விவேக் ராமசாமி, ஈலோன் மஸ்கிற்கு முக்கிய பொறுப்பு வழங்கிய டிரம்ப் – இவர்களின் திட்டங்கள் என்ன?

விவேக் ராமசாமி (இடது), ஈலோன் மஸ்க் (வலது)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விவேக் ராமசாமி (இடது), ஈலோன் மஸ்க் (வலது)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு பிரதிநிதிகளை நியமனம் செய்ய தொடங்கியுள்ளார்.

இந்தநிலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை (DOGE) என்ற ஏஜென்சியின் தலைமை பதவியில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) ஆகிய பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் அமர்த்தியுள்ளார் டிரம்ப்.

DOGE ஒரு அதிகாரப்பூர்வ அரசு துறை அல்ல. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம் இதுபோன்ற ஏஜென்சிகள் உருவாக்கப்படும்.

இதற்கான அறிவிப்பில் ஈலோன் மஸ்க்கை “கிரேட் ஈலோன் மஸ்க்” (Great Elon Musk) மற்றும் விவேக் ராமசாமியை “தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்” (Patriotic American) என்றும் டிரம்ப் குறிப்பிடுள்ளார்.

இந்த பொறுப்பு கிடைத்தவுடன், விவேக் ராமசாமி, “நாங்கள் மென்மையான போக்குடன் நடந்துகொள்ள போவதில்லை”, என்று எழுதியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அதாவது, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடுமையான போக்குடன் நிறைவேற்றுவேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதைத்தான் டிரம்ப் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விவேக் ராமசாமி வலியுறுத்தி வந்த பணிக்கான பொறுப்பைதான் தற்போது டிரம்ப் அவருக்கு வழங்கியுள்ளார். உதாரணமாக விவேக் ராமசாமி பல அரசாங்க துறைகளையும், அமைச்சகங்களையும் மூட வேண்டும் என்று வாதிட்டு வருகிறார்.

அதிகார குறுக்கீடுகளை குறைப்பது, அதிகப்படியான ஒழுங்குமுறைகளை நீக்குவது, தேவையில்லாத செலவுகளை குறைப்பது, அரசு நிறுவனங்கள்/அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது ஆகிய பணிகளில் ஈலோன் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசாமி செயல்படுவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“சேவ் அமெரிக்கன்” (Save American) பிரசாரத்திற்கு இது மிகவும் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடா செனட் பிரதிநிதி மைக்கேல் வால்ட்ஸ் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், செனட் பிரதிநிதி மார்கோ ரூபியோ வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளனர்.

ஐம்பது வயதாகும் வால்ட்ஸ், ஒரு முன்னாள் ராணுவ வீரர் மற்றும் டிரப்பின் நீண்ட நாள் ஆதரவாளர்.

மைக்கேல் வாட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைக்கேல் வாட்ஸ் (கோப்புப்படம்)

யார் இந்த விவேக் ராமசாமி?

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி முயற்சித்தார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

தொழிலதிபரும், ‘வோக்’ (Woke) என்ற நூலின் ஆசிரியருமான விவேக் ராமசாமி, புதிய அமெரிக்க கனவுக்காக கலாசார இயக்கம் ஒன்றினை தொடங்க விரும்புவதாக கூறினார். அவரை பொறுத்தவரை மக்களை ஒன்றிணைக்க வழி இல்லையென்றால் பல கலாசாரங்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை.

முப்பத்தி ஒன்பது வயதாகும் ராமசாமி ஓஹையோவில் பிறந்தவர். ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்து உயிரி தொழில்நுட்பவியல் துறையில் பல கோடிகள் சம்பாதித்துள்ளார். பின்னர் அவர் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார்.

தற்பொழுது ஏழு பில்லியன் டாலர் மதிப்பிருக்கும் ராய்வென்ட் சயின்சஸ் (Roivant Sciences) என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை இவர் நிறுவியுள்ளார்.

விவேக் ராமசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி விவேக் ராமசாமியின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 630 மில்லியன் டாலர்கள்

இவர், முதலீடு தொடர்பான நிறுவனத்தின் இணை நிறுவனாராகவும் உள்ளார். போர்ப்ஸ் (Forbes) வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய மொத்த சொத்துக்களின் மதிப்பு 630 மில்லியன் டாலர்கள்.

விவேக்கின் மனைவி அபூர்வா, அறுவை சிகிச்சை நிபுணர். இவர் தனது குடும்பத்துடன் கொலம்பஸ்ஸில் வாழ்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி இவரது குடும்பம் கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு பெயர்ந்துள்ளது.

இவருடைய தந்தை வி கணபதி ராமசாமி, கோழிக்கோடு தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றார். பின் அவர் பொறியாளராக பணியாற்றினார். ராமசாமியின் தாய் அமெரிக்காவில் மனநல மருத்துவராக பணியாற்றினார்.

