யுக்ரேன்-ரஷ்யா போரில் இருந்து மற்ற நாடுகளின் ராணுவத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதென்ன?
- எழுதியவர், பாவெல் அக்செனோவ், ஓலே செர்னிஷ் மற்றும் ஜெர்மி ஹோவெல்
- பதவி, பிபிசி உலக சேவை
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா – யுக்ரேன் இடையே போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவும் யுக்ரேனும் மாறி மாறி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்திய நாட்களில் இந்த தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது.
யுக்ரேன் ரஷ்யாவிற்கு எதிராக 80 ட்ரோன்களை செலுத்தியது. அவற்றில் சில மாஸ்கோவை இலக்காகக் கொண்டவை. மற்றொருபுறம் யுக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 140க்கும் மேற்பட்ட ட்ரோன்களை செலுத்தியது.
இந்த மோதலில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது போர் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது.
மின்னணுப் போர்முறை மற்றும் பீரங்கித் தாக்குதல்களோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் போது ட்ரோன்கள் ஒரு சிறந்த தற்காப்பு ஆயுதமாகவும், எதிரி படைகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவதற்கும் மிகவும் பயனளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்: போர்களத்தில் அனைத்தையும் கண்காணிக்கும் கண்கள்
யுக்ரேன் போரில் முக்கிய அம்சமாக ட்ரோன்கள் மாறியுள்ளன, மேலும் அவை போர் நடக்கும் விதத்தை ஆழமாக பாதித்துள்ளன என்று ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் போர் ஆய்வுகள் பேராசிரியரான பிலிப்ஸ் ஓ பிரையன் கூறுகிறார்.
“அவை போர்க்களத்தை மிகவும் வெளிப்படையானதாக மாற்றியுள்ளன” என்றும் அவர் கூறினார்.
கண்காணிப்புப் பணியில் இருக்கும் ட்ரோன்கள் மூலம் படை வீரர்களின் நகர்வை அல்லது போரின் முன்னணியில் தாக்குதலுக்கான ஏற்பாட்டை, நிகழ் நேரத்தில் நோட்டமிட முடியும்.
போர்க்களத்தில் ஒரு இலக்கினை கண்டால், அதை பற்றிய தகவல்களை கட்டளை மையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் அந்த இலக்கின் மீது பீரங்கித் தாக்குதலுக்கு உத்தரவிடப்படும்.
இலக்கைப் கண்டுபிடிப்பது முதல் அதைத் தாக்குவது வரையிலான இந்த செயல்முறை, ராணுவ அகராதியில் “கொலை சங்கிலி” (kill chain) என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இதில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை மிகவும் துரிதமாக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஓ பிரையன் கூறுகிறார்.
“ஆழமான மறைவான பகுதிகளில் இல்லையென்றால் ட்ரோனின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவே முடியாது. டாங்கிகள் மற்றும் பிற கவச ஆயுதங்களை ட்ரோன்களை தாண்டி கொண்டு செல்ல முடியாது,” என்று அவர் கூறுகிறார்.
எதிரிகளைத் தாக்க பீரங்கிகளுடன் சேர்ந்து தாக்குதல் ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. யுக்ரேன் படைகள் ட்ரோன்களை மட்டும் பயன்படுத்தி ரஷ்ய டாங்கிகளின் குழுக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முடிந்தது.
போரின் தொடக்கத்தில் யுக்ரேன், துருக்கியில் தயாரிக்கப்பட்ட TB-2 Bayraktar-ஐ பயன்படுத்தியது, இது வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசக்கூடிய ராணுவ தர ட்ரோன் ஆகும்.
இருப்பினும், தற்போது இரு தரப்பினரும் விலைக் குறைந்த “காமிகேஸ்” (kamikaze) ட்ரோன்களுக்கு மாறி வருகின்றனர். இவை பெரும்பாலும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், அவற்றில் வெடிபொருட்களும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தலாம்.
யுக்ரேனில் உள்ள ராணுவ மற்றும் பொது மக்கள் வசிக்கும் இலக்குகளை தாக்குவதற்கு இரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 போன்ற ஆயிரக்கணக்கான காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்துகிறது.
யுக்ரேனிய வான் பாதுகாப்பைக் கடக்க அவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பீரங்கி: படைகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆயுதம்
யுக்ரைன் போரில் பீரங்கிகளே அதிகம் பயன்படுத்தப்படும் ஆயுதமாக இருக்கிறது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்ட்டின் கூற்றுப்படி, ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 10,000 ஷெல் குண்டுகளை வீசுகிறது மற்றும் யுக்ரைன் ஒரு நாளைக்கு 2,000 – 2,500 ஷெல் குண்டுகளை வீசுகிறது.
எதிரி படைகளின் நடமாட்டத்தை சரிபார்க்கவும், அதன் கவச வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள், கட்டளை மையங்கள் மற்றும் சப்ளை டிப்போக்களை தாக்கவும் பீரங்கி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
“போரின் போது, வெடிபொருட்கள் என்பது மனிதர்கள் அருந்தும் தண்ணீரைப் போன்றது, அல்லது காருக்கு எரிபொருளைப் போன்றது” என்று பீரங்கி நிபுணர் மற்றும் ராணுவ வல்லுநர் பெட்ரோ பியாடகோவ் கூறுகிறார்.
