டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜூலை 27, 2024 அன்று அமெரிக்காவின் டென்னசி, நாஷ்வில்லில் நடந்த பிட்காயின் 2024 நிகழ்வில் டொனால்ட் டிரம்ப்
  • எழுதியவர், ஜோ டைடி
  • பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மின்னணுப் பணத்தின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ‘பிட்காயின்’ என்ற பெயர் மீண்டும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

டிரம்ப் 2021-இல் ஒருமுறை பிட்காயினை ‘மோசடி’ என்று விவரித்தார். இருந்தாலும், இந்தாண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அமெரிக்காவை ‘கிரகத்தின் கிரிப்டோ தலைநகராக’ மாற்றுவதாக உறுதியளித்து பிட்காயின் அபிமானிகளை மகிழ்ச்சிப்படுத்தினார்.

டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மின்னணு பணத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால் பிட்காயின் பயனர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு கிட்டதட்ட 92 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உள்ளது

பிட்காயினின் மதிப்பு நீண்ட காலமாகவே செய்திகளில் விவாதிக்கப்படும் தலைப்பாக உள்ளது. அதற்குக் காரணம் பிட்காயினின் மதிப்பு சீராக இல்லாமல் அதீத ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். ஒருவர் பிட்காயின் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம், அல்லது இழப்பை எதிர்கொள்ளலாம்.

பிட்காயினின் மதிப்பில் நிகழும் ஏற்ற-இறங்கங்களுக்கு அப்பால், அதைப்பற்றிப் பல கதைகள் உள்ளன.

மிகவும் பிரபலமான, அதே சமயம் பழமையான ‘கிரிப்டோ கரன்சி’யான பிட்காயினின் வரலாற்றில் முக்கிய ஏழு தகவல்கள் இங்கே.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. Bitcoin-ஐ உருவாக்கியது யார்?

உண்மையில், ‘பிட்காயின்’ யாரால் உருவாக்கப்பட்டது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.

2008-ஆம் ஆண்டு ‘சடோஷி நகமோட்டோ’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ஓர் இணைய விவாதப் பக்கத்தில் ‘பிட்காயினை’ உருவாக்குவது பற்றிய யோசனையைப் பதிவு செய்தார்.

அவர் பகிர்ந்த அந்த ‘வெள்ளைத் தாள்’ (white paper) தகவல் அறிக்கை, மின்னஞ்சலை அனுப்புவதைப் போலவே, இணையம் வழியாக மெய்நிகர் நாணயங்களை அனுப்புவதற்கு டிஜிட்டல் பண அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்று விளக்கப்பட்டிருந்தது.

சிறப்பு மென்பொருள் மற்றும் ஆற்றல் மிகுந்த கணினிகளைப் பயன்படுத்தி உலகெங்கும் பரவியிருக்கும் தன்னார்வலர்கள், மூலம் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தவும் புதிய நாணயங்களை உருவாக்கவும் சடோஷி ஒரு சிக்கலான கணினி அமைப்பை உருவாக்கினார்.

கிரிப்டோகரன்சி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டோரியன் நகமோட்டோவை பிட்காயினை உருவாக்கியவர் என்று பலர் தவறாக புரிந்து கொண்டனர்

பத்திரிகையாளர்கள், கிரிப்டோகரன்சி அபிமானிகள், மற்றும் பல புலனாய்வாளர்கள் சடோஷி யார் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று தோற்றனர்.

பின்னர், 2014-ஆம் ஆண்டு, பல நிருபர்கள் டோரியன் நகமோட்டோ என்ற ஜப்பானிய நபர்தான் சடோஷி என்று சந்தேகித்து அவரைப் பின்தொடர்ந்தனர்.

பிட்காயினை உருவாக்கிய அந்த ‘மர்மமான’ படைப்பாளர் அவர்தான் என்று நினைத்தனர். ஆனால் அது அவர் இல்லை என்பது இறுதியில் தெரியவந்தது. தவறாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தகவலால் அப்படி நடந்தது.

அதன்பின்னர் பிட்காயினை உருவாக்கியவர் என்று பலரது பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் ஒருவர் மட்டுமே தன்னை ‘சடோஷி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.

2016-ஆம் ஆண்டு, ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரேக் ரைட் தன்னை சடோஷி என்று கூறிக்கொண்டார்.

பிபிசி-க்கு அவர் அளித்த ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், “நான்தான் சடோஷி நகமோட்டோ. நான் அதில் முக்கிய அங்கமாக இருந்தேன். மற்றவர்கள் எனக்கு உதவினார்கள். சிலர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம், அதைபற்றி எனக்கு கவலையில்லை,” என்றார்.

பிட்காயின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2016 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரேக் ரைட் தன்னை பிட்காயினை உருவாக்கியவர் என்று கூறினார்.

