மற்றுமொரு சொகுசு வாகனம் சிக்கியது தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விதாரந்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் ஒன்று மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விதரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (12) பிற்பகல் குறித்த வீட்டை சோதனை செய்த போதே வாகனம் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
தற்போதைய உரிமையாளரிடம் வாகனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்த எந்த ஆவணமும் இல்லை.
அதன் உரிமையாளராகக் கருதப்படும் எம்பிலிப்பிட்டிய பல்லேகமவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக மாத்தறை பொலிஸில் சரணடைந்தார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தற்போது குறித்த ஜீப் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற உள்ளதாகவும், இந்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் கண்டியில் உள்ள கார் விற்பனை நிலையமொன்றில் இருந்து இந்த ஜீப்பை வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.