இரு தரப்பினரும் வெளிநாடுகளிலிருந்து வந்த மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவற்றை யுக்ரேனுக்கு வழங்குகின்றன. ரஷ்யா வட கொரியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்கிறது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிபிலின் தலைமை நிர்வாகி ஜஸ்டின் க்ரம்ப் கூறுகையில், ”மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு தேவையான குண்டுகளை வழங்க திணறுகின்றன. இது அந்த நாடுகளின் ராணுவத் தொழில்களில் உள்ள சிக்கலை எடுத்துக்காட்டுகிறது.”
அவர் மேலும் கூறுகையில் “மேற்கத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் இப்போது ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான உயர் துல்லியமான ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன. இருப்பினும், ஷெல் குண்டுகள் போன்ற அடிப்படை ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் அவர்களுக்கு இல்லை” என்றார்.
க்ளைட் குண்டுகள்: எளிய, அழிவுகரமான ஆயுதம்
2023-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் யுக்ரேனிய நிலைகள் மீது குண்டுவீசுவதற்கும், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதற்கும் ஆயிரக்கணக்கான “க்ளைட் குண்டுகளை” (Glide bombs) பயன்படுத்தியது.
அவை மடிக்கக்கூடிய இறக்கைகள் கொண்ட செயற்கைக்கோளால் வழிநடத்தப்படும் அமைப்புகளுடன் கூடிய வழக்கமான “ஃப்ரீ-ஃபால்” குண்டுகள் ஆகும்.
ரஷ்யா க்ளைட் குண்டுகளை அதிகம் பயன்படுத்துகிறது. அவற்றின் எடை 200 கிலோ முதல் 3,000 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
“க்ளைட் குண்டுகள் வலுவூட்டப்பட்ட நிலைகளை உடைப்பதிலும் கட்டடங்களை அழிப்பதிலும் திறம்பட செயல்படுகின்றன” என்று வான்வழிப் போர் நிபுணரான ஜஸ்டின் ப்ரோங்க் கூறுகிறார்.
பிப்ரவரி 2024 இல் கிழக்கு யுக்ரேனில் ரஷ்யா கைப்பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அட்விவ்கா நகரத்தைச் சுற்றியுள்ள யுக்ரேனிய பாதுகாப்பு நிலைகளை அழிக்க ரஷ்யா இதை அதிகளவில் பயன்படுத்தியது என்று அவர் மேலும் கூறினார்.
யுக்ரேன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் வழங்கும் நீண்ட தூரம் செல்லும் க்ளைட் குண்டுகளையும் பயன்படுத்துகிறது.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட சிறிய விட்டம் கொண்ட குண்டுகளுக்கு இறக்கைகளை இணைத்து அதன் சொந்த க்ளைட் குண்டுகளை உருவாக்குகிறது.
எவ்வாறாயினும் யுக்ரேனில் ரஷ்யாவை விட குறைவான க்ளைட் குண்டுகளே உள்ளன.
மின்னணு போர்முறை
முன்னெப்போதையும் விட ரஷ்யா-யுக்ரேன் போரில் மின்னணுப் போர்முறை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு பக்கத்திலும் ஆயிரக்கணக்கான படைகள் சிறப்புப் பிரிவுகளில் வேலை செய்கின்றனர். மறுபக்கத்தின் ட்ரோன்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்கவும், எதிரி ஏவுகணைகளை இலக்கில் இருந்து வீழ்த்தவும் முயற்சி செய்கின்றனர்.
ரஷ்யப் படைகள் Zhitel போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை 10 கிமீ சுற்றளவில் அனைத்து செயற்கைக்கோள் தகவல் தொடர்புகள், வானொலி தொடர்புகள் மற்றும் மொபைல் போன் சிக்னல்களை முடக்கும் திறன் கொண்டவை.
இது மின்காந்த ஆற்றலின் பெரும் துடிப்புகளை வெளியிடுவதன் மூலம் ரேடியோ அலைகளை முறியடிக்கிறது.
அதன் Shipovnic-Aero பிரிவின் மூலம், ரஷ்யப் படைகள் 10கிமீ தொலைவில் இருந்து ஒரு ட்ரோனை வீழ்த்த முடியும்.
இந்த அமைப்பு ட்ரோன் இயக்குபவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, பின்னர் பீரங்கி பிரிவுகளுக்கு தகவல்களை அனுப்ப முடியும்.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையில் பணிபுரியும் மெரினா மிரோன்,”யுக்ரேனில் உள்ள ஹிமார்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளை ரஷ்ய மின்னணு போர் அமைப்புகள் எவ்வளவு எளிதாக முடக்கியது என்பதை மேற்கத்திய நாடுகள் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும்.” என்கிறார்
“இது சமச்சீரற்ற போர்,” என்று அவர் கூறுகிறார்.
“நேட்டோ படைகள் ரஷ்யா வைத்திருப்பதை விட தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவற்றைச் செயலிழக்கச் செய்ய ஒப்பீட்டளவில் மலிவான எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்த முடியும் என்று ரஷ்யா காட்டியது.” என்றார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உள்ள ஃப்ரீமேன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏவியேஷன் அண்ட் ஸ்பேஸைச் சேர்ந்த டங்கன் மெக்ரோரி, ”யுக்ரேனில் ரஷ்யா தனது மின்னணுப் போர்முறையை நடத்தும் விதத்தில் இருந்து நேட்டோ நாடுகளில் உள்ள ராணுவத் தலைவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
“மின்னணுப் போர்முறையை இனி எளிதாகக் எடுத்துக் கொள்ள முடியாது. உங்களின் தந்திரங்கள், பயிற்சி மற்றும் புதிய ஆயுத அமைப்புகளை உருவாக்கும் போதெல்லாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.