ஆனால் கிரேக் ரைட்டால் அதை நிரூபிக்க முடியவில்லை. பல வருட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 2014-இல் லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கிரேக் ரைட் சடோஷி அல்ல என்று முடிவு செய்தார்.

மிகச் சமீபத்தில் ஒரு HBO ஆவணப்படம், கனடாவைச் சேர்ந்த பிட்காயின் நிபுணரான பீட்டர் டோட் என்பவர்தான் சடொஷி என்று கூறியது. ஆனால் அவர் தான் சடோஷி அல்ல என்று உறுதியாகக் கூறிவருகிறார். கிரிப்டோ சமூகமும் அவர் சொல்வதை நம்புகிறது.

2. ‘பிட்காயின் பீட்சா’

2010-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி, பிட்காயின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் பிட்காயின் மூலம் முதல் பரிவர்த்தனை நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டது.

பசியில் இருந்த லாஸ்லோ ஹாஞெக்ஷ் என்ற பிட்காயின் பயனர், ஒரு ஆன்லைன் கிரிப்டோகரன்சி குழுவில், இரண்டு பீட்சாக்களை வாங்க, 41 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,460) பிட்காயினை வழங்க முன்வருவதாகக் கூறினார்.

அவரது கோரிக்கையை 19 வயது மாணவர் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பரிவர்த்தனையும் வெற்றிகரமாக நடந்தது. அன்றைய தினம் பிட்காயின் ரசிகர்களால் ‘பிட்காயின் பீட்சா டே’ (#BitcoinPizza) என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று பிட்காயினுக்கு மாற்றாகப் பீட்சா வாங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் மீம்ஸ் மூலம் நினைவுகூரப்படுகிறது.

ஏனென்றால், இந்தச் சம்பவம்தான் முதன்முதலில் பிட்காயின் என்னும் இணையப் பணம் மூலம் ஆன்லைனில் பொருள் வாங்க முடியும் என்பதைக் காட்டியது.

அந்த நிகழ்வை சில இணையக் மோசடிக்காரர்கள் கூர்ந்து கவனித்திருப்பர் போலும். அடுத்த ஒரு வருடத்திற்குள் முதல் இணைய ‘டார்க் நெட்’ சந்தை (darknet marketplace) துவங்கப்பட்டது. அவர்கள் பிட்காயினுக்கு ஈடாக போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோதப் பொருட்களை விற்கத் துவங்கினர்.

பீட்சா வாங்கிய லாஸ்லோவுக்கு நஷ்டம்தான். ஏனென்றால் அவர் பிட்காயின் கொடுத்து பீட்சா வாங்காமல் வைத்திருந்தால் அது இந்நேரம் பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையதாக மாறியிருக்கும்.

பிட்காயின்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எல் சல்வடோர் அதிபர் நயீப் புகேலே தனது நாட்டை பிட்காயினை பயன்படுத்தத் தூண்டுவதால், பிட்காயின் நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்

3. ஒரு சிறிய நாடு பிட்காயின் மீது வைத்த நம்பிக்கை

மின்னணுப் பணமான பிட்காயினைச் சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாடு எல் சால்வடார். அமெரிக்கக் கண்டத்தின் மத்தியில் இருக்கும் மிகச்சிறிய நாடு இது.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், எல் சால்வடாரின் அதிபர் நயிப் புகேலே பிட்காயின் சட்டப்பூர்வப் பரிவர்த்தனைகளுக்குச் செல்லுபடியாகும் என்று அறிவித்தார்.

அமெரிக்க டாலரைப் போன்று விற்பனையகங்களில் வணிகர்கள் பிட்காயினைச் சட்டப்பூர்வமாக ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு பல பிட்காயின் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த நாட்டிற்கு வருகை தந்தனர். அது தற்காலிகமாகச் சுற்றுலாவை மேம்படுத்தியது.

பிட்காயினை ஏற்றுக் கொண்டது நாட்டில் முதலீட்டை அதிகரிக்கும், கரன்சியை மாற்றுவதற்கான செலவைக் குறைக்கும் என்று அதிபர் புகேலே நம்பினார். ஆனால் உண்மையில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

மாற்றம் வரும் என அவர் இன்னமும் நம்புகிறார். அவரது எதிர்பார்ப்பு எதிர்காலத்தில் நிகழக்கூடும். ஆனால் அமெரிக்க டாலர் தற்போது வரை இந்த நாட்டில் முதன்மையான நாணயமாக உள்ளது.

பிட்காயினை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில் அதிபர் புகேலே நிறைய பொது நிதியும் செலவழித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் 6,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது

பண நெருக்கடி உள்ள நாட்டிற்கு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பல்வேறு விலைகளில் பிட்காயின் வாங்குவதற்கு அவர் குறைந்தது 120 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,000 கோடி.)

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புகேலே வைத்திருந்த பிட்காயின் கையிருப்பின் மதிப்பு முதல் முறையாக அதிகரித்தது. இது அவருக்கு நல்ல செய்தி. நாட்டின் பிட்காயின் இருப்பைக் கண்காணிக்கும் இணையதளம், நாணயங்களின் மதிப்பு 85% உயர்ந்துள்ளதாக மதிப்பிட்டது.

கஜகஸ்தானின் மாபெரும் பிட்காயின் மைனிங்

படக்குறிப்பு, பிபிசி நிருபர் ஜோ டிடி, கஜகஸ்தானின் மாபெரும் பிட்காயின் மைனிங் தொழிற்சாலைகளில் ஒன்றிற்குச் சென்றார்.

4. கஜகஸ்தானில் பிட்காயினின் எழுச்சியும் வீழ்ச்சியும்

2021-ஆம் ஆண்டு, கஜகஸ்தான் பிட்காயின் செயல்பாடுகளின் மையமாக மாறியது. இது சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்தது.

ஏனென்றால், பிட்காயின் செயல்பாடுகளுக்குச் சக்திவாய்ந்த கணினிகளை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. நெட்வொர்க் பாதுகாப்பை உறுதிப்படுத்த மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செயல்படுத்தும் இந்தக் கணினிகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

மேலும், பிட்காயின் மைனிங் செயல்பாட்டிற்குப் பகல்-இரவு எந்நேரமும் இயங்கும் உயர் ரகக் கணினிகள் நிறைந்த அறைகள், கட்டடங்கள் தேவைப்படுகின்றன. இதில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு புதிய பிட்காயின்கள் லாபம்.

பல நிறுவனங்கள் கஜகஸ்தானுக்குச் சென்றன. அதன் மகத்தான நிலக்கரி இருப்பு காரணமாக அங்கு ஏராளமான மின்சாரம் கிடைத்தது. ஆரம்பத்தில், கஜகஸ்தான் அரசாங்கமும் இந்த முதலீடுகளை மிகுந்த வரவேற்புடன் வரவேற்றது.

இருப்பினும், அதிகமான பிட்காயின் வல்லுனர்கள் அங்கு குவிந்ததால், மின்சார விநியோகம் பாதிப்படையத் துவங்கியது. மேலும் கஜகஸ்தானில் மின் தடைகள் ஏற்பட்டன.

ஒரு வருடத்தில், கஜகஸ்தானின் பிட்காயின் தொழில் ஏற்றத்திலிருந்து மந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. ஏனெனில், அரசாங்கம் பிட்காயின் செயல்பாடுகளைச் செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்முறைகளை அமல்படுத்தியது. பிட்காயின் தொழிலுக்கு வரிகளை உயர்த்தியது.

உலகளவில் பிட்காயின் நெட்வொர்க் பயன்படுத்தும் மின்சாரம் ஒரு சிறிய நாடு பயன்படுத்தும் மொத்த மின்சாரத்திற்குச் சமம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோ வாலட்

பட மூலாதாரம், James Howells

படக்குறிப்பு, தெற்கு பிரிட்டனில் வசிக்கும் ஜேம்ஸ் ஹோவெல்ஸ் தனது கிரிப்டோ வாலட்டை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

5. ரூ.844 கோடியை குப்பையில் வீசிய நபர்

தெற்கு பிரிட்டனில் வசிக்கும் ஜேம்ஸ் ஹோவெல்ஸ் தனது ‘கிரிப்டோ கரன்சி பணப்பையை’ மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் குறைந்தது $100 மில்லியன் மதிப்பிலான பணம் இருப்பதாக அவர் கூறுகிறார். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.844 கோடி.)

அவர், 8,000 பிட்காயின்களைக் கொண்ட இணைய பணப்பைக்கான கடவுச் சொல்லைக் கொண்ட தனது ஹார்ட் டிரைவைத் தற்செயலாகத் தூக்கி எறிந்ததாகச் சொல்கிறார்.

கிரிப்டோ கரன்சியின் தன்மை காரணமாக, கடவுச்சொல்லை மாற்றியமைத்து மீண்டும் உள்நுழைவது மிகக்கடினம். வங்கி போன்ற நிதி நிறுவனம் மூலம் இந்தச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே அவரால் வாடிக்கையாளர் உதவி மையங்களை அணுகி உதவி கேட்க முடியாது.

ஹார்ட் ட்ரைவ் கிடைத்து ஒருவேளை பிட்காயின்களை மீட்க முடிந்தால், ஹோவெல்ஸ் அந்தப் பணத்தில் 25%-ஐ உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் வேல்ஸில் உள்ள நியூபோர்ட் மாவட்ட கவுன்சில் அந்த மின் சாதனத்தை மீட்டெடுக்க குப்பை கிடங்கை அணுகுவதற்கான அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

“அது மிகவும் மோசமான தருணம்,” என்று ஹோவெல்ஸ் பிபிசியிடம் கூறினார். “நான் ஒரு கண்ணாடிக் குவளை தரையில் விழுந்து நொறுங்குவது போல் உணர்ந்தேன். ‘நான் ஏன் அப்படிச் செய்தேன்? அதற்கு முன்பு ஒரு ஹார்ட் டிரைவை இப்படித் தூக்கி எறிந்ததில்லை. நான் ஏன் அதைத் தூக்கி எறிந்தேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று அவர் வருந்துகிறார்.

கிரிப்டோகரன்சி

பட மூலாதாரம், reuters

படக்குறிப்பு, கிரிப்டோகரன்சி ஜாம்பவான் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட்

6. கிரிப்டோ கரன்சி ஜாம்பவான் மீது எழுந்த மோசடி குற்றச்சாட்டு

பல கோடிகளுக்கு அதிபரும் கிரிப்டோ கரன்சி ஜாம்பவானுமான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் என்பவரை விட இதுவரை யாரும் அதிக பிட்காயினை இழந்திருக்க முடியாது.

பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்றமான ‘எஃப்.டி.எக்ஸ்’ (FTX) நிறுவனரான பேங்க்மேன்-ஃபிரைட், ‘கிரிப்டோ கரன்சியின் அரசன்’ என்று அழைக்கப்பட்டார். கிரிப்டோ கரன்சி துறையில் அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.

எஃப்.டி.எக்ஸ் என்பது பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளை வாங்கிக்கொண்டு வழக்கமான நாணயங்களை வர்த்தகம் செய்யக்கூடிய ஒரு தளம். அவர் உருவாக்கிய எஃப்.டி.எக்ஸ் $32 பில்லியன் மதிப்புடையது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ 2.7 லட்சம்.)

ஒரு சில நாட்களில் இது அனைத்தும் சரிந்து விழும் என்று அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

பேங்க்மேன்-ஃப்ரைடின் நிறுவனம் நிதி ரீதியாக பலவீனமாக இருந்ததையும், வாடிக்கையாளர்களிடம் பெறும் நிதியை, தனது மற்றொரு நிறுவனமான ‘அலமேடா ரீசர்ச்’ நிறுவனத்துக்குச் சட்டவிரோதமாக மாற்றம் செய்துவ ந்ததும் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தினர்.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அதற்குச் சற்று முன்பு, பேங்க்மேன்-ஃபிரைட் பிபிசி-யிடம் பேசுகையில், “நான் மோசடி செய்யவில்லை. இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நினைத்த அளவுக்குத் திறமையானவன் அல்ல,” என்று கூறினார்.

கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், மோசடி மற்றும் பணமோசடி செய்ததற்காக பேங்க்மேனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

7. முதலீட்டு நிறுவனங்களால் ஏற்படும் ஏற்றம்

பல குழப்பமான நிகழ்வுகள் நிகழ்ந்த போதிலும், முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் கவனத்தை பிட்காயின் ஈர்க்கத்தான் செய்கிறது.

எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் சில பிட்காயின்களைத் தங்கள் அதிகாரப்பூர்வச் சொத்துப்பட்டியலில் ஸ்பாட் பிட்காயின் ஈ.டி.எஃப் (Spot Bitcoin ETF) வடிவத்தில் சேர்த்தன.

அவை பிட்காயின் மதிப்புடன் இணைக்கப்பட்ட பங்குகள் மற்றும் நிதி (stocks and shares) போன்றவை. ஆனால் வாடிக்கையாளர் பிட்காயின்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டியதில்லை.

மேலும் இந்தப் புதிய தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் பல நூறு கோடிக் கணக்கான டாலர்களை செலவிடுகின்றனர். பிளாக்ராக், ஃபிடிலிட்டி மற்றும் கிரேஸ்கேல் போன்ற சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பிட்காயின்களை வாங்கின. இது பிட்காயினின் மதிப்பை உயர்த்தியது.

சடோஷி கற்பனை செய்த உலகத்தைப் போலவே, பிட்காயின் இறுதியாக சமூகத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கான அறிகுறியாக இது இருப்பதாகச் சில பிட்காயின் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இது கிரிப்டோகரன்சி உலகில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

இருப்பினும், சிலர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், தங்கத்தைப் போன்ற முதலீட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்படுவதன் மூலம் பிட்காயின் வேறு பாதையில் பயணிக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.