தனது தாய் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார் என்றும், தனது தந்தை இன்னும் இந்திய பாஸ்போர்ட்தான் வைத்துள்ளார் என்றும் அவர் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

முன்னதாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ராமசாமி போட்டியிட்டார். ஆனால், பின்னர் அவர் தனது பிரசாரத்தைக் கைவிட்டார்.

டிரம்பின் அதிபருக்கான முதலாம் விவாதத்தில் அவருடன் ராமசாமி சென்றபொழுது, இவர் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் செய்திகள் வெளிவந்தன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், THE TRUTH

படக்குறிப்பு, முக்கிய பொறுப்புகளுக்கான நபர்களை நியமித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கை

விவேக் ராமசாமியின் திட்டங்கள்

விவேக் ராமசாமி தனது தனித்துவமான திட்டங்களுக்காக அறியப்பட்டார். யுக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்துதல், குழந்தைகளை சமூக ஊடகங்களிடம் இருந்து தள்ளி வைத்தல் மற்றும் சில அரசாங்க துறைகளை மூடுதல் ஆகியவை இதில் இடம்பெறும்.

உதாரணமாக, கல்வித்துறை, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், உள்நாட்டு வருவாய் சேவை மற்றும் எஃப்.பி.ஐ எனப்படும் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்பு சேவை அமைப்பு ஆகிய துறைகளை மூட அவர் வலியுறுத்தி வருகிறார்

ஹெச்-1பி விசாவை நிறுத்த விவேக் விரும்புகிறார். இந்த திட்டம், முதலாளிகள் வெளிநாடுகளில் இருக்கும் சிறந்த திறன்மிக்க தொழிலாளர்களை பணியமர்த்த உதவியது. இது நீக்கப்பட்டால் இந்தியர்களும் பாதிக்கப்படுவார்கள்.

சமூக வலைதளங்கள் “அடிமையாக்குவதாக” ராமசாமி கூறினார்.

“12 வயது சிறுவர், சிறுமிகள் இதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை நினைத்து நான் கவலை கொள்கிறேன்,” என்றார் அவர்.

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்கான இரண்டாம் கட்ட விவாதத்தில், ”நாட்டின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த” வேண்டி, குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்துப் பேசினார்.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு, டிக் டாக்கில் விவேக் ராமசாமி இணைந்ததற்கு குடியரசு கட்சியின் எதிராளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஷ்யாவிற்கு தேவையான சலுகைகளை வழங்கினால்தான் யுக்ரேன் ரஷ்யா போரை சுமூகமான முறையில் நிறுத்தமுடியும் என்று ராமசாமி நம்புகிறார்.

கடந்த ஜூன் மாதம் ஏசிபி நியூஸ் ஊடகத்திடம் பேசிய அவர், “இந்தப் போரை கொரிய போரை நிறுத்தியதை போல உடன்படிக்கை கொண்டு நிறுத்த வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளும் தங்களுக்கான எல்லைகளுக்கு தங்களது அதிகாரத்தை செலுத்தமுடியும்” என்று தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை யுக்ரேனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குவது என்பது ரஷ்யாவை சீனாவின் பக்கம் தள்ளுவது போன்றது.

விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசப்பற்றுள்ள அமெரிக்கர் என, விவேக் ராமசாமி குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்

வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 25 ஆக உயர்த்த வேண்டும் என்று ராமசாமி கூறுகிறார்.

18 வயது வரை உள்ளவர்கள் “தேசிய சேவைத் தேவைகளை” பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதாவது, அவர்கள் அவசரகாலத்தில் உதவியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ராணுவத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும்.

18 வயதை கடந்தவர்கள் அமெரிக்க குடியுரிமை தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், வாக்களிக்கும் வயதை மாற்றுவது என்றால் அரசியலமைப்பை மாற்ற வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற கணக்கில் பெரும்பான்மையுடன் இருக்க வேண்டும்.

உளவு அமைப்பான எஃப்.பி.ஐ இன் நிதிகளை பிரித்தால் ரகசிய சேவை, நிதிக் குற்றங்களுக்கான அமலாக்க துறை மற்றும் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கலாம் என்ற யோசனையை அவர் வழங்கினார்.

அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனக்கு எதிராக நடத்தப்பட்ட எஃப்.பி.ஐ இன் செயல்களை வன்மையாக கண்டிக்கிறார்.

ஜூனில் ஃபாக்ஸ் செய்திகள் நடத்திய வாக்கெடுப்பில் 20% குடியரசு கட்சியினர் எஃப்.பி.ஐ மீதான நம்பிக்கை போய்விட்டது என்று தெரிவித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு