவடைக்குப் பின் வயல்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது தான் லாகூர் மற்றும் டெல்லியில் உள்ள காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாறாக, பஞ்சாபில் பயிர்களை அறுவடை செய்த பின் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் மாசுத் துகள்கள் லாகூர் மற்றும் டெல்லியின் எல்லைக்கு வருவதில்லை என்பதை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அறுவடைக்குப் பிறகு பயிர்களின் கழிவுகளை எரிப்பதுதான் காற்று மாசுபாட்டிற்கு மிகப்பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்த பயிர் விளைச்சலுக்கு விரைவாக வயலை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக வயலில் இந்த தீ வைக்கப்படுகிறது.

இந்திய பஞ்சாபைச் சேர்ந்த நிபுணர்களின் கூற்றுகளுடன் இந்தியாவின் மத்திய கல்வி நிறுவனங்களின் வல்லுநர்கள் முரண்படுகின்றனர். அவர்கள், வயலில் எரிக்கப்படும் தீயிலிருந்து வரும் புகையே, டெல்லியின் மாசுபாட்டிற்கு காரணம் என்று கருதுகின்றனர். ஆனால் காற்றை மாசுபடுத்துவதில் இதன் பங்களிப்பு மிகவும் குறைவு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆறு வாரங்களுக்கு முன்பு அந்த இடங்களின் புகைப்படங்கள் செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட போது, வானம் தெளிவாகத் தெரிந்தது மற்றும் தீ பற்றிய அறிகுறிகள் குறைவாக இருந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது தவிர, ஆராய்ச்சி நிறுவனங்களின் கூற்றுப்படி, இந்தியாவில் பஞ்சாப் உட்பட எந்த மாநிலத்திலும், பயிர்களை அறுவடை செய்த பிறகு வயலில் வைக்கப்படும் தீயினால் வெளியேறும் புகையின் பங்கு இந்த ஆண்டு டெல்லியின் மாசுபாட்டில் 4.44 சதவிகிதம் மட்டுமே.

பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் கழிவுகளை எரிப்பதே, இத்தகைய புகை மூட்டத்திற்கு காரணம் என நிபுணர்கள் நம்புகின்றனர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளில், பாகிஸ்தானை விட இந்தியாவின் பக்கம் தீ அதிகம் எரிவது போல் தெரிகிறது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளதால், இந்த புகையால் எளிதில் பாதிக்கப்படும்.

பாகிஸ்தான் பஞ்சாபின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், பிபிசியிடம் பேசுகையில், “பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசிடம் அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகள் உள்ளன. மேலும், வானிலை ஆய்வு மையத்திலிருந்து கிடைக்கும் தகவலின் படி, லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புகை மூட்டத்திற்கு இந்திய பஞ்சாப் பகுதிகளிலிருந்து வரும் புகை தான் முக்கிய காரணம்” என்கிறார்.

அவர் கூறுகையில், “கிழக்கில் இருந்து வீசும் காற்று இந்திய பஞ்சாபில் உள்ள பெரும் காற்று மாசுபாட்டை பாகிஸ்தானை நோக்கி கொண்டு வருகிறது. இதனால்தான் காற்று வேறு திசையில் வீசும்போது, லாகூரில் AQI (காற்று தர அளவீடு) சுமார் 200 ஆகக் குறைவதைக் காண்கிறோம்.” என்றார்.

பாகிஸ்தான் பஞ்சாப், இந்திய பஞ்சாப் ஆகிய இரு பகுதிகளிலும மாசு ஏற்படுத்தும் காரணங்கள் மற்றும் விவசாய முறைகள் ஒரே மாதிரியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

காற்றின் வேகம் மற்றும் புகைமூட்டம்

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிர்காலம் நெருங்கி வரும் வேளையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு மூன்று மாதங்களாக உச்சத்தில் உள்ளது

இந்தியாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக் கழகத்தின் காலநிலை மாற்றத் துறையின் அறிக்கையின்படி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பஞ்சாபில் லேசான மற்றும் மிதமான காற்று வீசும். மாசு துகள்கள் மற்றும் புகை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல, காற்றின் வேகம் மணிக்கு ஆறு கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் கூறுகையில், “காற்றின் வேகம் குறைவாக இருக்கும்போது, மாசுபடுத்தும் துகள்கள் எந்த திசையிலும் பரவாது. அதாவது, பஞ்சாபில் இருக்கும் மாசுத் துகள்கள் டெல்லிக்கோ லாகூருக்கோ செல்லாது” என்கிறார்கள்.

பல்கலைக்கழக பருவநிலை மாற்றத் துறையின் தலைவர் புனித் கவுர் திங்ரா கூறும்போது, “மாசுத் துகள்கள் மற்றும் புகை ஆகியவை ஒரு திசையில் நகர வேண்டுமானால், காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். கிழக்கு பஞ்சாபில் அக்டோபர் மாதம் முதல் லேசான காற்று வீசுகிறது. இரண்டு முறை மட்டுமே காற்றின் வேகம் மணிக்கு நான்கு கிலோமீட்டரைத் தாண்டியது” என்றார்.

“அக்டோபர் 5 ஆம் தேதி முதல் முறையாக காற்றின் வேகம் மணிக்கு 4.4 கி.மீ ஆகவும், இரண்டாவது முறை அக்டோபர் 24 ஆம் தேதி மணிக்கு 4.1 கி.மீ ஆகவும் பதிவானது. எனவே, பஞ்சாபில் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயல்களில் எரியும் தீயால் உருவாகும் மாசு துகள்கள் எந்த திசையிலும் செல்ல முடியாது.” என்பது அவரது கருத்து.

அறுவடை காலத்தில் மட்டும் புகைமூட்டம் ஏற்படுவது ஏன்?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறைவான வெப்பநிலை காரணமாக, மேல் வளிமண்டலத்தை நோக்கி புகையால் செல்ல முடியாமல், பனிமூட்டமாக மாறுகிறது

காலநிலை மாற்றத் துறையின் கூற்றுப்படி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாசு மற்றும் புகை குவிந்திருப்பது குளிர்காலத்துடன் (வெப்பம் குறைந்து) தொடர்புடையது.

வெப்பநிலை அதிகரிக்கும் போது, காற்று விரிவடைந்து, மாசு துகள்கள் எளிதில் சிதறிச் செல்லும், வெப்பநிலை குறையும் போது, மாசு துகள்கள் ஒரே இடத்தில் தங்கும். “எனவே, லாகூர் மற்றும் டெல்லியில் புகை மற்றும் காற்று மாசு இருந்தால், அதற்குப் பின்னால் குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன.” என்கிறார் புனீத் கவுர்.

புனீத் கவுர் திங்ரா மேலும் கூறுகையில், “வெப்பநிலை அதிகரிப்பதால் காற்று விரிவடைந்து மாசு துகள்கள் சிதறுகின்றன. அக்டோபரில் வெப்பநிலை குறையத் தொடங்குகிறது மற்றும் காற்றில் வேகம் இருக்காது. இதன் காரணமாக, மாசுபடுத்தும் கூறுகள் முழுமையாக சிதற முடியாமல் அங்கேயே இருக்கின்றன. அத்தகைய காலத்தில், புகை போன்ற சூழல் உருவாகிறது” என்கிறார்.

PM 10 மற்றும் PM 2.5 எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசுபாடு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து நிபுணர்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்

இந்திய பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆதர்ஷ் பால் விஜ் கூறுகையில், “பஞ்சாபில் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வெளிப்படும் PM 10 மற்றும் PM 2.5 துகள்கள் எந்த சூழ்நிலையிலும் காற்றில் வெகுதூரம் செல்ல முடியாது” என்றார்.

“பஞ்சாபில் உள்ள காற்று மாசுபாடு டெல்லி மற்றும் லாகூர் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆராய்ச்சியும் இல்லை. PM 10 மற்றும் PM 2.5 துகள்கள் அவ்வளவு தூரம் செல்வதில்லை” என அவர் தெரிவிக்கிறார்.

பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவியலாளர் அவ்தார் சிங் கூறுகையில், “பயிர்களை அறுவடை செய்த பிறகு, லாகூரிலும், பாகிஸ்தான் பஞ்சாபின் மற்ற பகுதிகளிலும் வயல்களுக்கு தீ வைக்கப்படுகிறது. இதுவே லாகூரில் காற்று மாசுபாட்டிற்கு காரணம்” என்கிறார்.

இந்நிலையில், PM 10 துகள்கள் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் தூரமும், PM 2.5 துகள்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் தூரமும் பரவக் கூடும் என்று பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.மர்வா கூறுகிறார். வெப்பநிலை குறையும் போது இந்த துகள்களால் அவ்வளவு தூரம் கூட பயணிக்க முடியாது என்கிறார் அவர்.

ஏவுகணைகள் மூலம் மாசுவை வேண்டுமென்றே அனுப்பினால் மட்டுமே, லாகூர் மற்றும் டெல்லி மாசுபாட்டிற்கு இந்திய பஞ்சாபைக் குற்றம் சாட்ட முடியும் என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

நிபுணர்கள் கூறுவது என்ன?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் படி, பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு டெல்லியின் PM 2.5 அளவுகளில் 4.4 சதவிகிதம் மட்டுமே

மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் (ISER) ‘பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்’ துறையின் பேராசிரியர் விநாயக் சின்ஹா, டெல்லியின் மாசுபாட்டில் பஞ்சாப் மாசுபாட்டின் தாக்கம் உள்ளது, ஆனால் அது மிகவும் குறைவு’ என்று ஒப்புக்கொள்கிறார்.

“பஞ்சாபில் உள்ள மாசுபாட்டின் தாக்கம் பஞ்சாபில் மட்டுமே உள்ளது. உத்தரப் பிரதேசம் அல்லது பிற அண்டை மாநிலங்களில் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயல்களை எரிக்கும் சம்பவங்கள் டெல்லி மாசுபாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.” என்று அவர் கூறுகிறார்.

பஞ்சாபில் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயல்களை எரிக்கும் சம்பவங்கள் டெல்லியின் மாசுபாட்டில் மிகக் குறைவான பங்கையே கொண்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் சின்ஹா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தலைப்பில் ஒரு ஆய்வையும் நடத்தியதாக கூறுகிறார்.

அக்டோபர் 30 அன்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, அறுவடைக்குப் பிந்தைய தீயினால் ஏற்படும் காற்று மாசுபாடு டெல்லியின் PM 2.5 அளவுகளில் 4.4 சதவிகிதம் மட்டுமே.

டெல்லியில் தீபாவளி மற்றும் குளிர்காலத்திற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், வயல்வெளி தீயை விட வாகனங்களில் இருந்து வரும் புகை தான் மாசுபாட்டிற்கு உண்மையான காரணம் என்று தெரியவந்துள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் நிர்வாக இயக்குநர் அனுமிதா ராய்சவுத்ரி கூறுகையில், “பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின் தொடக்கத்தில் வயல்வெளியில் வைக்கப்படும் தீ டெல்லியின் காற்றுத் தரத்திற்கு பெரும் பிரச்னையாக கருதப்படுகிறது” என்றார்.

இவ்வாறு, பயிர்க் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுக்கு காரணம் என்று கூறுவதன் மூலம் மற்ற உள்ளூர் காற்று மாசுபாட்டு காரணங்களில் இருந்து நம் கவனம் திசை திருப்பப்படுகிறது.

“இந்த ஆண்டு, டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் வயல்வெளி தீ மாசுபாட்டின் பங்கு ஒன்று முதல் மூன்று சதவிகிதம் வரை மட்டுமே இருந்தது. இது பெரும்பாலான மாசு உள்ளூர் காரணிகளில் இருந்து வருகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.” என்று அனுமிதா கூறுகிறார்.

AQI என்றால் என்ன?

காற்று மாசுபாடு, டெல்லி - லாகூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காற்று தர அளவீடு 50-100க்குள் இருப்பதே சுத்தமான காற்றாகும்

நிபுணர்களின் கூற்றுப்படி, AQI அல்லது ‘Air Quality Index’ என்பது காற்றில் உள்ள மாசுபாட்டின் விகிதத்தை அளவிடும் ஒரு செயல்முறையாகும், இதன் உதவியுடன் ஒரு பகுதியின் காற்று எவ்வளவு தூய்மையாக இருக்கிறது அல்லது மாசுபட்டு இருக்கிறது என்பதைக் கூற முடியும்.

அந்த பகுதியில் நிறுவப்பட்ட AQI அளவிடும் கருவி மூலம் இந்த அளவு கண்டறியப்படுகிறது.

சோதனைக்கான செயல்முறை அல்லது உபகரணங்கள் பல நாடுகளில் வேறுபட்டிருக்கலாம், ஆனால், சர்வதேச அளவில் AQI மொத்தம் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

AQI 50 வரை மட்டுமே இருந்தால், அந்த காற்று சுத்தமானது மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என கருதப்படுகிறது.

51 முதல் 100 வரை உள்ள AQI அளவு ஆபத்தான பிரிவில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஆனால், AQI அளவு 101ல் இருந்து 150க்கு சென்றால், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆபத்தாகக் கூடும் என்பதை குறிக்கிறது.

AQI அளவு 151க்கு மேல் சென்றால், சாமானிய மக்களுக்கும் ஆபத்து என்று அர்த்தம்.

AQI 201 முதல் 300 வரை இருக்கும் போது அத்தகைய காற்று மனிதர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.

இந்த வகை ‘ஆரோக்கியத்திற்கு எச்சரிக்கை’ என்பதாகும். அதாவது, அனைவருக்கும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் இருக்கும்.

இந்த அளவு 300க்கு மேல் செல்லும் போது, காற்று மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ‘அவசர சுகாதார எச்சரிக்கை’ வெளியிடப்படுகிறது.

‘மாசுபாட்டை தவிர்ப்பது அவசியம்’

இந்திய பஞ்சாபின் சங்ரூர் பகுதியில் வசிக்கும் அமர்ஜித் மான் ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். இவர் ஒரு விவசாயி

இவர், அருகிலுள்ள விவசாயிகளிடம் பயிர்களை அறுவடை செய்த பிறகு, தங்கள் வயல்களுக்கு தீ வைக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் மரக்கட்டைகளை அகற்றுவதற்கு இயந்திரங்களை வழங்கும் ஒரு அமைப்பையும் அவர் உருவாக்கியுள்ளார். இதனால் விவசாய கழிவுகளை எரிக்க வேண்டியதில்லை.

“மாசுபாட்டை சமாளிக்க, அறுவடைக்குப் பின் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டும். காற்று மாசுபாட்டிற்கு யாரையாவது பொறுப்பாக்குவது பிரச்னைக்கு தீர்வாகாது” என்கிறார்.

“பயிர் கழிவுகளை எரிக்காமல் அகற்றுவதற்கு ஏற்கனவே பல தீர்வுகள் உள்ளன, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு